2019 உலக கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற இரு ஆட்டங்களும் ரசிகர்களின் கண்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தன. ஏனெனில், நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் இந்திய அணிக்கு தண்ணி காட்டியது, ஆப்கானிஸ்தான். இறுதியில் இந்திய பந்துவீச்சாளர்களில் பிடியில் இருந்து ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தப்ப முடியாததால் போட்டியின் முடிவு இந்திய அணிக்கு சாதகமாக முடிந்தது. அதோடு நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் தங்களது 2-வது வெற்றியை பெறும் முனைப்பில் போராடினர். இருப்பினும், நியூசிலாந்து அணி வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடந்த வாரம் முழுவதும் மழையால் பெருமளவில் ஆட்டங்கள் பாதிக்கப்படவில்லை. சமீபத்தில் முடிந்த போட்டிகள் அனைத்தும் ஆட்டத்தின் இறுதி ஓவர்கள் வரை சென்றன. நேற்றைய வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி இன்னும் ஓரிரு வெற்றி பெற்றால் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முதல் அணி என்ற பெருமையை பெற உள்ளது. இதன் பின்னர், ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் அடுத்தடுத்து அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகளாக கருதப்படுகின்றன. எனவே, 2019 உலக கோப்பை தொடரின் இரண்டாம் பாதியில் தொடர்ந்து அணியில் களமிறங்கப்படவேண்டிய மூன்று வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பு விவரிக்கின்றது.
#3.ஈஷ் சோதி - நியூஸிலாந்து:
ரிஸ்ட் ஸ்பின்னர்களில் ஒருவரான சோதி, இதுவரை 2019 உலக கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட களமிறக்கப்படவில்லை. தொடர்ந்து, நியூசிலாந்து அணியில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு சுழற்பந்துவீச்சாளர் மற்றும் இரு ஆல்ரவுண்டர்கள் என வீரர்கள் ஆடும் லெவனில் இடம் பெற்று வருகின்றன. ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ள சேன்ட்னர், தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார். மேலும், அவர் பேட்டிங்கிலும் கணிசமான பங்களிப்பை அளித்து வருகிறார். தொடரின் முதல் பாதியில் பேட்டிங்கிற்கு ஒத்துழைத்த ஆடுகளங்கள் தற்போது பந்துவீச்சாளர்களுக்கு ஏதுவாக செயல்பட்டு வருகின்றது. ஏனெனில், இறுதியாக நடைபெற்ற மூன்று ஆட்டங்களில் ஒருமுறைகூட 300க்கு மேற்பட்ட ஸ்கோர் குவிக்கப்படவில்லை. இதனால், ஸ்பின்னர்களின் தேவை ஒவ்வொரு அணிக்கும் முக்கியமானதாக உள்ளது. இதன் காரணமாக, நியூஸிலாந்து அணியில் ரிஸ்ட் ஸ்பின்னரான சோதி இடம்பெற்றால் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சற்று தலை வலியை ஏற்படுத்தக்கூடும். தொடர்ந்து சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக மைதானங்கள் காணப்பட்டால் நியூஸிலாந்து அணியில் ஒரு வேகப்பந்துவீச்சாளர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சோதி இடம் பெறுவார். மேலும், இனிவரு, போட்டிகளில் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றுவார் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.
#2.நாதன் லயன் - ஆஸ்திரேலியா:
நியூசிலாந்து போலவே ஆஸ்திரேலிய அணியும் ஒரே ஒரு சுழல் பந்துவீச்சாளரை தமது ஆடும் லெவனில் இணைத்து வருகிறது. சில போட்டிகளில் அந்த ஒரு சுழற்பந்து வீச்சாளரை கூட நீக்கிவிட்டு கூடுதலாக வேகப்பந்து வீச்சாளரை களம் இறங்கி வந்துள்ளது, ஆஸ்திரேலியா. வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஜாம்பா இடம்பெற்ற போதிலும் தமது சிறப்பான பங்களிப்பை அளிக்க தவறினார். விக்கெட்களை கைப்பற்றுவதற்கு பதிலாக ஆடம் ஜாம்பா, அதிகப்படியான ரன்களை வாரி வழங்கி வருகிறார். நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 5 விக்கெட்களை கைப்பற்றி 7.15 என்ற எக்கானமியுடன் பந்துவீசி வருகிறார். இதில் குறிப்பிடும் வகையில், நான்கு போட்டிகளில் 3 முறை முழுமையாக தலா 10 ஓவர்கள் வரை வீசியுள்ளார். எனவே, இனிவரும் போட்டிகளில் மிடில் ஓவர்களில் எதிரணி பேட்ஸ்மென்கள் ரன்கள் குவிப்பதை கட்டுப்படுத்தும் வகையில், செயல்படும் தரமான ஒரு சுழல் பந்துவீச்சாளர் ஆஸ்திரேலிய அணிக்கு தேவைப்படுகிறது. இதனால், தொடர்ந்து இடம்பெற்று வந்த ஆடம்ஸ் ஜாம்பா அணியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கும் சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் இணைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவர் விக்கெட்டுகளை கைப்பற்றாவிட்டாலும் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சில நெருக்கடிகளை ஏற்படுத்தும் வல்லமை பெற்று உள்ளார். எனவே, இனிவரும் போட்டிகளில் இவரின் சுழல் பந்து வீச்சால் ஆஸ்திரேலிய அணி சற்று பலம் பெறும்.
#1.முகமது சமி - இந்தியா:
இந்திய அணியின் ஆடும் லெவனில் முகமது சமி இடம்பெறுவார் என பலரும் நினைத்த வேளையில், அணி நிர்வாகமும் கேப்டன் விராட் கோலியும் வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமாரை ஆடும் லெவனில் இணைத்தனர். அவர்களின் நம்பிக்கையின் பேரில் சிறப்பாக செயல்பட்டார், புவனேஸ்வர் குமார். இருப்பினும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட கடும் தசைப்பிடிப்பால் ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். இன்னும் அல்லது மூன்று போட்டிகளில் அவர் தொடர்ந்து ஓய்வு அளிக்கப்பட உள்ளார் என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். இதன் காரணமாக, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆடும் லெவனில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி இணைக்கப்பட்டார். தமக்கு வழங்கிய வாய்ப்பினை சிறப்பாக பயன்படுத்திய முகமது சமி, நேற்றைய போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் உட்பட நான்கு விக்கெட்களை கைப்பற்றி சாதனை படைத்தார். நேற்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. தொடர்ந்து இரு வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே களமிறக்கி வரும் இந்திய அணி, இனி வரும் போட்டிகளில் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் கொண்டு களம் இறங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு இருந்தால், முகமது சமி ஆடும் லெவனில் தொடர்ந்து இடம்பெறுவதில் எவ்வித சந்தேகமும் இல்லை.