2019 உலகக் கோப்பை தொடர் மே 30 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் தங்களது தகுதிச் சுற்றின் முதல் போட்டியில் விளையாடி வருகிறது. இந்திய அணி தனது உலகக் கோப்பை தகுதிச் சுற்றை கடைசியாக ஜீன் 5 அன்று தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள இருக்கிறது. இந்திய அணிதான் கடைசி அணியாக தனது முதல் தகுதிச் சுற்றை விளையாட உள்ளது. தென்னாப்பிரிக்க அணி 7 நாட்களில் 3 அணிகளை தகுதிச் சுற்றில் எதிர்கொண்டு அனுபவ அணியாக உள்ளது. எனவே இந்திய அணி அதிக பயிற்சியுடன் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளும்.
இந்திய அணியின் பேட்டிங் வரிசையை பார்க்கும் போது, பெரிதும் விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்ட இந்திய நம்பர்-4 பேட்டிங் வரிசை தற்போது தீர்வு கிடைத்துள்ளது. வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் கே.எல்.ராகுல் நான்காவது பேட்ஸ்மேனாக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். விஜய் சங்கர் அந்த போட்டியில் அளிக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவில்லை. எனவே தொடக்க ஆட்டத்தில் விஜய் சங்கர் ஆடும் XI-ல் இடம்பெறுவது சந்தேகம் தான்.
அணியின் மற்ற காரணிகளாக பார்க்கும் போது, இங்கிலாந்து மைதானங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக சாதகத்தை அளிக்காது. எனவே இந்திய அணியின் இரு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெறுவது சற்று கடினம். எனவே ஏதேனும் ஒரு சுழற்பந்து வீச்சாளருடன், ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை அணியில் சேர்க்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த முடிவை இந்திய அணி நிர்வாகம் தைரியமாக எடுக்க வாய்ப்புண்டு.
ஜடேஜாவை இந்திய ஆடும் XI-ல் இனைப்பது இந்திய அணியின் துணிச்சலான முடிவு
ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை சவுத்தாம்டனில் நடைபெறவுள்ள இந்தியாவின் முதல் உலகக்கோப்பை போட்டியில் ஆடும் XI-ல் விளையாட வைக்க இந்திய கிரிக்கெட் நிர்வாகம் முயற்சி செய்யும். இவருடைய சிறப்பான ஆட்டத்திறன் நியூசிலாந்திற்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் அரைசதத்துடன் வெளிபட்டது. அத்துடன் நம்பர்-8 பேட்ஸ்மேனாக களமிறங்கி ஜடேஜா வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டம் அனைவரையும் வெகுவாகவே கவர்ந்துள்ளது.
கடந்த காலங்களிலும் இவரது பேட்டிங் இந்திய அணிக்கு அதிக இடங்களில் கை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் டெய்ல் என்டர்ஸ் எனப்படும் இறுதி கட்ட பேட்டிங் மோசமாக இருந்தது. தற்போது 30 வயதான ஜடேஜா அந்த இடத்தை நிரப்பி இந்திய அணியின் டெய்ல் என்டர்ஸ் பேட்டிங்கின் குறையையும் நீக்கியுள்ளார்.
தற்போது சிறந்த இந்திய ஃபீல்டர்களின் வரிசையில் முன்னணியில் திகழும் ஜடேஜா, கடந்த இரு ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் ரன் அவுட் மற்றும் கேட்சுகளை சிறப்பான முறையில் பிடித்து ஆட்டத்தின் போக்கை மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்குறிப்பிட்ட ஆட்டத்திறனுடன் ஜடேஜா பௌலிங்கிலும் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டுள்ளார். இவரது ஆரம்ப ஓவர்கள் மிகவும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்பதால் 7-8 ஓவர்களை கேப்டன் விராட் கோலி இவருக்கு அளிப்பார்.
இந்திய கேப்டன் விராட் கோலி மிடில் ஓவரில் விக்கெட்டுகளை வீழ்த்த குல்தீப்-சகாலை எடுத்துச் செல்வாரா அல்லது ஆல்-ரவுண்டர் திறனின் மூலம் கடைநிலையில் அதிக ரன்களை குவிக்க ஜடேஜாவை எடுத்துச் செல்வாரா என்பதைக் காண மிகவும் ஆவலாக இந்திய ரசிகர்கள் உள்ளனர்.