2019 உலக கோப்பை தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேற்று மோதின. நேற்றைய போட்டியில் இந்த அணி தான் நிச்சயம் வெற்றி பெறும் என்று எவராலும் கணிக்க முடியாத ஒன்றாகவே இருந்தது. ஆனால், அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் முதலில் பந்து வீசிய வெஸ்ட் இண்டீஸ் அணி 105 ரன்களுக்கு பாகிஸ்தான் அணியை சுருட்டியது. இரண்டாவது இன்னிங்சில் வெஸ்ட்இண்டீஸ் 106 என்ற எளிய இலக்குடன் களம் இறங்கியது. அதிரடி தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் தமது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி அரை சதம் கடந்தார். பாகிஸ்தானின் முகமது அமீர் தமது பந்துவீச்சு பணியினை திறம்பட கையாண்டு 3 விக்கெட்களை அள்ளினார். இருப்பினும், 14 ஓவர்கள் முடியும் முன்னே வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று அசத்தியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததற்கான மூன்று காரணங்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1.பவுன்ஸர் வகை பந்துவீச்சில் சிறப்பாக எதிர்கொள்ளவில்லை:
வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் தான் சிறப்பாக செயல்படுவார்கள் என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில், அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் மிக அருமையாக செயல்பட்டனர். குறிப்பாக, ஷார்ட் பந்துகளை அவ்வபோது வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை தடுமாற செய்தனர். இதனால், சர்ப்ராஸ் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி இவர்களின் ஷார்ட் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் தங்களது விக்கெட்களை விரைவிலேயே இழந்து வந்தனர். இனிவரும் போட்டிகளில் இதுபோன்று நிகழாமல் இருக்க போதிய நடவடிக்கைகளை பாகிஸ்தான் அணி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். ஒருவேளை மீண்டும் இவர்கள் இவ்வகை பந்துவீச்சில் ஆட தயங்கினால், ஆட்டத்தின் முடிவு எதிர் அணிக்கு சாதகமாக தான் முடியும்.
#2.தவறான ஷாட் தேர்வுகள்:
தங்களது அபார பந்துவீச்சு தாக்குதலை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சாளர்களின் பிடியிலிருந்து பாகிஸ்தான் பேட்ஸ்மென்கள் தப்ப முடியவில்லை. பக்கர் ஜமான் மற்றும் பாபர் அஸாம் ஆகியோர் சிறப்பாக ஆட முற்பட்டனர். இருப்பினும், இவர்களின் தவறான ஷாட் தேர்வால் விரைவிலேயே விக்கெட்களை இழக்க நேரிட்டது. களத்தில் நங்கூரம் போட முயன்ற முகமது ஹபீஸிற்கு பக்கபலமாக வேறு எவரும் துணை நிற்கவில்லை. இதேபோல், இமாத் வாசிம் மற்றும் ஹசன் அலி ஆகியோரும் தவறான ஷாட் தேர்வுகளால் தங்களது விக்கெட்களை இருந்தனர். எனவே, பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் இனிவரும் போட்டிகளில் இதுபோன்ற ஷாட் தேர்வில் சற்று முன்னேற்றம் அடைய வேண்டும்.
#3.போதிய பார்ட்னர்ஷிப்களை உருவாக்கவில்லை:
நல்லதொரு ஸ்கோரை குவிக்க சில பேட்ஸ்மேன்கள் சக வீரர்களுடன் இணைந்து பெரிய அளவிலான பார்ட்னர்ஷிப்பை உருவாக்க வேண்டும். நேற்று விளையாடிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் யாவரும் இதனை மனதில் நினைத்து விளையாடவில்லை. பக்கர் ஜமான் மற்றும் பாபர் அஸாம் ஆகியோர் களத்தில் நினைக்க முற்பட்டபோது தங்களது விக்கெட்களை தேவையில்லாமல் இழந்தனர். 16 பந்துகளை சந்தித்த பக்கர் ஜமான் 22 ரன்களை எடுத்திருந்த போது தமது விக்கெட்டை இழந்தார். ஆந்திரே ரஸ்ஸல் வீசிய பவுன்ஸர் வகை பந்து இவரது ஹெல்மெட்டை பதம் பார்த்து ஸ்டம்பை குறிவைத்தது, ஷார்ட் பந்துகளில் சிறப்பாக செயல்பட்ட ஒரே பாகிஸ்தான் வீரரான பாபர் அஸாம். அவ்வகை பந்திலேயே தமது விக்கெட்டையும் அவர் பறிகொடுத்தார்.