2019 உலக கோப்பை தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் சோபியா கார்டன் ஸ்டேடியத்தில் விளையாட உள்ளன. நியூசிலாந்து அணியில் இளம் மற்றும் அனுபவ வீரர்கள் அடங்கிய சரியான கலவையுடன் இம்முறை உலகக் கோப்பை தொடரில் களமிறங்க இருக்கின்றது. இந்த அணியில் இடம் பெற்றுள்ள அனுபவம் வாய்ந்த வீரர்களான கேப்டன் கனே வில்லியம்சன், மார்டின் கப்டில், ராஸ் டெய்லர், டிம் சவுத்தி, டிரென்ட் போல்ட் ஆகியோர் இளம் வீரர்களை வழி நடத்த உள்ளனர்.
மற்றொரு முனையில் இலங்கை அணியின் ஜாம்பவான்களான மஹேலா ஜெயவர்த்தனே, குமார் சங்ககாரா மற்றும் திலகரத்னே தில்ஷன் ஆகியோர் தற்போது அணியில் இல்லை. இருப்பினும், உலக கோப்பை தொடர்களில் இருமுறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரரான லசித் மலிங்கா தற்போது உள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறி ஆஸ்திரேலிய அணியிடம் தோற்று இருந்தது, நியூசிலாந்து அணி. முதலாவது சுற்றில் அனைத்துப் போட்டிகளிலும் வென்றது நியூசிலாந்து அணி. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 33 ரன்களை விட்டுக்கொடுத்து டிம் சவுத்தி 7 விக்கெட்டுகளை அள்ளினார். இதன் மூலம், அந்த அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், உலக கோப்பை தொடர்களில் இதுவரை படைக்கப்பட்டுள்ள நான்கு தலைசிறந்த பந்து வீச்சில் டீம் சவுதியின் பந்துவீச்சும் அடக்கமாகும்.
கடந்த உலக கோபையின் முதலாவது சுற்றில் ஆஸ்திரேலிய அணியை தங்களது சொந்த மண்ணில் எதிர்கொண்ட நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிர்ச்சி அளித்தது. இந்த போட்டியில் குறிப்பிடும் வகையில், டிரென்ட் போல்ட் 5 விக்கெட்களை கைப்பற்றினார். மேலும், அந்தத் தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற மிட்செல் ஸ்டார்க் உடன் இணைந்து தொடரின் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார். இருவரும் இணைந்து 22 விக்கெட்டுகளை அந்த தொடரில் கைப்பற்றியிருந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்தில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். அதற்கு முன்னர், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் கிறிஸ் கெயிலுக்கு பின்னர் உலக கோப்பை தொடரில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் படைத்தார். மேலும், 2015 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார், மார்டின் கப்தில். அந்த தொடரில் 547 ரன்களை இவர் குவித்திருந்தார்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி தொடர்ந்து அந்த தொடரில் 8 வெற்றிகளை குவித்து இருந்தது. தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தனது கடுமையான போராட்டத்தை நியூசிலாந்து வெளிப்படுத்தி இருந்தாலும் துரதிஷ்டவசமாக தோற்றது. 2015 உலகக் கோப்பை தொடரில் குமார் சங்கக்கார மற்றும் திலகரத்னே தில்ஷன் ஆகியோர் இலங்கை அணியின் பேட்டிங் தூண்களாக விளங்கினர். திறமையான லஹிரு திருமேனி இம்முறை உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2015 உலக கோப்பை தொடரில் நான்கு தொடர் சதங்களை விளாசினார், குமார் சங்ககரா. காலிறுதிப் போட்டியில் தோல்வி பெற்று தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேறியது. தற்போது இந்த அணி மறுகட்டமைப்பில் உள்ளது.
இதுவரை 6 அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது நியூஸிலாந்து அணி முதன்முதலாக 2015ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 1996 ஆம் ஆண்டு ஃபீனிக்ஸ் பறவை போல் எழுந்த இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. மேலும், இந்த அணி இரு முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை சந்தித்த உலக கோப்பை போட்டிகளில் 6 முறை இலங்கை அணியும் நான்கு முறை நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளன. தற்போதைய ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் நியூசிலாந்து அணி நான்காம் இடத்திலும் இலங்கை அணி 9ஆவது இடத்திலும் உள்ளன. எனவே, இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு மேற்கண்டவையை போதிய காரணங்களாக உள்ளன.