2019 உலக கோப்பை தொடர் இம்முறை இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இதுவரை முடிந்துள்ள 21 ஆட்டங்களில் 4 ஆட்டங்கள் மழையினால் கைவிடப்பட்டன. எனவே, இனிவரும் போட்டிகளில் பல அணிகளும் தனது பலத்தை நிரூபித்து புள்ளி பட்டியலில் முன்னிலை பெற காத்திருக்கின்றன. இதுவரை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மட்டுமே மழையினால் எந்த ஒரு போட்டியிலும் பாதிக்கப்படவில்லை. இலங்கை அணி விளையாடியுள்ள 5 போட்டிகளில் இரு முறை மழை குறுக்கிட்டதால் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. நடப்பு தொடரில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் மட்டுமே இதுவரை எந்த அணியாலும் தோற்கடிக்கப்படாத அணிகளாக திகழ்ந்து வருகின்றன. எனவே, இதுவரை புள்ளி பட்டியலில் முன்னிலை பெற்றும் இனிவரும் போட்டிகளில் தொடர்ந்து தங்களது பலத்தை நிரூபித்து வெற்றி பெறும் அணிகளை கருத்திற்கொண்டும் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற உள்ள நான்கு சிறந்த அணிகளை இந்த தொகுப்பில் காணலாம்.
#4.நியூசிலாந்து:
இதுவரை விளையாடிய போட்டிகள் - 4
வெற்றி - 3
தோல்வி - 0
முடிவில்லாமல் போன போட்டிகள் - 1
மொத்த புள்ளிகள் - 7
இனிவரும் போட்டிகளில் சந்திக்க உள்ள அணிகள் - தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து.
கடந்த உலக கோப்பை தொடரில் தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறி பட்டம் வெல்லாத நியூசிலாந்து அணி, இம்முறை பட்டம் வெல்லும் முனைப்பில் தங்களது கடுமையான பலத்தினை தொடுத்து வருகிறது. இதுவரை நடைபெற்றுள்ள நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடம் வகிக்கிறது, இந்த அணி. இதுவரை இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற சிறிய அணிகளுடன் போட்டியிட்டு எளிதில் வெற்றியை கண்டுள்ளது. எனவே, இனிவரும் போட்டிகளில் பலமான அணிகளை சந்திக்க இருப்பதால் இந்த அணியின் உண்மையான திறன் சோதிக்கப்படும். எப்படி இருந்தாலும் இந்த சுற்றின் முடிவில் நியூசிலாந்து அணி புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் நுழைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#3.ஆஸ்திரேலியா:
இதுவரை விளையாடிய போட்டிகள் - 5
வெற்றி - 4
தோல்வி - 1
மொத்த புள்ளிகள் - 8
இனி வரும் போட்டிகளில் சந்திக்க உள்ள அணிகள் - வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா.
நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியா அணி இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறது. ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஓராண்டுக்குப் பின்னர், அணிக்கு திரும்பியுள்ளதால் கூடுதல் பலத்துடன் மீண்டும் ஒரு முறை சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் களமிறங்கி வருகிறது, ஆஸ்திரேலிய அணி. இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி கண்ட ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டங்களில் வெற்றி பெற்று தமது பலத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. முக்கிய ஆல்ரவுண்டரான மார்கஸ் ஸ்டோனிஸ் காயம் ஏற்பட்டு விலகியதால் சற்று பின்னடைவை சந்திக்கிறது, ஆஸ்திரேலிய அணி. இருப்பினும், அவரது இடத்தை நிரப்பி பலமிக்க அணியாக திகழ்ந்து அரையிறுதிப் போட்டிக்கு நிச்சயம் தகுதி பெறும்.
#2.இங்கிலாந்து:
இதுவரை விளையாடிய போட்டிகள் - 4
வெற்றி - 3
தோல்வி - 1
மொத்த புள்ளிகள் - 6
இனிவரும் போட்டிகளில் சந்திக்க உள்ள அணிகள் - ஆஃப்கானிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் நியூசிலாந்து.
இம்முறை உலகக் கோப்பை தொடர் நடத்தும் அணியான இங்கிலாந்து பட்டம் வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக திகழ்கிறது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி கண்டாலும் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது, இங்கிலாந்து அணி. அணியின் புதுவரவான சோப்ரா ஆச்சர் பந்துவீச்சில் எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்கிறார். இருப்பினும், அணியின் நட்சத்திர வீரர்களான ஜேசன் ராய் மற்றும் கேப்டன் இயான் மோர்கன் ஆகியோர் கடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் காயம் ஏற்பட்டதால் இரண்டாவது இன்னிங்சில் களம் இறங்கவில்லை. இவ்விரு வீரர்களும் விரைவிலேயே மீண்டு எழுந்து தங்களது அணிக்கு பலம் சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த அணியும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெரும் அணியாக கணிக்கப்படுகிறது.
#4.இந்தியா:
இதுவரை சந்தித்த போட்டிகள் - 3
வெற்றி - 2
தோல்வி - 0
முடிவில்லாமல் போட்டிகளில் - 1
இனி வரும் போட்டிகளில் சந்திக்க உள்ள அணிகள் - பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து, வங்கதேசம் மற்றும் இலங்கை.
உலகக் கோப்பை தொடரை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது, இந்திய அணி. இதுவரை இந்திய அணி விளையாடிய போட்டிகளில் தனது சிறப்பான பங்களிப்பை அளித்து அனைத்து துறைகளிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி இருக்கின்றது. இரு போட்டிகளில் வென்ற இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா ஒரு சதம் ஒரு அரைசதம் உட்பட பேட்டிங்கில் சீராக செயல்பட்டு வருகிறார். காயம் காரணமாக விலகி உள்ள ஷிகர் தவானுக்கு பதிலாக கே.எல்.ராகுல் அந்த இடத்தை பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இனிவரும் போட்டிகளில் மிடில் ஆர்டர் பேட்டிங்கிலும் சற்று முன்னேற்றம் காணப்பட வேண்டியது மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த போட்டிகளில் தனது ஆதிக்கத்தை செலுத்திய போலவே இனி வரும் போட்டிகளில் தொடர்ந்து தனது பலத்தை நிரூபித்து வெற்றியை பெற இருக்கின்றது. எனவே, இந்த அணியும் உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.