உலக கோப்பை தொடரின் பரபரப்பான ஆட்டமான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நேற்று நடைபெற்றது. ஆட்டத்தின் இறுதி நேரத்தில் மழை குறுக்கிட்டதால் டி.எல்.எஸ் விதிப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது, இந்திய அணி. இதன் மூலம் உலக கோப்பை தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து ஏழாவது முறையாக வெற்றி பெற்று ஒருமுறைகூட தோல்வியே சந்திக்காத அணி என்ற பெருமையை தொடர்ந்து தக்க வைத்திருக்கிறது இந்திய அணி. முதலில் டாஸ் வென்று இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தார், பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அஹமது. இதன்படி பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்களை குவித்து அசத்தியது. இதில் குறிப்பிடும் வகையில், தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா 113 பந்துகளை சந்தித்து 140 ரன்களை குவித்தார்.
அதன் பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 337 என்ற இமாலய இலக்கை சேஸ் செய்ய வேண்டியிருந்தது. பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் இரண்டாவது இனிங்ஸில் 40 ஓவர்களில் ஆட்டம் முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. டி.எல்.எஸ் விதிப்படி பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கு 302 ரன்களை குவித்து இருக்கவேண்டும். ஆனால், 6 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களை மட்டுமே குவித்து தடுமாறி இருந்த பாகிஸ்தான் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியால் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா மற்றும் ராகுல் இணை முதல் விக்கெட்டிற்கு 136 ரன்களை சேர்த்தது. மேலும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலக கோப்பை போட்டிகளில் முதல் விக்கெட்டின் அதிகபட்ச இந்திய அணியின் பார்ட்னர்ஷிப்பாகவும் இது அமைந்தது. தனது விக்கெட்டை இழந்த ராகுல் 77 பந்துகளை சந்தித்து 57 ரன்களைக் குவித்திருந்தார். ரோகித் சர்மா உடன் இணைந்த கேப்டன் விராட் கோலி தனது பணியை அற்புதமாக செய்தார். கேப்டனும் துணை கேப்டனும் இணைந்து சரவெடி தாக்குதலை தொடங்கினர். இதனையடுத்து, களமிறங்கிய ஹர்திக் பாண்டியா கேதர் ஜாதவ் மற்றும் விஜய் சங்கர் ஆகியோரின் உதவியுடன் இந்திய அணி 336 ரன்களை தொட்டது.
இரண்டாவதாக பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி விஜய் சங்கரின் பந்துவீச்சில் தனது முதல் விக்கெட்டை இழந்தது. பாபர் அஸம் மற்றும் ஃபக்கர் ஜமான் ஆகியோரின் நல்ல பார்ட்னர்ஷிப்பில் இலக்கை துரத்திக் கொண்டிருந்தது, இருப்பினும், குல்தீப் யாதவின் அபார சுழற்பந்து வீச்சு தாக்குதலால் எதிர்பாராதவிதமாக தனது விக்கெட்டை இழந்தார், பாபர் அசாம். இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணி தொடர்ந்து தங்களது விக்கெட்டை இழந்த வண்ணம் இருந்தது. எனவே, இந்த ஆட்டத்தில் வெற்றி பெற விராட் கோலி கையாண்ட மூன்று யுக்த்திகளை இந்தத் தொகுப்பில் காணலாம்.
