2019 உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து ரசிகர்களுக்கு விருந்து அளித்து வருகிறது, இந்தியா. தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் பெரிய அளவிலான வெற்றியை பெறாவிட்டாலும் அதன் பின் வந்த ஆஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது, இந்திய அணி. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சற்று தடுமாறிய இந்திய அணி, இறுதியில் தனது அனுபவத்தால் வெற்றியை கண்டது. கேப்டன் விராத் கோலி மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோரின் அரைசதங்களால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது. அதன்பின்னர், பந்துவீச்சாளர்களின் அபார செயல்பட்டால் ஆஃப்கானிஸ்தான் விக்கெட்களை கபளீகரம் செய்து அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. இதில் குறிப்பிடும் வகையில், ஆட்ட நாயகன் விருது பெற்ற பும்ரா மற்றும் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய முகமது ஷமியின் பங்கு ஏராளம்.
2019 உலகக்கோப்பை தொடரின் முதல் 5 போட்டிகளில் 4 வெற்றி பெற்ற இந்திய அணி, இனி வரும் நான்கு போட்டிகளிலும் தனது கவனத்தை செலுத்த வேண்டியுள்ளது. ஏனெனில், இனி வரும் போட்டிகளில் நடப்பு உலகக் கோப்பை தொடரை நடத்தும் பலமிக்க அணியான இங்கிலாந்து, எந்நேரத்திலும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய வெஸ்ட் இண்டீஸ், நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணியையே புரட்டிப்போட்ட இலங்கை ஆகிய நான்கு அணிகளை இந்தியா சந்திக்க உள்ளது.
ஆல்ரவுண்டர் ஆந்திரே ரஸல் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறியது, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சற்று பாதகமாக அமைந்து உள்ளது. இருப்பினும், மற்றொரு ஆல்ரவுண்டரான பிராத்வெயிட் தனது அபார சதத்தால் நியூசிலாந்து அணிக்கு தண்ணி காட்டினார். கடந்த 2016ம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் வீசிய இறுதி ஓவரில் தொடர்ந்து 4 சிக்சர்களை அடித்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடரை வென்று கொடுத்தார், பிராத்வெயிட். எனவே, இவரது அற்புத ஆட்டம் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் எடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் மட்டுமல்லாது, அதிரடி தொடக்க ஆட்டக்காரரான கிறிஸ் கெயில், ஷாய் ஹோப், சிம்ரோன் ஹெட்மயர், கேப்டன் ஜாசன் ஹோல்டர், ஷெல்டான் காட்ரெல் மற்றும் தாமஸ் ஆகியோரின் அபார ஆட்டத்தை இந்திய அணி எதிர்கொள்ள உள்ளது.
இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜேசன் ராய் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு இருப்பதால் வரும் 30 ஆம் தேதி நடைபெறும் இந்திய அணிக்கெதிரான போட்டியில் விளையாடுவதில் சற்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இங்கிலாந்து அணியின் உலகத் தரத்திலான பந்துவீச்சு எதிரணியின் பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானை இழந்து உள்ளதால் இந்திய அணிக்கு சற்று பின்னடைவாக அமைந்துள்ளது.
நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேசத்தை அடுத்த மாதம் இரண்டாம் தேதி இந்திய அணி சந்திக்கவுள்ளது. தற்போது புள்ளிப் பட்டியலில் ஐந்தாமிடத்தில் வகிக்கும் மோர்தசா தலைமையிலான வங்கதேச அணி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது. இருப்பினும், ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசனின் எழுச்சி நிச்சயம் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் சோதிக்கப்படும். நேற்றைய போட்டியில் விளையாடிய இவர், உலக கோப்பை தொடரில் 1000 ரன்களை கடந்த முதலாவது வங்கதேச வீரர் என்ற சாதனையை மட்டுமல்லாமல், ஒரே போட்டியில் ஐம்பது ரன்களையும் பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி யுவராஜ் சிங்கிற்கு அடுத்தபடியாக இத்தகைய சாதனையை புரிந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் படைத்தார். நடப்பு உலக கோப்பை தொடரில் இரு சதத்தையும் ஷாகிப் அல் ஹசன் குவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. எனவே, இவரது அபார ஃபார்ம் இந்திய அணிக்கு சற்று தலைவலியை ஏற்படுத்தக் கூடும்.
அதன் பின்னர் ஜூலை ஆறாம் தேதி இலங்கை அணிக்கு எதிரான தனது கடைசி போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. கடந்த 10 ஆண்டு காலமாக இலங்கை அணிக்கு எதிரான அனைத்து 3 வடிவிலான சர்வதேச போட்டிகளிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வரும் இந்தியா, இந்த குறிப்பிட்ட அணிக்கு எதிராக 61 சதவீத வெற்றி வாய்ப்பை கொண்டுள்ளது. இருப்பினும், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்களை அள்ளிய லசித் மலிங்கா, இந்திய அணிக்கு கடும் சவால் அளிக்கும் வகையில் செயல்பட காத்திருக்கிறார். அதேபோல், ஆல்-ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் சிறப்பாக செயல்பட உள்ளார். சமீப காலங்களில் இந்திய அணியின் பந்துவீச்சை பெரிதும் எதிர்கொண்ட இவர்கள், இந்திய அணியினரின் பலவீனத்தையும் நெருக்கடியையும் அறிந்துள்ளார்கள். ஒட்டுமொத்தத்தில் இனிவரும் போட்டிகளில் இந்திய அணிக்கு மிகுந்த சவால் காத்திருக்கிறது. தொடர்ந்து எவராலும் தோற்கடிக்க முடியாத அணியாக விளங்கும் இந்திய அணி, இனி வரும் போட்டிகளிலும் இத்தகைய பெருமையை தக்க வைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.