கிரிக்கெட் வரலாற்றில் அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டெஃபோர்ட் மைதானத்தில் நடந்தது. சிறு சிறு இடைவெளியில் மழை குறுக்கிட்டாலும் போட்டிக்கான தீர்வு இந்திய அணிக்கு கிடைத்து தற்போது வரை எப்போட்டியிலும் தோற்காத அணியாக வலம் வருகிறது. பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலிய அணியுடன் தோல்வியை தழுவியதுடன் தற்போது இந்திய அணிக்கு எதிராகவும் தோல்வியை தழுவி உலகக் கோப்பை வரலாற்றில் 7வது முறை ஒரே அணியிடம் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்துள்ளது.
சற்று வறண்ட மைதானத்தில் டாஸ் வென்ற சஃப்ரஸ் அகமது பௌலிங்கை தேர்வு செய்தார். ஷீகார் தவான் காயம் காரணமாக இப்போட்டியில் விளையாடாத காரணத்தால் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக முன்னேற்றப்பட்டார். விஜய் சங்கர் நம்பர்-4 பேட்ஸ்மேனாக அணியில் இடம் பிடித்தார். பாகிஸ்தான் ஷாஹீன் அஃரிடி-யை நீக்கி இடது கை சுழற்பந்து வீச்சாளர் இமாட் வாஷீமை அணிக்கு கொண்டு வந்தது.
இந்திய அணி ஆரம்பம் முதலே தடுத்து நிறுத்தி ஆடத் தொடங்கியது. முகமது அமீர், ஹாசன் அலி ஆகியோரது பந்துவீச்சை கணித்து விளையாடத் தொடங்கினர். ரோஹீத் சர்மா ஓடிஐ கிரிக்கெட்டில் தனது அதிவேக அரைசதத்தினை விளாசினார். கே.எல்.ராகுல் தனது விக்கெட்டை இழந்த பிறகு விராட் கோலி, ரோஹீத் சர்மாவுடன் கைகோர்த்து விளையாட தொடங்கினார். ரோகித் சர்மா 2019 உலகக் கோப்பையில் தனது இரண்டாவது சதத்தினை விளாசினார். இவர் மொத்தமாக 140 ரன்களை குவித்து வெளியேறினார். முகமது அமீர் டெத் ஓவர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இருப்பினும் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 336 என்ற கடின இலக்கை நிர்ணயித்து.
337 என்ற கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி ஆரம்பத்திலே தடுமாற்றத்தை வெளிபடுத்தியது. புவனேஸ்வர் குமாருக்கு காயம் ஏற்படவே, உடனே விஜய் சங்கரை பந்துவீசச் செய்தபோது, அவர் தான் வீசிய முதல் பந்திலேயே இமாம்-உல்-ஹக்கின் விக்கெட்டை வீழ்த்தினார். பாபர் அஜாம் மற்றும் ஃபக்கர் ஜமான் 100 ரன்கள் பார்டனர்ஷீப் செய்து விளையாடி பாகிஸ்தான் அணியை மீட்டு வந்தனர்.
இவர்கள் இருவரும் பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக போட்டியை மாற்றி கொண்டிருந்த சமயத்தில் பாபர் அஜாமை குல்தீப் யாதவ் தனது மாயஜால சுழலால் போல்ட் ஆக்கினார். அத்துடன் அடுத்த ஓவரிலேயே ஃபக்கர் ஜமானில் விக்கெட்டையும் வீழ்த்தினார். இவரது பந்துவீச்சின் மூலம் பாகிஸ்தானின் வெற்றி வாய்ப்பை முழுவதும் சிதைத்தார்.
ஹர்திக் பாண்டியா முகமது ஹபீஷ் மற்றும் சோயிப் மாலிக் ஆகியோரை தொடரந்து அடுத்தடுத்த இரு பந்துகளில் வீழ்த்தி இந்தியா வசம் முழுவதும் போட்டியை மாற்றியமைத்தார். மழையின் காரணமாக போட்டி 40 ஓவர்களாக மாற்றப்பட்டது. இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாம் இங்கு இந்தப் போட்டியில் பாகிஸ்தான் செய்த 3 தவறுகளை பற்றி காண்போம்.
#1 ரோகித் சர்மாவிற்கு எதிராக ஒரு திட்டம் இல்லாமல் செயல்பட்டது
இப்போட்டியில் பாகிஸ்தான் பௌலர்கள் ரோகித் சர்மாவிற்கு எவ்வளவு சாதகமாக பந்துவீச முடியுமோ, அவ்வளவு சாதகமாக வீசினர். ஒரு சரியான திட்டமின்றி பாகிஸ்தான் பௌலர்கள் செயல்பட்டனர். பாகிஸ்தானின் சொதப்பலான பௌலிங்கை சரியாக பயன்படுத்தி கொண்ட ரோகித் சர்மா சில அதிரடி ஷாட்கள் மற்றும் ஷார்ட் பால் அதிகம் வீசப்பட்ட போது அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளாக மாற்றி மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பறக்க விட்டார். ஆரம்ப இன்னிங்ஸில் ரோஹீத் அதிரடியாக விளையாடி அரை சதம் விளாசினார்.