#3.அணி தேர்வு:
மான்செஸ்டரில் நேற்று முன்தினம் பெய்த கடும் மழையால் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளரை அணியில் இணைக்கலாம் என பலரும் கூறி வந்த நிலையில் இரு ரிஸ்ட் சுழற்பந்து வீச்சாளர்களுடன் விஜய் சங்கரையும் இணைத்து ஆச்சரியம் அளித்தார், விராட் கோலி. ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் இடது தொடையில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக போட்டியில் இருந்து விலகினார், பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார். இருப்பினும், இந்திய பந்துவீச்சு தரப்பினை கூடுதல் வலு சேர்க்கும் விதமாக விஜய் ஷங்கரை முழுமையாக பயன்படுத்தி வெற்றியும் கண்டார், விராட் கோலி. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜாதவ் நேற்றைய ஆட்டத்தில் ஒரு ஓவர் கூட வீசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
#2. ஹர்திக் பாண்டியா மற்றும் விஜய் சங்கரை சிறப்பாக பயன்படுத்திய விதம்:
இரண்டாவது இன்னிங்சில் ஐந்தாவது ஓவரை வீசிய புவனேஸ்வர் குமார் ஆட்டத்திலிருந்து விலக நேரிட்ட வேளையில், ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் திடீரென பந்துவீசி தனது முதலாவது பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தி சிறப்பான ஒரு தொடக்கத்தினை அமைத்தார். விஜய் சங்கரை போலவே மற்றொரு ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவையும் அவ்வப்போது பயன்படுத்தி தொடர்ந்து பாகிஸ்தானுக்கு முட்டுக்கட்டை போட்டார், விராட் கோலி. இவர்கள் மட்டுமல்லாது, அணியில் உள்ள மேலும் இரு சுழல் பந்து வீச்சாளர்களையும் முழுமையாக பயன்படுத்தி ஆட்டத்தின் போக்கை இந்திய அணிக்கு சாதகமாக திருப்பினர். இதில் குறிப்பிடும் வகையில், முகமது ஹபீஸ் மற்றும் சோயிப் மாலிக் ஆகியோரின் விக்கெட்களை தனது அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார், ஹர்திக் பாண்டியா. 8 ஓவர்கள் வீசிய ஹர்திக் பாண்டியா 44 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை அள்ளினார். அதேபோல் விஜய் சங்கரும் 5.2 ஓவர்கள் வீசி 22 ரன்களை விட்டுக்கொடுத்து இரு விக்கெட்களை கைப்பற்றினார்.
#1.அதிக ரன்களை வாரி கொடுத்தாலும் தொடர்ந்து ரிஸ்ட் சுழற்பந்து வீச்சாளர்களை நம்பிய விராட் கோலி:
ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்சில் 5வது ஓவரிலேயே தனது முதல் விக்கெட்டை பாகிஸ்தான் இழந்த வேளையில் பாபர் அஸம் மற்றும் ஃபக்கர் ஜமான் ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர். இருப்பினும், இந்திய அணியின் பிரதான சுழல் பந்துவீச்சாளர்கள் சஹால் மற்றும் குல்தீப் யாதவ் தொடர்ந்து ரன்களை வாரி வழங்கிக் கொண்டிருந்தனர். மேற்கூறிய பேட்ஸ்மேன்கள் இருவரும் இணைந்து தங்களது பார்ட்னர்ஷிப்பில் 100 ரன்களை கடந்த நேரத்திலும் கூட சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடி வந்தனர். இந்நேரத்தில் பெரும்பாலான கேப்டன்கள் ஒரு வேகப்பந்து வீச்சாளரை களமிறக்க நினைப்பர். இருப்பினும், தொடர்ந்து இந்த சுழற்பந்து வீச்சாளர்கள் மீது நம்பிக்கை வைத்த விராட் கோலிக்கு வெற்றி கிடைத்தது. குல்தீப் யாதவ் பந்துவீச்சில் பாபர் அஸம் தனது ஸ்டம்புகளை பறிகொடுத்தார். பின்னர், ஃபக்கர் ஜமான் 62 ரன்கள் குவித்திருந்த போது தேவையில்லாமல் தனது விக்கெட்டை இழந்தார். நன்கு விளையாடிக் கொண்டிருந்த இந்த இரு பேட்ஸ்மேன்களும் தனது விக்கெட்டை இழந்து வெளியேறிய பின்பு பாகிஸ்தான் அணி தொடர்ந்து தனது விக்கெட்களை இழந்தது. எனவே, நேற்றைய போட்டியில் வெற்றிபெற விராட் கோலி கையாண்ட யுக்திகளில் முதன்மையானதாக இது விளங்குகின்றது.