2019 உலக கோப்பை தொடரின் முதல் மூன்று வார போட்டிகளில் பெரும்பாலானவை ஒரு அணிக்கு சாதகமாகவும் ஒரு சில போட்டிகள் சுவாரசியமானதாகவும் மற்ற சில போட்டிகள் மழையாலும் பாதிக்கப்பட்டு முடிந்தன. இருப்பினும், உலக கோப்பை கிரிக்கெட் போன்ற மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாக்களில் முக்கிய போட்டியாக கருதப்படும் இந்திய-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியும் இவ்வாரத்தின் முதல் நாளான இன்று தான் நடைபெற உள்ளது. எனவே, இந்த வாரத்தில் நடைபெற உள்ள மூன்று முக்கியமான போட்டிகளைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1.இந்தியா Vs பாகிஸ்தான், ஆட்டம் 22 - ஞாயிற்றுக்கிழமை:
உலக கோப்பை தொடர் தொடங்கியதிலிருந்தே ரசிகர்கள் பலரும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறும் இந்த போட்டி, இன்று இந்திய நேரப்படி பிற்பகல் மூன்று மணிக்கு துவங்க உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என பெருவாரியான கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும், இம்முறை உலக கோப்பை தொடரில் சாம்பியன் ஆகும் அணிகளில் ஒன்றாக இந்திய அணியும் கருதப்பட்டு வருகின்றது. அணியில் ஷிகர் தவான் காயம் ஏற்பட்டு விலகி உள்ளதால் அவருக்கு பதிலாக ராகுல் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டு மிடில் ஆர்டரில் விஜய்சங்கர் அல்லது தினேஷ் கார்த்தி ஆகியோரில் ஒருவர் ஆடும் லெவனில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற அனைத்து துறைகளிலும் இந்திய அணி சிறப்பான பங்களிப்பை ஆற்றி வருகிறது.
இந்திய அணியை போலவே பாகிஸ்தான் பலமான அணியாக தற்போது இல்லை. அணியின் அனைத்து தரப்புமே சற்று மோசமானதாக விளங்கி வருகின்றது. மிகப்பெரிய ஸ்கோரை பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் குவிக்க தடுமாறுகின்றனர். இதுவரை விளையாடியுள்ள போட்டிகளில் ஒரு சதம் கூட பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடிக்கப்படவில்லை என்பது சற்று பாகிஸ்தான் ரசிகர்களுக்கு கவலையளிக்கின்றது. முகமது அமீர் மற்றும் வகாப் ரியாஸ் ஆகியோரின் பந்துவீச்சு ஓரளவுக்கு எடுபட்டுவருகின்றது. பீல்டிங்கிலும் பாகிஸ்தான் அணி இன்னும் சற்று முன்னேற்றம் அடைய வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது. ஏகப்பட்ட கேட்ச்களை இந்த அணி தவறவிட்டு உள்ளதை கடந்த போட்டிகளில் நாம் கண்டுள்ளோம்.
இந்த போட்டியால் புள்ளிப் பட்டியலில் ஏற்படும் மாற்றங்கள்:
தற்போதைய புள்ளி பட்டியலில் இந்திய அணி மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்தியா விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடும் மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது. மிகப்பெரும் வித்தியாசத்தில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலிய அணியை பின்னுக்கு தள்ளி புள்ளி பட்டியலில் முதல் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இந்திய அணிக்கு அதிகம் உள்ளது. மற்றொரு முனையில், புள்ளிப் பட்டியலில் எட்டாம் இடம் வகிக்கும் பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி இரு தோல்விகள் மற்றும் ஒரு ஆட்டம் கைவிடப்பட்டதால் எட்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு எதிரான ஆட்டம் மிகவும் முக்கியமான ஒன்றாக பாகிஸ்தான் அணிக்கு உள்ளது. ஒருவேளை வெற்றி பெற்றால் ஐந்தாம் இடத்திற்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இந்த அணிக்கு உள்ளது.
#2.நியூசிலாந்து Vs தென்னாப்பிரிக்கா, ஆட்டம் 25 - புதன்கிழமை:
நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இந்த வாரத்தில் நடைபெறும் முக்கியமான போட்டிகளில் ஒன்றாகும். தொடரில் ஒரு முறை கூட தோல்வியை சந்திக்காத அணிகளில் ஒன்றாக நியூசிலாந்து விளங்கி வருகின்றது. இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகளில் எளிதில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து இந்திய அணிக்கு எதிரான போட்டியில் சற்று சிரமப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், மழை வந்து குறுக்கிட்டதால் அந்த ஆட்டம் கைவிடப்பட்டது.
மற்றொரு முனையில், தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருவதாலும் காயம் காரணமாக பல்வேறு வீரர்கள் பாதிக்கப்பட்டதாலும் தொடர்ந்து தடுமாறி வருகின்றது. இந்த அணியின் பெரும்பாலான வீரர்கள் பார்ம் இன்றி தவித்து வருகின்றனர். அணியின் முன்னணி பந்துவீச்சாளராக ஸ்டைல் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி இருந்த நேரத்தில் லுங்கி இங்கிடி காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் களம் புகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆட்டத்தின் முடிவால் புள்ளி பட்டியலில் ஏற்படும் மாற்றங்கள்:
நியூசிலாந்து அணி மூன்று வெற்றிகளுடன் தொடரின் புள்ளி பட்டியலில் இரண்டாமிடம் வகிக்கிறது. ஒருவேளை, இந்த போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் 9 புள்ளிகளுடன் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறும். இருப்பினும், தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் நான்கு ஆட்டங்களில் ஒரு வெற்றியை கூட பெறாமல் ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே, தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் தங்களது கூடுதல் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, டுபிளிசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி.
#3.நியூசிலாந்து Vs வெஸ்ட் இண்டீஸ், ஆட்டம் 29 - சனிக்கிழமை:
நியூஸிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது. போட்டிகளில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை எளிதில் உறுதி செய்யும் நியூசிலாந்து அணி. மற்றொரு முனையில், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டி வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் சற்று எடுபடாததால் வெஸ்ட் இண்டீஸ் அணி தோற்றுள்ளது. எனவே, கடந்த ஆட்டங்களில் செய்த தவறை திருத்திக் கொண்டு மீண்டும் தங்களது பலத்தினை அளித்து வெற்றியை உறுதி செய்யும் முனைப்பில் களமிறங்கவுள்ளது, வெஸ்ட் இண்டீஸ் அணி.
இந்த போட்டியின் முடிவு புள்ளிப் பட்டியலில் ஏற்படும் மாற்றங்கள்:
இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி 7 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஒருவேளை தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற்றால் தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் நிலைத்து நிற்கும். ஒருவேளை வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றால் ஏழு புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 4 அல்லது 5 ஆம் இடத்திற்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளின் வெற்றி தோல்வி விகிதப்படி புள்ளி பட்டியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழலாம்.