உலக கோப்பையில் இதுவரையிலான போட்டிகளில் ராகுலின் ஆட்டம் எப்படியிருந்தது – ஒரு பார்வை

KL Rahul
KL Rahul

நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் தொடக்க பேட்ஸ்மேன் கே.எல் ராகுல் ரன் அடிக்க முடியாமல் திணறுவதை நாம் கண்கூடாக பார்த்தோம். பெரிய இலக்கை துரத்தும் போது சிறப்பான தொடக்கம் அவசியம் என்பதை மறந்து, ஒன்பது பந்துகளை சந்தித்து ரன் ஏதும் அடிக்காமல் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார் ராகுல். சிறந்த பேட்ஸ்மேனான இவர் ஏன் இப்படி தடுமாறுகிறார்? தனது வழக்கமான ஆட்டத்தை ஆடாமல் ஏன் அதிக தற்காப்பு மனநிலையில் ஆடுகிறார்?

இந்திய அணிக்காக ஒரு சில போட்டிகளே விளையாடி இருந்தாலும், தனது சிறப்பான ஆட்டத்தால் நம்பிக்கை அளித்து வந்தார் இளம் பேட்ஸ்மேன் கே.எல் ராகுல். களத்தில் நிலைத்து நின்று விட்டால், உலகின் எந்த ஒரு சிறந்த வீரருக்கும் சளைத்தவர் அல்ல ராகுல். அவரது பேட்டிங் ஷாட்களே இதற்கு உதாரணம். இந்த திறமைக்காக தான் உலக கோப்பை அணியில் மாற்று தொடக்க ஆட்டக்காரராக இடம் பிடித்தார் ராகுல். மேலும் உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசத்திற்கு எதிராக சதம் அடித்த காரணத்தினால், நான்காவது இடத்திற்கு எந்த வீரர் இறங்கப் போகிறார் என்ற நீண்ட நாளாக இருந்த குழப்பத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் ராகுல்.

முதல் போட்டியில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக ஓரளவிற்கு சிறப்பாகவே விளையாடினார் ராகுல். 15.3 ஓவர்களில் 54 ரன்னுக்கு இரு விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இந்திய அணி இருந்த போது, ரோகித் ஷர்மாவோடு 84 ரன்கள் பாட்னர்ஷிப்பில் ஈடுபட்டார். இந்த பாட்னர்ஷிப்பில் ராகுலின் பங்கு வெறும் 26 ரன் மட்டுமே என்றாலும், விக்கெட் ஏதும் விழாமல் பார்த்துக் கொண்டார். ஆஸ்திரேலியோவோடு கடைசி நேரத்தில் இறங்கி மூன்று பந்துகளில் 11 ரன் அடித்தார்.

முதல் இரண்டு போட்டிகளில் ஓரளவிற்கு சிறப்பாக விளையாடியதால், நான்காவது இடத்திற்கான பிரச்சனை தீர்ந்துவிட்டது என இந்திய அணி நிர்வாகமும் ரசிகர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்கும் வேளையில் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டார் தொடக்க பேட்ஸ்மேன் ஷிகர் தவான்.

KL Rahul out against WestIndies
KL Rahul out against WestIndies

அடுத்த போட்டி பாகிஸ்தானுக்கு எதிராக என்பதால் யாரை தொடக்க பேட்ஸ்மேனாக இறக்குவது என யோசித்தது இந்திய அணி. ராகுல் மீது நம்பிக்கை வைத்து அவரை ரோகித் ஷர்மாவோடு களம் இறக்கினர். எப்போதும் தாக்குதலை ஆட்டத்தை கையாளும் ராகுல், இந்தப் போட்டியில் மிகவும் நிதானமாக விளையாடி 78 பந்துகளில் 51 ரன் அடித்தார். இதில் 43 பந்துகள் டாட் பால்கள் வேறு. நன்றாக செட்டில் ஆன சமயத்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த போட்டியிலும் ஆஃப்கானிஸ்தன் அணிக்கு எதிராக நன்றாக விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் தேவையில்லாத ஷாட்களை ஆடி அவுட்டானார்.

தொடக்க பேட்ஸ்மேன் நிலைத்து நின்று பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டிய வேளையில், கிடைத்த வாய்புகளை எல்லாம் வீணாக்கினார் ராகுல். குறிப்பாக ஆஃப்கானிஸ்தானிற்கு எதிராக தான் சந்தித்த 53 பந்துகளில் 31 பந்துகளில் எந்த ரன்னையும் ராகுல் அடிக்கவில்லை. தொடக்க பேட்ஸ்மேனுக்கு இது அழகல்ல.

வேகப்பந்து மற்றும் சுழற்பந்தை அவர் கையாண்ட விதம்:

வேகப் பந்துவீச்சு

இந்த உலக கோப்பையில் இதுவரை ஐந்து முறை அவுட்டாகியுள்ள ராகுல், அதில் நான்கு முறை வேகப் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறி கொடுத்துள்ளார். மொத்தமாக 151 பந்துகளை சந்தித்து, 85 ரன்கள் மட்டுமே அடித்து 60 என்ற மிக குறைவான ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ளார் ராகுல். இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், இதில் 101 பந்துகள் டாட் பால்கள்.

போட்டியின் தொடக்கத்தில் வேகப் பந்துவீச்சை சமாளிப்பது கடினம் தான். இது அனைவருக்கு தெரிந்த விஷயமே. கொஞ்சம் நிதானமாக விளையாடுவது கூட நல்லது தான். அதற்காக இப்படியா மெதுவாக ஆடுவது? தொடக்க பேட்ஸ்மேன்கள் மெதுவாக விளையாடியதால் கடைசியில் இந்திய அணிக்கு என்ன நேர்ந்தது என நேற்றைய போட்டியில் பார்த்தோம். இனியாவது இந்த தவறை திருத்திக்கொள்வாரா ராகுல்?

KL Rahul
KL Rahul

சுழற்பந்துவீச்சு

ஒரே ஒரு முறை மட்டுமே சுழற்பந்துவீச்சில் அவுட்டாகியுள்ளார், அதுவும் ஆஃப்கானிஸ்தானிற்கு எதிராக. இதுவரை ஸ்பின்னர்களை சிறப்பாக விளையாடி இருந்தாலும் இன்னும் ராகுலின் ஆட்டம் மேம்பட வேண்டும். சுழற்பந்துவீச்சில் 98 பந்துகளை சந்தித்து 87 ரன்கள் அடித்துள்ளார். இதில் 42 டாட் பால்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். வேகப் பந்துவீச்சை ஒப்பிடும் போது இது குறைவு தான்.

இனி வரும் போட்டிகளிலும் ராகுலே ஓபனிங் இறங்குவார் என தெரிகிறது. அடுத்து வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளையே சந்திக்கவுள்ளது இந்தியா. ஒப்பீட்டளவில் இந்த இரு அணிகளும் நம்மை விட பலம் குறைந்தவையே. இந்தப் போட்டிகளில் மிகப் பெரிய ஸ்கோரை ராகுல் அடிக்க வேண்டியது கட்டாயமாகும். அப்போது தான் அரையிறுதி போட்டியை நேர்மறையான மன்நிலையில் சந்திக்கலாம். பொறுப்பை உணர்ந்து விக்கெட்டை எளிதாக கொடுக்காமல் தனது வழக்கமான ஆட்டத்தை விளையாடினாலே ராகுலால் மிகப்பெரிய ஸ்கோரை அடிக்க முடியும். அதை செய்வாரா?

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now