தவறான திட்டம் வகுத்ததலால், பாகிஸ்தான் பௌலர்கள் ஸ்விங் பௌலிங்கை வீச முயன்றும் அவர்களால் சரியாக வீச முடியவில்லை. ஹாசன் அலிக்கு இம்மைதானம் சரியாக ஒத்துழைக்காத காரணத்தால் பேட்ஸ்மென்களுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்த முடியாமல் தடுமாறினார். பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் "கட் & புல்" லென்த் பந்துவீச்சு டெத் ஓவரில் அந்த அணிக்கு உதவியது. சுழற்பந்து வீச்சாளர்களும் தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிபடுத்த தடுமாறினர். அனைத்து பந்தையும் தாழ்வாகவே வீசினர்.
#2 ரன்-அவுட் வாய்ப்புகளை தவறவிட்டது
பாகிஸ்தான் ஃபீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. இந்தியாவிற்கு எதிரான நெருக்கடியான போட்டியில் பாகிஸ்தான் எதிர்பார்த்த அளவிற்கு ஃபீல்டிங் செய்யவில்லை. லோகேஷ் ராகுல் வாஹாப் ரியாஜ் வீசிய 10வது ஓவரின் முதல் பந்தை மைதானத்தின் இடப்பக்க மூலையில் தட்டிவிட்டு ரன் எடுக்க முயன்றார். இங்கு ராகுலிடமிருந்து எந்த அழைப்பும் இன்றி ரோகித் சர்மா இரண்டாவது ரன் எடுக்க முயற்சித்தார். ஃபக்கர் ஜமான் ஸ்ட்ரைக்கில் வீசாமல் நான்-ஸ்ட்ரைக்கில் பந்தை எடுத்து வீசிய காரணத்தால் ரோகித் சர்மா காப்பற்றப்பட்டார்.
அடுத்த ஓவரில் ரோகித் சர்மா ஒரு நெருக்கடியான சமயத்தில் ஒரு ரன் எடுக்க ஓடினார். அப்போது ஷதாப் கான் எடுத்து ஸ்டம்பை நோக்கி எறியப்பட்ட பந்து ஸ்டம்பில் அடிக்காததால் ரோகித் காப்பற்றப்பட்டார். இந்த இரு மிஸ் ஃபில்டிங் ஆட்டத்தை மாற்றி, ரோகிதிற்கு அளித்த வாய்ப்பை பயன்படுத்தி சதம் விளாசினார். அத்துடன் உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானிற்கு எதிராக 7வது வெற்றியை பதிவு செய்தது இந்தியா.
#3 சஃப்ரஸ் அகமது கேப்டன்ஷீப்
பாகிஸ்தான் அணியில் சஃப்ரஸ் அகமதுவின் கேப்டன்ஷீப் பற்றி பல கேள்விகள் எழுந்து வருகின்றன. தற்போது இப்போட்டியில் அவர் எடுத்த தவறான முடிவுகளை கண்டு மேன்மேலும் கேள்விகள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தானின் வலிமையே பௌலிங் மற்றும் அதிக ரன்களை சேஸ் செய்யும் போது ஒரு நிலையான ஆட்டம். ஆனால் ஒரு அதிக நெருக்கடியான போட்டியில் இந்திய பேட்டிங் லைன்-அப்பிற்கு எதிராக சஃப்ரஸ் அகமது டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்தது மிகவும் தவறானதாகும்.
இவர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருந்தால், இவர்களது இரு சுழற்பந்து வீச்சாளர்களையும் சரியாக பயன்படுத்தியிருக்கலாம். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சில் அதிக திருப்பம் இருந்ததை நாம் காண முடிந்தது. பவர் பிளே ஓவரில் வஹாப் ரியாஷிற்கு 2 ஓவர்களை மட்டுமே அளித்தார். அத்துடன் ஷதாப் கான் ஆட்டத்தின் 23 ஓவர்கள் வரை வீசிய அனைத்து ஓவர்களிலுமே அதிக ரன்கள் குவிக்கப்பட்டது. 24வது ஓவரில் வஹாப் ரியாஷை எடுத்து வந்து இந்திய அணிக்கு ஒரு விக்கெட் இழப்பை ஏற்படுத்தினார். ஆனால் அந்த சூழ்நிலையில் இந்தியா ஏற்கனவே ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்து விளையாடி விட்டது.