2019 உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகள் மட்டுமே அரையிறுதி சுற்றை உறுதி செய்துள்ளன. இம்முறை இங்கிலாந்து அணி கோப்பையை வெல்லும் என பலரும் எதிர்பார்க்கப்பட்ட வேளையில், தொடர்ச்சியாக இரு போட்டிகளில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தது. அதன் பின்னர், இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி கண்டு தொடர்ந்து அரையிறுதி வாய்ப்பில் நீடித்து வருகிறது, இங்கிலாந்து. பெரிய அணிகளை போலவே மிகப்பெரும் வீரர்களும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் உள்ளனர். அவ்வாறு, இந்த உலக கோப்பை தொடரில் சொதப்பி வரும் நட்சத்திரங்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#3.மார்டின் கப்தில்:
உலக கோப்பை தொடரில் மிகச்சிறந்த வெற்றி சதத்தை கொண்டுள்ள இரண்டாவது அணி என்ற சாதனையை தன்னிடம் வைத்துள்ளது, நியூசிலாந்து. இந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான மார்டின் கப்டில், கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார். அதுமட்டுமில்லாமல், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் அடித்து ஆச்சரியமும் அளித்தார். ஆனால், இதற்கு எதிர்மாறாக நடப்பு தொடரில் விளையாடி வரும் இவர், 7 போட்டிகளில் வெறும் 158 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். மேலும், இவரது பேட்டிங் சராசரி 27 என்ற வகையில் மோசமாக அமைந்துள்ளது. தனது அணிக்காக பல்வேறு ஆட்டங்களில் வெற்றியை தேடி தந்த வீரரான இவர், மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய வண்ணமே உள்ளார். இவர் களமிறங்கிய 7 போட்டிகளில் நான்கு முறை பவர்பிளே ஓவர்களிலேயே தனது விக்கெட்டை இழந்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு அடுத்தபடியாக மிக மோசமான பேட்டிங் வரிசையைக் கொண்டு உள்ள அணியாக நியூசிலாந்து உள்ளது. இந்த அணியில் நங்கூரம் போல தன்னை நிலைநிறுத்தி பேட்டிங்கின் முதுகெலும்பாக திகழ்ந்து வருகிறார், கேப்டன் கனே வில்லியம்சன் .இருப்பினும், கப்தில் போன்ற அணியின் மூத்த வீரர்கள் தங்களது பொறுப்பினை உணர்ந்து விளையாடினால் மட்டுமே அடுத்த சுற்றை நோக்கி நியூசிலாந்து அணி பயணிக்க முடியும்.
#2.ஹாஷிம் அம்லா:
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஹசிம் அம்லா, உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னர் அணியில் இடம் பெறுவாரா என்ற கேள்வியே நிலவியது. இருப்பினும், தென்னாப்பிரிக்க அணியின் தேர்வாளர்கள் இவரின் மீது வைத்த நம்பிக்கையின் பேரில் உலகக்கோப்பை தொடருக்கான தென்னாப்பிரிக்கா அணியில் இடம் பிடித்தார். இருப்பினும், தமது மோசமான ஆல்லங்களால் தனது ரசிகர்களை தொடர்ந்து ஏமாற்றிய வண்ணமே உள்ளார. இதுவரை இவர் விளையாடிய போட்டிகளில் 203 ரன்களை மட்டுமே கடந்துள்ளார். இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அரை சதங்களை கடந்து ஓரளவுக்கு நம்பிக்கை அளித்தார். இவர் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த அணியின் செயல்பாடு போதிய அளவில் முன்னேற்றமடையாமல் உள்ளதால் பல தோல்விகளுக்கு இதுவே காரணமாய் அமைந்தது. இதனால், புள்ளிப் பட்டியலில் எட்டாம் இடத்தில் இந்த அணி தள்ளப்பட்டுள்ளது.. நடப்பு உலகக் கோப்பை தொடரில் தென்னாபிரிக்க அணியின் ஒரு பேட்ஸ்மேனும் கூட மூன்று இலக்க ஸ்கோரை இதுவரை பதிவு செய்யவில்லை என்பதும் குறிப்பிடதக்கது.
#1.கிளைன் மேக்ஸ்வெல்:
உலக கோப்பை தொடர் துவங்குவதற்கு முன்னர், பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெற்று மூன்று அரைசதங்களைக் கடந்து தனது பார்மின் உச்சத்தில் இருந்தார், இந்த டி20 நட்சத்திர வீரர் கிளைன் மேக்ஸ்வெல். 30 வயதான இவர் ,ஆட்டத்தின் இறுதி கட்ட நேரங்களில் தமது பேட்டால் எதிரணியின் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து உள்ளார். நடப்பு உலகக் கோப்பை தொடரிலும் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான போட்டிகளில் சிறிதளவு பங்களிப்பினை மட்டுமே அளித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தனது தாக்கத்தினை பதிவு செய்ய மறந்தார் என்றும் கூறலாம். ஏனெனில், இவருக்கு வழங்கப்பட்ட பல பொன்னான வாய்ப்புகளை தொடர்ந்து வீணடித்து வருகிறார். இதுவரை ஒரே ஒரு போட்டியில் மட்டுமே 25க்கும் மேற்பட்ட பந்துகளை சந்தித்துள்ளார். மற்ற போட்டிகளில் அனைத்திலும் அதற்கு குறைவான பந்துகளையே எதிர்கொண்டு தனது விக்கெட்டை இழந்து உள்ளார். 190 .67 என்று தமது ஸ்ட்ரைக் ரேட்டை அபாரமாக வைத்தபோதிலும் தனது பேட்டிங் சராசரி 24க்கும் குறைவாக கொண்டுள்ளார். இதுவரை 39 ஓவர்கள் பந்து வீசி உள்ள இவர், ஒருமுறை கூட தமது பந்துவீச்சால் விக்கெட்களை கைப்பற்றவில்லை. இதற்கு எதிராக, தொடர்ந்து ரன்களை வாரி வழங்கி வருகிறார். நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியா ,தற்போது அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக உள்ளது. ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் வீரரான மேக்ஸ்வெல், தனது பொறுப்பினை உணர்ந்து நாக் அவுட் சுற்றில் சிறப்பாக செயல்பட வேண்டியது முக்கிய கடமையாக உள்ளது.