#1.கிளைன் மேக்ஸ்வெல்:
உலக கோப்பை தொடர் துவங்குவதற்கு முன்னர், பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெற்று மூன்று அரைசதங்களைக் கடந்து தனது பார்மின் உச்சத்தில் இருந்தார், இந்த டி20 நட்சத்திர வீரர் கிளைன் மேக்ஸ்வெல். 30 வயதான இவர் ,ஆட்டத்தின் இறுதி கட்ட நேரங்களில் தமது பேட்டால் எதிரணியின் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து உள்ளார். நடப்பு உலகக் கோப்பை தொடரிலும் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான போட்டிகளில் சிறிதளவு பங்களிப்பினை மட்டுமே அளித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தனது தாக்கத்தினை பதிவு செய்ய மறந்தார் என்றும் கூறலாம். ஏனெனில், இவருக்கு வழங்கப்பட்ட பல பொன்னான வாய்ப்புகளை தொடர்ந்து வீணடித்து வருகிறார். இதுவரை ஒரே ஒரு போட்டியில் மட்டுமே 25க்கும் மேற்பட்ட பந்துகளை சந்தித்துள்ளார். மற்ற போட்டிகளில் அனைத்திலும் அதற்கு குறைவான பந்துகளையே எதிர்கொண்டு தனது விக்கெட்டை இழந்து உள்ளார். 190 .67 என்று தமது ஸ்ட்ரைக் ரேட்டை அபாரமாக வைத்தபோதிலும் தனது பேட்டிங் சராசரி 24க்கும் குறைவாக கொண்டுள்ளார். இதுவரை 39 ஓவர்கள் பந்து வீசி உள்ள இவர், ஒருமுறை கூட தமது பந்துவீச்சால் விக்கெட்களை கைப்பற்றவில்லை. இதற்கு எதிராக, தொடர்ந்து ரன்களை வாரி வழங்கி வருகிறார். நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியா ,தற்போது அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக உள்ளது. ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் வீரரான மேக்ஸ்வெல், தனது பொறுப்பினை உணர்ந்து நாக் அவுட் சுற்றில் சிறப்பாக செயல்பட வேண்டியது முக்கிய கடமையாக உள்ளது.