#1.அதிக ரன்களை வாரி கொடுத்தாலும் தொடர்ந்து ரிஸ்ட் சுழற்பந்து வீச்சாளர்களை நம்பிய விராட் கோலி:
ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்சில் 5வது ஓவரிலேயே தனது முதல் விக்கெட்டை பாகிஸ்தான் இழந்த வேளையில் பாபர் அஸம் மற்றும் ஃபக்கர் ஜமான் ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர். இருப்பினும், இந்திய அணியின் பிரதான சுழல் பந்துவீச்சாளர்கள் சஹால் மற்றும் குல்தீப் யாதவ் தொடர்ந்து ரன்களை வாரி வழங்கிக் கொண்டிருந்தனர். மேற்கூறிய பேட்ஸ்மேன்கள் இருவரும் இணைந்து தங்களது பார்ட்னர்ஷிப்பில் 100 ரன்களை கடந்த நேரத்திலும் கூட சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடி வந்தனர். இந்நேரத்தில் பெரும்பாலான கேப்டன்கள் ஒரு வேகப்பந்து வீச்சாளரை களமிறக்க நினைப்பர். இருப்பினும், தொடர்ந்து இந்த சுழற்பந்து வீச்சாளர்கள் மீது நம்பிக்கை வைத்த விராட் கோலிக்கு வெற்றி கிடைத்தது. குல்தீப் யாதவ் பந்துவீச்சில் பாபர் அஸம் தனது ஸ்டம்புகளை பறிகொடுத்தார். பின்னர், ஃபக்கர் ஜமான் 62 ரன்கள் குவித்திருந்த போது தேவையில்லாமல் தனது விக்கெட்டை இழந்தார். நன்கு விளையாடிக் கொண்டிருந்த இந்த இரு பேட்ஸ்மேன்களும் தனது விக்கெட்டை இழந்து வெளியேறிய பின்பு பாகிஸ்தான் அணி தொடர்ந்து தனது விக்கெட்களை இழந்தது. எனவே, நேற்றைய போட்டியில் வெற்றிபெற விராட் கோலி கையாண்ட யுக்திகளில் முதன்மையானதாக இது விளங்குகின்றது.