நடந்தது என்ன?
தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தான் முழு உடற் தகுதி பெற்று விட்டதாகவும் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணியில் இனைய உள்ளதாகவும் தெரிவித்தார்.
உங்களுக்கு தெரியுமா...
வங்கதேசத்திற்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் லுங்கி நிகிடிக்கு தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக 10 ஓவர் முழுவதும் வீசாமல் வெளியேறினார்.
கதைக்கரு
உலகக்கோப்பை தொடரில் தடுமாறி வரும் தென்னாப்பிரிக்க அணியில் 28 வயதான வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடியின் வருகையின் மூலம் கண்டிப்பாக இனிவரும் போட்டிகளில் எவ்வித நெருக்கடியையும் சந்திக்காமல் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை லுங்கி நிகிடி உறுதி செய்தார்.
ஊடகங்களுக்கு பதிலளித்தபோது லுங்கி நிகிடி தெரிவித்துள்ளதாவது,
"இது ஒரு கஷ்டமான காலமாகும். விளையாட்டில் காயம் என்பது மிகவும் மோசமானதாகும். ஆனால் அணியின் மருத்துவக்குழு மூலம் தற்போது நன்றாகவும், முழு உடற்தகுதியுடனும் உள்ளேன். உலகக்கோப்பையில் ஏற்பட்ட காயம் எனக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இன்று நான் என்னுடைய உடற்தகுதி தேர்வை முடித்தேன் மற்றும் அதில் தேர்ச்சியும் பெற்றேன். எனவே நான் உலகக்கோப்பை போட்டியில் விளையாட முழு உடற்தகுதியுடன் உள்ளேன். இதனை 100 சதவீதம் உறுதியாக கூறுகிறேன். உடற்தகுதி தேர்வு எவ்வாறு நடந்ததெனில், 100 சதவீதம் சரியாக பந்துவீச வேண்டும், அவ்வாறு இல்லையெனில் நீங்கள் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட தகுதியற்றவர்கள்.
அத்துடன் நியூசிலாந்தின் சோதிக்கப்படாத மிடில் ஆர்டர் தென்னாப்பிரிக்க பந்துவீச்சில் எவ்வாறு இருக்கும் என்பது குறித்தும் லுங்கி நிகிடி கருத்து தெரிவித்துள்ளார்,
"அவர்களின் நடுத்தர மற்றும் கீழ் வரிசை போதுமான அளவு சோதிக்கப்பட்டதாக நான் நினைக்கவில்லை. அவர்கள் ரன்களின் பெரும்பகுதியை தொடக்கத்திலே பெற்றுள்ளனர். எனவே தொடக்க விக்கெட்டுகளை வீழ்த்தினால்தான் நான் நியூசிலாந்து மிடில் ஆர்டரை சோதிக்க இயலும். நான் நியூசிலாந்து பேட்டிங் வரிசையை வேறு கோணத்தில் பார்கிறேன்."
இதுவரை 4 உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ள தென்னாப்பிரிக்க அணி 3 தோல்விகளும் 1 வெற்றியையும் பெற்றுள்ளது. இதற்கிடையில் ஒரு போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டது. லுங்கி நிகடி மீண்டும் அணிக்கு திரும்பியதன் மூலம் தென்னாப்பிரிக்கா அதிக வலிமையை பெற்றுள்ளது.
அடுத்தது என்ன?
தென்னாப்பிரிக்க அணியில் மிடில் ஆர்டர் கவலை அளிக்கும் விதத்தில் விளையாடி வரும் நிலையில் இனிவரும் போட்டிகளிலாவது பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டாப் ஆர்டரில் சொதப்பி வரும் அனுபவ பேட்ஸ்மேன் ஹாசிம் அம்லா உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்க அணியின் தற்போதைய சூழ்நிலையை மனதில் கொண்டு இனிவரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார் என தெரிகிறது.
தென்னாப்பிரிக்க அணியுடன் நியூசிலாந்தை ஒப்பிடும்போது தென்னாப்பிரிக்க அணி மிகுந்த வலிமை வாய்ந்த அணியாக திகழ்கிறது. ஜீன் 19 அன்று பீர்மிகாமில் இரு அணிகளும் மோத உள்ளன. தற்போது உள்ள சூழ்நிலையில் தென்னாப்பிரிக்காவிற்கு இந்த இரு புள்ளிகள் மிகவும் அவசியமாகும். எனவே அணியில் உள்ள அனைவரது பங்களிப்பின் மூலமாக தென்னாப்பிரிக்கா இப்போட்டியில் இரு புள்ளிகள் பெறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
