பன்னிரண்டாவது உலக கோப்பை தொடர் வருகிற 30-ஆம் தேதி இங்கிலாந்தில் துவங்க உள்ளது. தொடரின் இறுதிப் போட்டி ஜூலை மாதம் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. 10 சர்வதேச அணிகள் விளையாடும் இந்த தொடரில் 11 மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்திய அணி கோப்பையை வெல்லும் என பலரது கணிப்பாக உள்ளது. 1983ஆம் ஆண்டு இங்கிலாந்து மைதானத்தில் தான் தனது முதலாவது உலகக் கோப்பையை வென்றது, இந்திய அணி. மீண்டும் 28 ஆண்டுகளுக்குப் பின்னர், 2011ஆம் ஆண்டு தனது இரண்டாவது கோப்பையை வென்றது, இந்திய அணி. 2003 ஆம் ஆண்டு மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் முறையே சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் தொடர் நாயகன் விருதை வென்றுள்ளனர். இந்த தொகுப்பில் உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன்களை பற்றி காணலாம்.
#3.ராகுல் டிராவிட்:
இந்திய அணியின் சுவர் என்று வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிட், உலக கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை குவித்த இந்திய பேட்ஸ்மேன்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார். இவர் 22 உலக கோப்பை போட்டியில் விளையாடி 860 ரன்களை குவித்துள்ளார். மேலும், இவரது சராசரி 61 என்று உள்ளது. இவர் மூன்று உலக கோப்பை தொடர்களில் 1999ஆம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை விளையாடி உள்ளார். 1999 ஆம் ஆண்டில் தனது முதலாவது உலக கோப்பை தொடரில் விளையாடிய இவர், 8 போட்டிகளில் 461 ரன்களை குவித்து தொடரின் அதிகபட்ச ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அடுத்த உலக கோப்பை தொடரில் 11 போட்டிகளில் விளையாடி 318 ரன்களை குவித்துள்ளார். 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடர் ஜாம்பவான் டிராவிட்டுக்கு இறுதி உலக போட்டித் தொடராக அமைந்தது. மேலும், ஒட்டுமொத்தமாக 344 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10,889 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 12 சதங்களும் அடங்கும். 15 வருட கால ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையை 2011ஆம் ஆண்டு முடித்துக்கொண்டார், டிராவிட்.
#2.சவுரவ் கங்குலி:
இந்திய அணியின் "தாதா" என்று புகழப்படும் கங்குலி, இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். கொல்கத்தாவைச் சேர்ந்த இவர் 21 உலக கோப்பை போட்டிகளில் விளையாடி உள்ளார். அவற்றில் மூன்று சதங்கள் உட்பட 1006 ரன்களை குவித்துள்ளார். இவர் 1999, 2003 மற்றும் 2007 வரை மூன்று வெவ்வேறு உலக கோப்பை தொடரில் விளையாடி உள்ளார். 1999ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் 8 போட்டியில் விளையாடி 379 ரன்களை குவித்துள்ளார். 2003ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரின் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாமிடம் பெற்றார். தொடரின் 11 போட்டிகளில் விளையாடி 465 ரன்களை குவித்துள்ளார். அதன் பின்னர், நடைபெற்ற 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் மூன்று போட்டிகளில் 162 ரன்கள் குவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 311 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 11,363 ரன்கள் குவித்துள்ளார். இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான சவுரவ் கங்குலி, 2003 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரை இந்திய அணியை அழைத்துச்சென்றார்.
#1.சச்சின் டெண்டுல்கர்:
உலக கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார், சச்சின் டெண்டுல்கர். இவர் விளையாடிய 45 உலகக்கோப்பை போட்டிகளில் 2,278 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் பல சாதனைகளையும் புரிந்துள்ளார். இவர் மொத்தம் ஆறு உலகக் கோப்பை தொடர்களில் விளையாடியுள்ளார். முதல் முறையாக 1992ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் 8 போட்டிகளில் விளையாடி, 3 அரைசதம் உட்பட 283 ரன்களை குவித்துள்ளார். அதன் பின்னர், நடைபெற்ற 1996 உலக கோப்பை தொடரில் 523 ரன்களை குவித்தார். தொடர்ந்து அடுத்தடுத்து வந்த உலக கோப்பை தொடர்களில் முறையே 253, 673, 64, 482 ரன்களை குவித்தார். இதில் 2003ஆம் ஆண்டு தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். 2007 ஆம் ஆண்டு மட்டும் தான் இவர் சிறப்பாக விளையாடவில்லை. தனது இறுதி உலகக் கோப்பை தொடர் 2011 தொடரில், அதிக ரன்கள் குவித்த பட்டியலில் இரண்டாமிடம் வகித்தார். ஒட்டு மொத்தத்தில் இவர் விளையாடியுள்ள 463 ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்கள் குவித்துள்ளார்.