கடந்த 46 நாட்களாக நடைபெற்று வந்த 12வது உலக கோப்பை தொடர் நேற்றுடன் முடிவு பெற்றது. மிகவும் பரபரப்பான நேற்றைய இறுதி ஆட்டத்தில் தொடரை நடத்தும் இங்கிலாந்து மற்றும் கடந்த முறை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த நியூஸிலாந்து ஆகிய அணிகள் மோதின. சூப்பர் ஓவரிலும் டையில் முடிந்த நேற்றைய ஆட்டத்தின் முடிவு இங்கிலாந்து அணிக்கு சாதகமாக முடிந்தது. இதன் மூலம் 44 ஆண்டுகால உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று இங்கிலாந்து அணி சாதனை படைத்துள்ளது. தொடரின் முற்பாதியில் பெரும்பாலான போட்டிகள் ஒரு அணிக்கு சாதகமாக முடிந்தது. அதன் பின்னர், சில ஆட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்டன. தொடரின் பிற்பாதியில் தான் ஒவ்வொரு ஆட்டமும் சூடு பிடிக்கத் தொடங்கியது.
ஏனெனில், அரையிறுதிப் தகுதி பெற ஒவ்வொரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இருப்பினும், அனைவரும் எதிர்பார்த்தபடியே இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. கடந்த வாரம் நடைபெற்ற அரையிறுதி போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. எனவே, நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் மனதை உலுக்கிய சில சம்பவங்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#3.நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிராத் வெயிட்டின் தைரியமான போராட்டம்:
கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் பென் ஸ்டோக்சின் இறுதி ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர்களை பறக்கவிட்டு கிரிக்கெட் உலகிற்கு இன்ப அதிர்ச்சி அளித்தார் கார்லோஸ் பிராத்வெயிட். இவரின் அட்டகாசமான ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது இரண்டாவது உலக கோப்பை தொடரை வென்று சாதனை படைத்தது. இதனால், உலகளவில் பெயர் பெற்ற இவர், நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெற்றார். லீக் சுற்றில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 292 ரன்கள் குவித்து வெற்றி என்ற இலக்குடன் தனது ஆட்டத்தை தொடங்கியது, வெஸ்ட் இண்டீஸ். இருப்பினும், 142 ரன்களை எடுத்திருந்தபோது வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்களை இழந்து தவித்துக் கொண்டிருந்தது. அதன் பின்னரும் இந்த அணியின் ஊசலாடும் ஆட்டமே தொடர்ந்தது. ஏனெனில், அடுத்த 22 ரன்கள் எடுப்பதற்கு முன்னே 3 விக்கெட்களை இந்த அணி இழந்து ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இதன் பின்னர், களமிறங்கிய பிராத்வெயிட் பந்துவீச்சாளரான கெமர் ரோச்சுடன் பார்ட்னர்ஷிப் மேற்கொண்டு 47 ரன்களை சேர்த்தார்.
இதனையடுத்து கெமர் ரோச்சும் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்த வேலையில், காட்ரெல் உடன் கை கோர்த்து அரக்கத்தனமான சிக்சர்களை வெளுத்து வாங்கினார், பிராத்வெய்ட். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு ஒரு விக்கெட் மட்டுமே எஞ்சிய நிலையில் 47 ரன்கள் தேவைப்பட்டன. ஆட்டத்தின் 48 வது ஓவரில் 25 ரன்களை சேர்த்தார். அதன்பின்னர், கடைசி 2 ஓவர்களில் 8 ரன்கள் தேவைப்பட்டது. ஜிம்மி நீசம் வீசிய 49 ஆவது ஓவரில் முதல் 5 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டன. அந்த அணியின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பிராத் வெயிட் சிக்சரின் மூலம் ஆட்டத்தை முடிக்க முற்பட்டாற். 49வது ஓவரில் லாங் ஆன் திசையில் பேட்டை உயர்த்தி சிக்சரை அடித்த போதும் நூலிழையில் கேட்ச் செய்யப்பட்டு ஆட்டம் இழந்தார். இதன் மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 82 பந்துகளில் 101 ரன்களை குவித்து அனைவரது பார்வையையும் தன் பக்கம் ஈர்த்தார், பிராத்வெய்ட்.