ஐசிசியின் மிகப்பெரிய திருவிழாவான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. பன்னிரண்டாவது உலக கோப்பை தொடர் இம்முறை பத்து அணிகளை மட்டுமே கொண்டு நடத்தப்படுகிறது. இந்தப் பெருமை மிகுந்த தொடரில் பல அணிகள் தங்களது சிறந்த போராட்டத்தினை வெளிப்படுத்தி இருந்தாலும் அவற்றில் ஐந்து அணிகள் மட்டுமே இதுவரை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளன. இவ்வகையான சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு மிகுந்த அற்பணிப்பும் தகுந்த திறமையும் எந்த ஒரு அணிக்கும் வேண்டும். இதுவரை உலக கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற அணிகள் நூறு சதவீத வெற்றி வாய்ப்பினை வைத்துள்ளனர். அவற்றை இந்த தொகுப்பில் காணலாம்.
#1.ஆஸ்திரேலியா - 2003
1999ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணி 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் துவங்கும் முன்னரே பலம் மிகுந்த அணியாக உருவெடுத்தது. ஆடம் கில்கிறிஸ்ட், பிராட் ஹாக், மெக்ராத், டேரன் லீ மேன், ரிக்கி பாண்டிங், மேத்யூ ஹைடன் மற்றும் பிரட்லீ போன்ற மிகப்பெரும் ஜாம்பவான்கள் இந்த அணியில் இடம் பெற்றிருந்தனர். இந்தியா, ஜிம்பாப்வே இங்கிலாந்து, பாகிஸ்தான், நெதர்லாந்து மற்றும் நமீபியா போன்ற அணிகளுடன் ஏ குரூப்பில் இணைந்தது, ஆஸ்திரேலிய அணி. முதலாவது சுற்றில் எதிர் அணிகளை வென்று புள்ளிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. அதன் பின்னர், சூப்பர் சிக்சர் சுற்றுக்குள் நுழைந்து கென்யா, இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளை துவம்சம் செய்தது ஆஸ்திரேலியா. இதனையடுத்து நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கையோடு இறுதிப்போட்டியில் இந்திய அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது முறையாக உலக சாம்பியனானது ஆஸ்திரேலிய அணி.
#2.ஆஸ்திரேலியா - 2007
3 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா அணி 2007ஆம் ஆண்டு தொடரிலும் எவராலும் தோற்கடிக்க முடியாத அணியாக திகழ்ந்தது. முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியா அணி குரூப் சுற்றில் ஸ்காட்லாந்து, நெதர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளை வெளுத்து வாங்கியது. அதன்பின்னர், இலங்கை, நியூஸிலாந்,து தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அயர்லாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுடன் இணைந்து சூப்பர்-8 சுற்றில் அடியெடுத்து வைத்தது . அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை சந்தித்த ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இலங்கை அணியை 63 ரன்கள் வித்தியாசத்தில் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது, ஆஸ்திரேலியா அணி. மேலும், உலகக்கோப்பை தொடர்களில் இரண்டாவது முறையாக 100% வெற்றி வாய்ப்பை கொண்ட அணி என்ற சாதனையை படைத்தது, ஆஸ்திரேலியா.
#3.வெஸ்ட் இண்டீஸ் - 1975
முதல் முறையாக நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர் முழுவதும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தியது. கிளைவ் லாய்ட் தலைமையிலான இந்த அணி முதலாவது ஐசிசி கிரிக்கெட் தொடரை வென்று சாதனை படைத்தது. இதில் குறிப்பிடும் வகையில், வெஸ்ட் இண்டீஸ் அணி செய்த சாதனை என்னவென்றால், தொடரில் எந்த ஒரு அணியாலும் இந்த அணியை தோற்கடிக்க முடியவில்லை. தொடரின் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற உடனே பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நூலிழையில் வெற்றி பெற்றது, வெஸ்ட் இண்டீஸ். அதன் பின்னர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றும் இறுதி சுற்றுக்கு முன்னேறியது, இறுதி சுற்றிலும் மீண்டும் ஒரு முறை ஆஸ்திரேலிய அணியை சந்தித்து 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதலாவது உலக கோப்பை தொடரின் சாம்பியன் ஆனது வெஸ்ட்இண்டீஸ்.
#4.வெஸ்ட் இண்டீஸ் - 1979
மீண்டும் ஒருமுறை கிளைவ் லாய்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது உலக கோப்பை தொடரில் பங்கேற்றது. இந்த தொடரில் இந்தியா, இலங்கை மற்றும் நியூசிலாந்து அணியுடன் இணைந்து பி குரூப்-இல் இணைந்தது, வெஸ்ட் இண்டீஸ். இந்திய அணிக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்திலும் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது, வெஸ்ட் இண்டீஸ். பாகிஸ்தான் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் ஒரு முறை இறுதிப் போட்டியில் முன்னேறி சாதனை படைத்தது. பரபரப்பான இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்த தொடரிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி எந்த ஒரு தோல்வியும் சந்திக்க அணியாக திகழ்ந்தது. அதன் பின்னர். 1983ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் தான் தனது முதல் தோல்வியைச் சந்தித்தது, வெஸ்ட்இண்டீஸ்.
#5.இலங்கை - 1996
1996ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் தொடரை வெல்லும் அணிகளாக கணிக்கப்பட்டன. இருப்பினும், மூன்றாவது ஆசிய அணியான இலங்கை எவரும் எதிர்பாராத வகையில் சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆஸ்திரேலியா, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே மற்றும் கென்யா அணிகளுடன் 'ஏ' குரூப்பில் இணைந்தது, இலங்கை அணி. இலங்கையில் நிலவி வந்த பதற்றம் காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான ஆட்டம் தடைபட்டது. அதன் பின்னர், மீதமுள்ள 3 அணிகளுடன் விளையாடிய இலங்கை அணி தொடர்ந்து 3 வெற்றிகளை குவித்தது. இதனையடுத்து கால் இறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகளில் முறையே இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளை தோற்கடித்து இறுதி போட்டிக்கு முன்னேறியது, இலங்கை அணி. முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியா அணி பலமிகுந்து காணப்பட்டாலும் இறுதிப்போட்டியில் இலங்கை அணியின் சாம்பியன் தாகத்தை தீர்த்தார், அரவிந்த டீ சில்வா. பாகிஸ்தானின் லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று உலக கோப்பை சாம்பியனான 100% வெற்றி வாய்ப்பை கொண்ட முதல் ஆசிய அணி என்ற பெருமையையும் படைத்தது, இலங்கை அணி.