2019 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற பல்வேறு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. உலக கோப்பை தொடர் துவங்குவதற்கு பல நாட்கள் முன்பே, ஒவ்வொரு அணி நிர்வாகமும் தங்களது வீரர்களை கொண்டு வலிமையான அணியை கட்டமைக்க போதிய முயற்சிகளை மேற்கொண்டனர். துரதிஸ்டவசமாக, உலக கோப்பை தொடருக்கான இறுதிப் பட்டியலை வெளியிடும் நேரத்தில் அணி முக்கிய வீரர்கள் காயமடைந்து தொடரில் இருந்து வெளியேறினர். தொடர் துவங்கிய பின்பும் சில வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு தொடர்ந்து விளையாட நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, இது போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் உலக கோப்பை போன்ற மிகப்பெரிய தொடர்களில் ஏற்பட்டால் அந்த அணிக்கு சற்று பின்னடைவு தான். 2019 உலக கோப்பை தொடரில் இதுவரை காயத்தால் அவதிப்பட்டு வெளியேறிய வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#5.ஆன்ரிச் நார்ச்சே:
இலங்கை அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக அறிமுகம் கண்டு அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார், ஆன்ரிச் நார்ச்சே. அந்த தொடரில் நான்கு ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று 8 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இதன் காரணமாக, உலக கோப்பை தொடருக்கான தென்னாபிரிக்க அணியில் இவர் இடம் பெற்றார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இருப்பினும், தொடங்குவதற்கு முன்பே காயம் ஏற்பட்டு தொடரில் இருந்து விலகினார். இதன் காரணமாக, உலக கோப்பை தொடரிலும் இவர் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது, தென் ஆப்பிரிக்க அணியில் அவருக்கு பதிலாக கிறிஸ் மோரிஸ் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டு விளையாடி வருகிறார்.
#4.ஜெய் ரிச்சர்ட்ஸன்:
தொடர்ந்து காயங்களால் அவதிப்பட்டு அணியிலிருந்து வெளியேறும் வரும் அதிர்ஷ்டமில்லாத வீரராக உள்ளார், ரிச்சர்ட்ஸன். உலக கோப்பை தொடர் துவங்குவதற்கு முன்பு பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் விளையாடிய போது ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டார். ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான தொடரில் கூட இவரது பங்களிப்பு அபாரமாய் இருந்தது. தற்போது உலக கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இவருக்கு பதிலாக கணே ரிச்சர்ட்சன் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
#3.முகமது சேஷாத்:
2019 உலகக்கோப்பை தொடரின் முதல் இரு ஆட்டங்களில் விளையாடி ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான முகம்மது சேஷாத் முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார். இருப்பினும், தனக்கு எவ்வித காயமும் ஏற்படாத நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தன்னை வேண்டுமென்றே அணியிலிருந்து நீங்கியதாகவும் தான் தற்போது போதிய உடற் தகுதியில் உள்ளதாகவும் இவர் அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
#2.டேல் ஸ்டெயின்:
2019 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதை தனது கனவாக கொண்டிருக்கும் டேல் ஸ்டெயின், 2019 ஐபிஎல் போட்டிகளில் ஏற்பட்ட தோள்பட்டை காயம் காரணமாக தொடரில் இருந்தே விலகினார். இருப்பினும், சற்றுத் தேறி வந்த ஸ்டெயின் உலக கோப்பை தொடருக்கான தென்ஆப்பிரிக்க அணியில் இணைந்த நிலையில், திடீரென தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. இவரது இழப்பு தென் ஆப்பிரிக்க அணிக்கு மிகவும் பின்னடைவாக அமைந்துள்ளது. இதனால், பந்துவீச்சு தரப்பில் போதிய முன்னேற்றம் அடையாமல் அந்த அணி திண்டாடி வருகிறது.
#1.ஷிகர் தவான்:
உலக கோப்பை போன்ற ஐசிசி நடத்தும் தொடர்களில் சிறப்பாக செயல்படும் வீரர்களில் ஒருவர், ஷிகர் தவான். இங்கிலாந்தில் நடந்த 2013 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் அதிக ரன்களைக் குவித்த வீரர் என்ற பெருமையை கொண்டுள்ளார். உலக கோப்பை தொடர் இம்முறை இங்கிலாந்தில் நடைபெறுவதால் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய ஷிகர் தவான், தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் ஓரளவுக்கு செயல்பட்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் அற்புதமாக சதம் அடித்தார். அதே போட்டியில் விளையாடி கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக தனது கட்டைவிரலில் காயத்தை ஏற்படுத்திக் கொண்டார். இதனால், அணியில் இருந்து 2 முதல் 3 வாரங்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று கூறி வந்த நிலையில், நேற்று தொடரில் இருந்து வெளியேறுவதாக வருவதாக அறிவிக்கப்பட்டது.