2019 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது வாரம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. ஏனெனில், 3 ஆட்டங்கள் தொடர்மழையால் கைவிடப்பட்டன. இதன் காரணமாக, கைவிடப்பட்ட ஆட்டங்கள் மற்றொரு நாட்களில் நடைபெறுமா எனவும் கேள்விகள் எழுந்தன. பொதுவாக, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு மட்டுமே இதுபோன்ற மாற்று நாள் ஐசிசி ஒதுக்கும். இப்படிப்பட்ட அச்சுறுத்தலான மழைக்கும் இடையே சில தரமான போட்டிகள் நடைபெற்றன. குறிப்பாக, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியும் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய போட்டியும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. அவற்றில், அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் பகுதிநேர பந்துவீச்சாளராக பந்துவீசி விக்கெட்களை கைப்பற்றி எதிரணி வீரர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கினர். அவற்றில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச், பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் பந்துவீசி ஒரு விக்கெட்டையும் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் தமது பந்துவீச்சில் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். எனவே, இது போல கடந்த உலகக் கோப்பை தொடர்களில் விக்கெட்டுகளை கைப்பற்றிய பிரபலமான பேட்ஸ்மேன்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#3.ஸ்டீபன் பிளமிங்:
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீபன் பிளமிங், தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து வருகிறார். இவரது பயிற்சியாளர் பணிக்கு முன்னர், வெற்றிகரமான கிரிக்கெட் வீரராக சர்வதேச கிரிக்கெட்டில் விளங்கினார். நியூசிலாந்து அணிக்காக 4 உலக கோப்பை தொடர்களில் நீண்டகாலமாக அங்கம் வகித்து வந்தார். அவற்றில் குறிப்பிடும் வகையில், மும்முறை அந்த அணியை தனது தலைமையின் கீழ் வழி நடத்திச் சென்றுள்ளார். மிகச்சிறந்த பேட்ஸ்மேனான இவர், பந்து வீசுவது மிகவும் அரிதான ஒன்றே.
1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களது இரண்டாவது உலக கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 307 ரன்கள் குவித்தது, நியூசிலாந்து அணி. அப்போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் எதிர்பாராத விதமாக பந்துவீச வந்தார், ஸ்டீபன் பிளமிங். அவர்கள் அனைவரையும் ஆச்சரியம் அளித்தது மட்டுமல்லாது, நெதர்லாந்து வீரரை ஸ்சீவ் தமது பந்துவீச்சால் ஆட்டமிழக்கச் செய்தார். அவரது ஒட்டுமொத்த கிரிக்கெட் கைப்பற்றப்பட்ட ஒரே மற்றும் முதல் விக்கெட் இதுவாக அமைந்தது. இதன் பின்னர், நியூஸிலாந்து அணி அந்த போட்டியில் எளிதாக வென்றது.
#2.ஃபாப் டூபிளெசிஸ்:
உலகத் தரத்திலான பேட்ஸ்மேன்களில் ஒருவராக வலம் வரும் தற்போதைய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனான டுபிளிசிஸ், தமது கிரிக்கெட் வாழ்வில் அவ்வப்போது லெக் ஸ்பின்னராகவும் செயல்பட்டு வந்துள்ளார். இதுவரை 2011 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலக கோப்பை தொடர்களில் அங்கம் வகித்த இவர், முதல்முறையாக 2019 உலக கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்க அணியை வழிநடத்துகிறார்.
2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதல்முறையாக பந்துவீச முன்வந்தார். தாம் வீசிய 5 ஓவர்களில் கச்சிதமாக பந்துவீசி விக்கெட் எதுவும் இன்றி திரும்பினார். அதன் பின்னர், இந்திய அணியை தென் ஆப்பிரிக்கா சந்தித்தது. முதலாவது பவர் பிளேயில், வீரேந்திர சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இணை 87 ரன்கள் குவித்து இருந்தது. அவற்றில் குறிப்பிடும் வகையில், விரேந்திர சேவாக் மைதானத்தின் அனைத்து புறமும் சிக்சர்களை அடித்த வண்ணம் இருந்தார். இவ்வேளையில், டுபிளிசிஸை பந்துவீச அழைத்தார், அப்போதைய தென்ஆப்பிரிக்க கேப்டன் கிரீம் ஸ்மித். அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் சிறப்பாக பந்து வீசி 73 ரன்களை கடந்த விரேந்திர சேவாக்கை ஆட்டமிழக்கச் செய்தார், டுபிளிசிஸ். இந்திய அணிக்கு இந்த முதல் விக்கெட் மிகவும் அதிர்ச்சியளித்தது. அதுபோலவே, 2015 உலகக் கோப்பை தொடரிலும் வந்து வீசியுள்ளார். ஆனால், துரதிஷ்டவசமாக ஒரு விக்கெட்டை கூட இவர் கைப்பற்றிவில்லை. இதுவரை ஒருநாள் போட்டிகளில் இரு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவற்றில் ஒன்று உலக கோப்பை தொடரில் கைப்பற்றப்பட்டதாகும்.
#1.ஏ.பி.டிவில்லியர்ஸ்:
டிவில்லியர்ஸால் முடியாதது ஏதேனும் உண்டா என்ற கேள்விக்கு இல்லை எனவே பல லட்சம் கிரிக்கெட் ரசிகர்களும் பதிலளிப்பர். ஏனெனில், கிரிக்கெட் உலகில் பல வித சாதனைகளை புரிந்துள்ளார், டிவிலியர்ஸ். 2007, 2011 மற்றும் 2015ம் ஆண்டுகளில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் தென்ஆப்பிரிக்க அணியில் அங்கம் வகித்தார், டிவில்லியர்ஸ். கடந்த வருடம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில், திடீரென தனது சர்வதேச கிரிக்கெட் ஓய்வினை அளித்தார். அதன் பின்னர், தற்போதைய உலக கோப்பையில் மீண்டும் தென்ஆப்பிரிக்க அணியில் சேர விருப்பம் தெரிவித்த நிலையில், அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இவரின் விண்ணப்பத்தை ஏற்க மறுத்தது.
மைதானத்தின் அனைத்து திசைகளிலும் தனது அபார பேட்டிங்கால் பந்தை சிதறடித்த இவர், சிலமுறை விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 2015 உலகக் கோப்பை போட்டிகளில் அவ்வப்போது பந்துவீசி விக்கெட்டுகளை கைப்பற்றினார். அயர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் தமது பந்துவீச்சால் எதிரணி பேட்ஸ்மேனான ஜான் மூனியின் விக்கெட்டை கைப்பற்றி ஆச்சரியம் அளித்தார். அதன் பின்னர், பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியிலும் பந்துவீசி அந்த அணியின் மூத்த பேட்ஸ்மேனான யூனஸ் கானின் விக்கெட்டை கைப்பற்றினார். அதற்கு அடுத்து, யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தமது பந்துவீச்சால் விக்கெட்டுகள் கைப்பற்றி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளித்தார். மீண்டும் ஒரு முறை நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தமது பந்துவீச்சில் டிவிலியர்ஸ் எந்த ஒரு விக்கெட்டையும் கைப்பற்றவில்லை.