2019 உலகக் கோப்பை தொடரின் முதலாவது போட்டியில் முதல் ஓவரிலேயே பந்து வீசி விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்தார், இம்ரான் தாகிர். 2019 உலக கோப்பை தொடரின் முதல் போட்டியாக இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நேற்று லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது, இங்கிலாந்து அணி. மேலும், இந்த உலக கோப்பை தொடரை நடத்தும் அணியான இங்கிலாந்து தனது முதல் போட்டியிலேயே வாகை சூடியது.
தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டூபிளிசிஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி, இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய முற்பட்டது. ஆட்டத்தின் முதல் ஓவரை சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிரிடம் அளித்து அனைவரையும் ஆச்சரியம் அளித்தார், தென்ஆப்பிரிக்க கேப்டன் டூபிளிசிஸ். தனது கேப்டனின் நம்பிக்கைக்கு ஏற்ப முதல் ஓவரை சிறப்பாக வீசி ஜானி பேர்ஸ்டோவின் விக்கெட்டை கைப்பற்றினார், இம்ரான் தாகிர். தென்னாப்பிரிக்க கேப்டனின் இந்த அற்புதமான நகர்வு கிரிக்கெட் விமர்சகர்களிடையே கடும் பாராட்டைப் பெற்றது. உலகக்கோப்பை தொடரின் முதலாவது ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே விக்கெட்டை கைப்பற்றுவதும் ஒரு வகை உலக சாதனையாக அமைந்தது. உலக கோப்பை வரலாற்றில் முதல் ஓவரை வீசிய ஸ்பின்னரும் இவரே.
2019 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோ சுழற்பந்துவீச்சாளர் எதிராக தனது ஆதிக்கத்தை செலுத்த சற்று சிரமப்பட்டார். இந்த 2019 சீசனில் ஏழு முறை சுழல் பந்துவீச்சாளர்களிடம் தனது விக்கெட்டை இழந்து உள்ளார், ஜானி பேர்ஸ்டோ. அவற்றில் குறிப்பிடும் வகையில், ஐந்து முறை லெக் ஸ்பின்னர்களிடம் தமது விக்கெட்டை இழந்துள்ளார். இவர் விளையாடிய ஐபிஎல் போட்டிகளில் ஒரே ஒரு முறை மட்டுமே வேகப்பந்து வீச்சாளரிடம் தமது விக்கெட்டை பறிகொடுத்தார். இம்முறை ஐபிஎல் தொடரின் 10 போட்டிகளில் விளையாடிய ஜானி பேர்ஸ்டோ 445 ரன்களை குவித்திருந்தார். மேலும், இவரது ஸ்ட்ரைக் ரேட் 157 என்ற வகையில் பிரமாதமாக அமைந்திருந்தது.
நேற்றைய போட்டியில் தனது விக்கெட்டை முதல் ஓவரிலேயே இழந்திருந்தார், ஜானி பேர்ஸ்டோ. 50 ஓவர்களின் முடிவில் 311 ரன்களை குவித்திருந்தது இங்கிலாந்து. ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்சின் அபார ஆல்-ரவுண்ட் ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்க அணி 207 ரன்களுக்கு தமது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து அணியிடம் சரணடைந்தது. தென் ஆப்பிரிக்க அணியின் டேல் ஸ்டெயின் இன்னும் தனது உடல் தகுதியை நிரூபிக்காத காரணத்தால் நேற்றைய போட்டியில் அவர் இடம்பெறவில்லை. அடுத்த போட்டியிலேயே அவர் களத்திற்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அவர் விரைவிலேயே தென் ஆப்பிரிக்க அணியில் இனைந்தால் அந்த அணியின் வேகப்பந்து கூட்டணி மேலும் வலுப்பெறும். நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த தென் ஆப்பிரிக்க அணி அடுத்த மாதம் இரண்டாம் தேதி வங்கதேச அணியை இதே மைதானத்தில் எதிர்கொள்ள இருக்கிறது.