2019 உலகக்கோப்பை தொடர் தற்போது முதல் பாதியை நெருங்கி வருகிறது. கடும் மழையால் கடந்த வார போட்டிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இந்த தொடர் துவங்குவதற்கு முன்பாகவே இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் அரையிறுதியில் விளையாடும் என பல கிரிக்கெட் விமர்சகர்களும் கணித்துள்ளனர். இனிவரும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றியை குவிக்கும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்புகள் பெருமளவில் உள்ளன. இன்னும் மீதம் உள்ள நான்காம் இடத்திற்கு நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் இனிவரும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் தொடரில் பெரும் ஏமாற்றத்தை அளித்து வருவதால் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்றால்தான் அரையிறுதி வாய்ப்பை பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியும். எனவே, இதுவரை நடந்து முடிந்த உலகக் கோப்பை போட்டிகளில் ஏமாற்றம் அளித்து வரும் மூன்று தலை சிறந்த வீரர்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1.ரஷீத் கான் - ஆப்கானிஸ்தான்:
இந்தியன் பிரீமியர் லீக்கில் சிறப்பாக செயல்பட்ட ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் நல்ல சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார். இருப்பினும், கடந்த சில போட்டிகளில் தமது துள்ளிய பந்துவீச்சை தாக்குதல்களை தொடுக்க மறுக்கிறார், ரஷீத் கான். உலகக்கோப்பை போன்ற மிகப்பெரிய தொடர்களில் ஒவ்வொரு அணியின் வீரர்களின் பங்கு முக்கியமானதாகும். ஆனால், இந்த 20 வயதான ஆல்ரவுண்டர் விளையாடியுள்ள 5 போட்டிகளில் வெறும் 3 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றியுள்ளார். நேற்று நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் 9 ஓவர்கள் வீசி 110 ரன்களை வாரி வழங்கினார். அவற்றில் குறிப்பிடும் வகையில், தனது ஓவர்களில் பதினொரு சிக்சர்களை கொடுத்துள்ளார் இதன் மூலம், உலக கோப்பை தொடர்களில் மிக மோசமான பவுலிங் என்ற சாதனையாகவும் பதிவாகியது. எனவே, இளம் வீரர்களை பெருமளவில் நம்பியுள்ள ஆப்கானிஸ்தான் அணி நிர்வாகம் தொடர்ந்து இதுபோன்ற ஏமாற்றங்களை சந்தித்து வருவதால் ஒரு வெற்றியை கூட இன்னும் பெற முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. நிச்சயம் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு இல்லாத ஆப்கானிஸ்தான் அணி குறைந்தது ஒரு போட்டியிலாவது ரசித் கானின் உதவியுடன் வெற்றி பெற வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் விருப்பம் ஆகும்.
#2.ஹசிம் ஆம்லா - தென்னாபிரிக்கா:
எவ்வித சந்தேகமின்றி, தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் சற்று கவலைக்குரிய வகையில் செயல்பட்டு வருகிறது. தொடர் தொடங்குமுன்னே தென்னாப்பிரிக்க அணியில் இணைவாரா என்ற பெரும் கேள்விக்கு மத்தியில் இருந்தார், ஹசிம் அம்லா. அனைவரையும் ஆச்சரியமளிக்கும் வகையில் உலக கோப்பை தொடருக்கான தென்னாபிரிக்க அணியில் இடம் பெற்று பயிற்சி ஆட்டங்கள் இரண்டிலும் தொடர்ந்து இரு அரைசதங்களை அடித்தார். ஆனால், மீண்டும் உலகக்கோப்பை தொடங்கிய பின்னர், நடைபெற்ற நான்கு போட்டிகளில் வெறும் 66 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். மேலும், இவரது பேட்டிங் சராசரி 22 என்ற வகையில் படுமோசமாக அமைந்துள்ளது. இவர் சிறப்பான தொடக்கத்தை தென் ஆப்பிரிக்க அணிக்கு அளிக்கத் தவறினார். இவரது பேட்டிங் கவலைக்குரிய வகையில் அமைந்துள்ளதால் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணி தடுமாறி வருவதற்கான காரணமாகவும் அமைகிறது. எனவே, இனிவரும் போட்டிகளில் அனைத்திலும் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியில் உள்ள தென் ஆப்பிரிக்க அணிக்கு இவரின் பங்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
#3.நாதன் கவுல்டர் நிலே - ஆஸ்திரேலியா:
ஆஸ்திரேலிய அணியின் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளரான நாதன் கவுல்டர் நிலே, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறக்கப்பட்டார். ஆனால், இதுவரையிலுமே ஒரு போட்டியில் கூட தனது பவுலிங்கில் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடையவில்லை. இதுநாள் வரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள இவர், இரு விக்கெட்களை மட்டுமே கைப்பற்றி தனது பவுலிங் சராசரியை 111 என்ற வகையில் வைத்துள்ளார். உண்மையில், இவர் பேட்டிங்கில் சிறப்பாக பங்காற்றுகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் தடுமாறிக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கை மீட்டெடுத்து 92 ரன்களை குவித்து அணியை வெற்றி பெறச் செய்தார். ரன்கள் குவிப்பது மட்டும் இவரது பணி கிடையாது. அணி தடுமாறிக் கொண்டிருக்கும் வேளையில் முக்கியமான விக்கெட்களை கைப்பற்றி நம்பிக்கை அளிக்க வேண்டும். ஆனால், இதற்கு எதிர்மாறாக கவுல்டர் நிலே செயல்பட்டு வருகிறார். எதிரணியின் விக்கெட்களை கைப்பற்றுவதில் தாம் சற்று சிரமப்படுவதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நேர்த்தியான பந்து வீச்சு தாக்குதல் இருந்தாலும் விக்கெட்களை கைப்பற்றுவதில் தொடர்ந்து தடுமாறி வருகிறார். இவர் போதிய ஆற்றல் திறனை வெளிப்படுத்திய போதிலும் ஆஸ்திரேலிய அணி தனது வெற்றிகளை தொடர்ந்து குவிந்த வண்ணமே இருக்கிறது. எனவே, அரையிறுதிப் போட்டி நெருங்குவதற்கு முன்னரே இவர், தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.