2019 உலகக்கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ரசிகர்களின் எதிர்பார்பை அதிகமாகவே பூர்த்தி செய்யும் வகையில் இருந்தது. இந்திய அணி உலகக் கோப்பையில் மீண்டுமொருமுறை பாகிஸ்தானிற்கு எதிராக வென்று வரலாற்றை தொடர்ந்து நீட்டித்துள்ளது. பாகிஸ்தான் கேப்டன் சஃப்ரஸ் அகமது டாஸ் வென்று மேகமூட்ட காலநிலையில் பௌலிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சை நொருக்கித் தள்ளினர். ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி 140 ரன்களை குவித்தார். அத்துடன் இந்திய அணியின் ரன்கள் 300+ ஆக உயர மிக முக்கிய காரணமாக இருந்தார்.
337 என்ற கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடியது. ஆனால் மிடில் ஓவரில் குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரது பந்துவீச்சால் தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறியது பாகிஸ்தான். மழை இடையில் குறுக்கிட்ட காரணத்தால் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனால் பாகிஸ்தானிற்கு இலக்காக 301 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. பாகிஸ்தானிடம் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகள் வீழ்ந்த காரணத்தால் இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்திற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.
நாம் இங்கு ரோகித் சர்மாவின் சிறப்பான ஆட்டத்தின் போது முறியடிக்கப்பட்ட சாதனைகளை பற்றி காண்போம்.
இந்திய-பாகிஸ்தான் போட்டியில் ரோகித் சர்மாவால் முறியடிக்கப்பட்ட சாதனை பட்டியல்:
1. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தானிற்கு எதிராக தொடர்ந்து இரு சதங்களை குவித்த ஒரே வீரர் ரோகித் சர்மா. இவர் கடைசியாக பாகிஸ்தானினிற்கு எதிராக துபாயில் நடந்த ஆசியக்கோப்பையில் சதம் குவித்தார்.
2. இங்கிலாந்தில் அதிக ஓடிஐ சதங்களை விளாசிய ஷீகார் தவானின் சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார். இரு இந்திய தொடக்க ஆட்டக்காரர்களும் 4 சதங்களை இங்கிலாந்து மண்ணில் விளாசியுள்ளனர்.
3. இந்தியா-பாகிஸ்தான் மோதிய போட்டிகளில் தனிநபர் ஒருவரின் அதிகபட்ச ரன்களை ரோகித் சர்மா குவித்துள்ளார். ரோகித் மான்செஸ்டரில் நடந்த போட்டியில் 140 ரன்களை குவித்து விராட் கோலி 2015ல் அடிலெய்டில் நடந்த போட்டியில் 107 ரன்களை அடித்த சாதனையை முறியடித்துள்ளார். மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானின் சையத் அன்வர் உள்ளார். இவர் 2003ல் சென்சூரியனில் நடந்த இந்திய-பாகிஸ்தான் போட்டியில் 101 ரன்களை அடித்துள்ளார்.
4. ரோகித் சர்மா ஓல்ட் டெஃபோர்ட் மைதானத்தில் 3 மிகப்பெரிய சிக்ஸர்களை விளாசினார். இதன் மூலம் இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் போட்டிகளில் அதிக சிகஸர்களை விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றார். இவர் சவ்ரவ் கங்குலியின் 17 சிக்ஸர்களை முறியடித்துள்ளார்.
5. இது ரோகித் சர்மாவின் 5வது சீரான 50+ ரன்களாகும். ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 5 சீரான 50+ ரன்களை அடித்த இந்திய வீரர்களான சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விராட் கோலி, அஜீன்க்யா ரகானே ஆகியோரது பட்டியலில் ரோகித் சர்மா தற்போது இனைந்துள்ளார்.