2003ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர், தனது ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை ஏற்படுத்தினார். அந்த தொடரின் அபாயகரமான பந்துவீச்சாளராக விளங்கிய சோயப் அக்தரின் பந்துவீச்சில் லாகவமாக ஸ்கொயர் திசையில் ஷாட்களை அடித்து அவ்வப்போது மெய்சிலிர்க்க வைத்தார். அந்த தொடரில் இந்திய அணியை சவுரவ் கங்குலி வழிநடத்தினார். இருப்பினும், தொடரின் சிறந்த பேட்ஸ்மேனாக அறியப்பட்ட சச்சின் டெண்டுல்கர், 11 போட்டிகளில் விளையாடி 673 ரன்கள் குவித்தார். இதுநாள்வரையிலும் ஒரு உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை தன்வசம் வைத்துள்ளார், சச்சின் டெண்டுல்கர். இவருக்கு அடுத்தபடியாக 2007ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் 659 ரன்களை குவித்து இரண்டாம் இடத்தில் உள்ளார். இருப்பினும், நடப்பு உலகக் கோப்பை தொடரில் பேட்ஸ்மேன்கள் தாக்கம் சற்று கூடுதலாக உள்ளமையால், இந்த பதினாறு ஆண்டுகால சாதனையை முறியடிக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த சாதனையை முறியடிக்கும் வாய்ப்புள்ள 5 வீரர்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1.ரோகித் சர்மா:
தனது தொடர்ச்சியான ஆட்டத்திறனல் இந்திய அணியை அடுத்த சுற்றை நோக்கி பயணிக்க செய்து கொண்டிருக்கிறார், தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா. இவர் இதுவரை விளையாடியுள்ள 8 லீக் போட்டிகளில் 4 சதங்கள் உட்பட மொத்தம் 544 ரன்களை குவித்து அசத்தி வருகிறார். ஒரு உலக கோப்பை தொடரில் 4 சதங்களை அடித்ததன் மூலம் குமார் சங்கக்காராவின் சாதனையை சமன் செய்துள்ளார், ரோகித் சர்மா. அதுமட்டுமில்லாமல் 2003ம் ஆண்டு சவுரவ் கங்குலியால் படைக்கப்பட்ட மூன்று சதங்களை முறியடித்து இந்திய தரப்பில் முதலிடம் பெற்றுள்ளார். எனவே, இன்னும் இரு போட்டிகளில் இந்தியா நிச்சயம் விளையாட உள்ளமையால் 673 என்ற சச்சினின் சாதனையை இவர் முறியடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
#2.ஷகிப் அல்-ஹசன்:
உலகக்கோப்பை தொடரில் தனது ஆல்ரவுண்டு திறமையால் தொடரின் 'சிறந்த ஆல்ரவுண்டர்" என்ற பெருமையை பெற்றுள்ளார் ஷகிப். நடப்பு தொடரில் 542 ரன்களையும் 11 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளதன் மூலம் ஒரு உலக கோப்பை தொடரில் 500க்கும் மேற்பட்ட ரன்களையும் 10+ விக்கெட்களை கைப்பற்றிய முதல் மற்றும் ஒரே வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதற்கு முன்பாக 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் நியூசிலாந்தைச் சேர்ந்த ஸ்க்காட் ஸ்டரி குவித்த 499 ரன்களையும் 9 விக்கெட்டுகளையும் கைப்பற்றியதே சாதனையாக இருந்தது. பேட்டிங்கில் 4 அரைசதங்கள் இரு சதங்கள் என களத்தின் நங்கூரமிட்டது போல் செயல்பட்டு எதிரணியை மிரட்டியுள்ளார், சகிப். பாகிஸ்தான் அணிக்கு எதிரான தங்களது கடைசி லீக் போட்டியில் விளையாட உள்ள இவர் 131 ரன்களை குவித்தால் மட்டுமே இத்தகைய சாதனையை முறியடிக்க கூடும்.
#3.டேவிட் வார்னர்:
ஓராண்டுக்கு பின்னர் மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கு திரும்பிய டேவிட் வார்னர், அதிரடியான திருப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். இதுவரை விளையாடியுள்ள போட்டிகளில் 516 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றிகளுக்கு முதுகெலும்பாய் திகழ்ந்து வருகிறார். அதுமட்டுமல்லாது ரிக்கி பாண்டிங், மேத்யூ ஹைடன் ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது ஆஸ்திரேலிய வீரர் ஆக ஒரு உலக கோப்பை தொடரில் 500க்கு மேற்பட்ட ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார், டேவிட் வார்னர். இன்னும் 150 ரன்களை இவர் கடந்தால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க வாய்ப்புகள் உள்ளன.
#4.ஆரோன் ஃபின்ச்:
2019 உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தி வரும் ஆரோன் பின்ச், அணியின் பேட்டிங் வரிசையில் இன்றியமையாத வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். இங்கிலாந்து மைதானங்களில் தமக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி அபாரமாக ரன்களை குவித்து வருகிறார். மேலும், நடப்பு உலகக் கோப்பை தொடரில் 504 ரன்களை குவித்துள்ள இவர், இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 153 ரன்கள் குவித்ததன் மூலம் ஒரு உலக கோப்பை போட்டியில் 150க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த முதலாவது ஆஸ்திரேலிய கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார். இதுமட்டுமல்லாது, ஆரோன் பின்ச் - டேவிட் வார்னர் இணை தொடர்ச்சியாக 5 போட்டிகளில் 50க்கும் மேற்பட்ட ரன்களை தங்களது பார்ட்னர்ஷிப்பில் குவித்துள்ளனர்.
#5.ஜோ ரூட்:
நடப்பு உலகக் கோப்பை தொடரை நடத்தும் அணியான இங்கிலாந்து அணியில் பேட்டிங் சூரர்கள் நிறைந்து காணப்படுகிறார்கள். ஜானி பேர்ஸ்டோ, ஜேசன் ராய், இயான் மோர்கன், ஜோஸ் பட்லர், மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோருடன் இணைந்து தமது பாணியை திறம்பட செய்து வருகிறார், ஜோ ரூட். பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் தனது முதலாவது உலகக் கோப்பை சதத்தை பூர்த்தி செய்தார். அதேபோல் ,ஒரு உலக கோப்பை தொடரில் இரு சதங்களை அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். கூடுதலாக நடப்பு உலகக் கோப்பை தொடரில் 500க்கும் மேற்பட்ட ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். எனவே, அரையிறுதிக்கு முன்னேறி உள்ள இங்கிலாந்து அணியின் பேட்டிங் தூணாக செயல்படும் இவர், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்கும் வீரர்களில் ஒருவராக காணப்படுகிறார்.