சச்சின் மற்றும் பிரையன் லாராவை விட சிறந்த பேட்ஸ்மேனாக கோலி விளங்குகிறார் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டனான மைக்கேல் வாகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஆஸ்திரேலிய தொடர் தொடங்கிய நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றியை சுவைத்திருந்தது இந்திய அணி. இத்தொடரின் இரண்டாவது போட்டி பெர்த்திலுள்ள ஓப்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. முதல் இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 306 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹாரிஸ் 70 ரன்களை எடுத்திருந்தார், இஷாந்த் ஷர்மா 4 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார். பின்பு தனது முதல் இன்னிங்சை எதிர்கொள்ள களமிறங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் தொடக்கம் முதலே விக்கெட்களை இழந்து தள்ளாடிக்கொண்டிருந்தனர். பின்பு களம் கண்ட கோலி நிதானமாக ஆடி இந்தியாவின் ஸ்கோரை நிலைபெறச் செய்தார். தனது 25 ஆவது சதத்தை பூர்த்தி செய்த கோலி, ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை நெருங்கச் செய்தார்.
கோலி 123 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பேட் கம்மின்ஸ் வீசிய பந்தில் டிரைவ் ஆட முற்பட்டு அவுட் ஆனார். பீட்டர் ஹன்ட்ஸ்கொம் பிடித்த கேட்ச் தெளிவானதுதான் என மூன்றாம் நடுவர் அவுட் கொடுக்க, அதிருப்தியுடன் வெளியேறினார் கேப்டன் கோலி.
கோலியின் இந்த சதம் மூலம், ஆஸ்திரேலியாவின் ஜாம்பவானான டான் ப்ராட்மானுக்கு அடுத்தபடியாக குறைந்த இன்னிங்சில்(127 இன்னிங்ஸ்) 25-ஆவது சதத்தை எட்டிய வீரர் என்ற பெருமையை பெற்றார். டான் ப்ராட்மான் 68 இன்னிங்சில் 25-ஆவது சதத்தை அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா மண்ணில் கோலிக்கு இது 6-ஆவது சதம், இதனிடையே கோலியின் சதத்தை பற்றி கருத்து கூறிய முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் “ கோலி போன்ற பிளேரை இதுவரை பார்த்ததில்லை, இக்கருத்தின் மூலம் சச்சின், ரிக்கி பாண்டிங் மற்றும் பிரையன் லாராவை நான் அவமதிக்கவில்லை, அனைத்து விதமான கிரிக்கெட்டை கருத்தில் கொண்டே இவ்வாறு கூறுகிறேன்” என்று கூறினார்.
கடந்த சில மாதங்களாக இந்தியாவின் பந்துவீச்சு அபாரமாக உள்ளது என்று குறிப்பிட்ட வாகன் “ஆஸ்திரேலியாவுக்கு சிம்மசொப்பனமாக விளங்குவது இந்தியா பௌலர்கள் தான், ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களை விட இந்திய பந்துவீச்சாளர்கள் களத்திலிருந்து அதிக பௌன்ஸை உறிஞ்சுகின்றனர்.” என்று கூறினார்.
ஆஸ்திரேலியா ஜாம்பவானான ஆலன் பார்டரும் கோலியை புகழ்ந்துள்ளார். லாரா, சச்சின், மற்றும் பாண்டிங்கின் சாதனைகளை முறியடிக்க வல்லவர் கோலி என்று கூறிய அவர் “கோலி தனது கிரிக்கெட் வாழ்வை முடிக்கும் தருவாயில், ஜாம்பவான் வீரர்களின் சாதனைகளை சமன் அல்லது முறியடித்திருப்பார்” என்று ஆலன் பார்டர் கூறினார்.
ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் 243 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது. நிதானமாக விளையாடிய உஸ்மான் கவாஜா 73 ரன்களை எடுத்திருந்தார். இது ஆஸ்திரேலியா இன்னிங்சின் அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. முகமது ஷமி அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்களை சாய்த்தார். எனவே இந்த ஆண்டில் வெளிநாட்டு தொடர்களில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார் முகமது ஷமி. இந்தியாவுக்கு 287 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.
இரண்டாவது இன்னிங்சில் இலக்கை எட்டி இந்திய வெற்றிபெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.