ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஏழு வயது சிறுவனான ஆர்ச்சி ஷில்லர் ஆஸ்திரேலிய அணியை மெல்போர்னில் வருகின்ற புதன்கிழமை டிசம்பர் 26 துவங்கவிருக்கும் பாக்ஸிங் டே டெஸ்ட் என அழைக்கப்படும் மூன்றாம் டெஸ்ட் போட்டியில் கேப்டன் டிம் பெய்ன் உடன் இணைந்து கௌரவ கேப்டன்ஷிப்பில் ஈடுபடுவார் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது. அரிய வகை இதய நோயால் அவதிப்படும் ஏழு வயது லெக் ஸ்பின்னரான ஆர்ச்சி ஷில்லர் இந்திய அணிக்கு எதிராக பாக்ஸிங் டே மூண்றாம் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மேக்-எ-விஸ் ஃபவுன்டேஷன் மூலம் உலகத்தின் தலை சிறந்த வீரர்களுடன் இணைத்து விளையாடும் வாய்ப்பினை பெற்றுள்ளார்.
கடந்த சனிக்கிழமை ஏழு வயதை எட்டிய சிறுவன் ஆர்ச்சி ஷில்லர் இன்று மெல்போர்ன் யாரா பூங்காவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி ஒன்றில் இரு அணி கேப்டன்களான டிம் பெய்ன் மற்றும் விராட் கோலியுடன் மேடையை பகிர்ந்து கொண்டார்.
ஆஸ்திரேலியா அணி ஐக்கிய அரபு நாடுகளில் பாகிஸ்தானிற்கு எதிரான தொடர்களில் விளையாடி கொண்டிருந்த பொழுது சிறுவன் ஆர்ச்சி ஷில்லருக்கு ஆஸ்திரேலியா அணி பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கரிடமிருந்து இந்திய அணிக்கு எதிரான மூன்றாம் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க அழைப்பு வந்தது. அதற்கான பயிற்சிகளை அவர் அடிலெய்ட் டெஸ்ட் போட்டிக்கு முன்னர் பெற்றார்.
ஆஸ்திரேலியாவின் தலை சிறந்த ஸ்பின்னர் நாதன் லயனின் ரசிகரான இவர் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரிடம் தான் நிச்சயமாக விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்துவேன் என கூறியுள்ளார்.
இவர் தான் பிறந்த மூன்றாம் மாதத்திலேயே முக்கிய இதய அறுவை சிகிச்சையை பெற்றுள்ளார், சிகிச்சை சுமார் ஏழு மணி நேரம் வரை நீடித்து உள்ளது. இன்னும் ஆறுமாதங்கள் கழித்து தனது மூன்றாம் இதய அறுவை சிகிச்சையின் வலியை தாங்க உள்ளார் ஷில்லர்.
சிறுவனின் தந்தை அவனது லட்சியத்தை கேட்ட பொழுது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் கேப்டனாக வேண்டும் என கூறியிருக்கிறார். அது தற்போது மேக்-எ-விஸ் ஃபவுன்டேஷன் மூலமாக நிறைவேற உள்ளது.
மெல்போர்ன் பூங்காவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெய்ன் கூறியதாவது "சில நேரங்களில் நாம் ஒரு வாழ்க்கையை வாழ்கிறோம், அது நன்றாக போகிக்கொண்டிருக்கும், ஆனால் சில நேரங்களில் உங்கள் சொந்த வாழ்க்கையில் நீங்கள் நுகரப்படுவீர்கள். அவ்வகையில் இந்த சிறுவன் எங்கள் அணியில் இடம்பெறவிருப்பது எங்களுக்கு பெரிதாக ஊக்குவிக்கும்" என்றார்.
இது வரை நடந்த இரு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அடிலெயிடிலும் ஆஸ்திரேலியா அணி பெர்த்திலும் வெற்றி பெற்று தொடர் 1-1 என சம நிலையில் உள்ளது. டிசம்பர்26 ஆம் தேதி புதன்கிழமை மெல்போர்னில் துவங்கவிருக்கும் மூன்றாவது டெஸ்டில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்க இரு அணியும் களத்தில் கடுமையாக போட்டியிடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதே போல் சிறுவன் ஆர்ச்சி ஷில்லர் தனது அணியை வழிநடத்தி மைதானத்திற்குள் வரவிருக்கும் காட்சியும் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
எழுத்து: ராம் குமார்
மொழியாக்கம்: காமாட்சி சுந்தரம்