உலகக் கோப்பை தொடரில் "தொடர் நாயகன்" விருதை வெல்வது ஒவ்வொரு சர்வதேச கிரிக்கெட் வீரரின் கனவாகும். சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், மிட்செல் ஸ்டார்க் என பல முன்னணி வீரர்கள் இந்தப் பெருமை வாய்ந்த விருதினை வென்று வரலாறு படைத்துள்ளனர். எனவே, 2019 உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை வெல்ல வாய்ப்புள்ள 4 வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1.ஆரோன் பின்ச் - ஆஸ்திரேலியா:
இதுவரை விளையாடிய ஆட்டங்கள் - 5
குவிக்கப்பட்ட ரன்கள் - 343
அதிகபட்ச ரன்கள் - 153
தற்போதைய ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் பின்ச், நடப்பு தொடரில் அற்புதமாக செயல்பட்டு வருகிறார். மேலும், இரண்டு போட்டிகளில் அற்புதமாக விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 82 ரன்கள் குவித்து 300-க்கும் மேற்பட்ட ஸ்கோரை ஆஸ்திரேலியா அணி அடிக்க உதவியதோடு அணியை வெற்றி பெறவும் செய்தார். அதேபோல், இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் 153 ரன்கள் குவித்து தொடரின் அதிகபட்ச ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். எனவே, இம்முறை தொடர் நாயகன் விருதை வெல்ல வாய்ப்புள்ள வீரர்களில் இவரும் ஒருவராக திகழ்கிறார்.
#2.ரோகித் சர்மா - இந்தியா:
இதுவரை விளையாடிய ஆட்டங்கள் - 3
குவிக்கப்பட்ட ரன்கள் 319
அதிகபட்ச ரன்கள் - 140
2019 உலக கோப்பை தொடரில் இந்திய அணி முழுமையாக 3 போட்டிகளில் விளையாடியுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டது. அந்த 3 போட்டிகளில் குறிப்பிடும் வகையில், இரு சதங்களும் ஒரு அரை சதமும் குவித்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபித்து காட்டியுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அட்டகாசமாக விளையாடி துரதிஷ்டவசமாக 150 ரன்கள் என்ற இலக்கை அடையாமல் ஆட்டமிழந்தார். இருப்பினும், அந்த போட்டியில் இந்திய அணி வெல்வதற்கு இவரும் ஒரு காரணமாய் அமைந்தார். எனவே, உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற மூன்றாவது இந்தியர் என்ற சாதனையை படைப்பார் என ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
#3.ஜோ ரூட் - இங்கிலாந்து:
இதுவரை விளையாடிய ஆட்டங்கள் - 4
குவிக்கப்பட்ட ரன்கள் - 279
அதிகபட்ச ரன்கள் - 107
கைப்பற்றிய விக்கெட்டுகள் - 2
இந்தப் பட்டியலில் டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் மற்றும் ஜேசன் ராய் உள்ளிட்ட வீரர்களை பின்னுக்கு தள்ளி முன்னிலையில் உள்ளார், ஜோ ரூட். இம்முறை உலகக் கோப்பை தொடரில் தமது ஆல்-ரவுண்ட் திறமையை நிரூபித்த வண்ணம் உள்ளார். கடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சில் இரு விக்கெட்களை கைப்பற்றி பேட்டிங்கில் சதமும் அடித்து தனது ஆல்ரவுண்டு திறமையை வெளிப்படுத்தி அணியை வெற்றி பெறச் செய்தார். இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 279 ரன்களையும் இரு விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளார். இது மட்டுமல்லாது பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் சதம் அடித்துள்ளார். எனவே, தொடர் நாயகன் விருதை வென்ற முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைக்கும் முனைப்பில் உள்ளார், ஜோ ரூட்.
#4.ஷாகிப் அல் ஹசன் - வங்கதேசம்:
இதுவரை விளையாடிய ஆட்டங்கள் - 4
குவிக்கப்பட்ட ரன்கள் - 384
கைப்பற்றிய விக்கெட்டுகள் - 5
மேற்கண்ட வீரர்கள் மட்டுமல்லாது, வங்கதேசஅணியின் ஆல்-ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் எதிர்பாராதவிதமாக இந்த தொடர் நாயகன் விருதை வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால், இவர் விளையாடியுள்ள ஐந்து போட்டிகளில் இரு சதங்கள் உட்பட 384 ரன்களையும் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரரும் இவரே. எனவே, உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற முதல் வங்கதேச வீரர் என்ற சாதனையை படைக்கும் முனைப்பில் உள்ளார், ஷகிப் அல் ஹசன்.