வருகின்ற ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை தொடர் நடத்தப்பட உள்ளது. அந்த உலக கோப்பை தொடருக்காக அனைத்து நாடுகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் நமது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த உலக கோப்பை தொடரில் விளையாட வேண்டுமா என்று பலரது கேள்விகளுக்கு ஆளானார். ஆனால் தோனி கட்டாயம் உலக கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்று நமது இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங் தோனி குறித்து கூறியுள்ளார். அவர் கூறியதைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.
மகேந்திர சிங் தோனி என்றாலே அவருக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. அணி எவ்வளவு பதட்டத்தில் இருந்தாலும் அதனை மிக பொறுமையாக கையாளக் கூடிய திறமை படைத்தவர். இவரது இந்த பொறுமைக்கு தான், பல ரசிகர்கள் தோனிக்கு உள்ளனர். அது மட்டுமின்றி இந்திய அணிக்கு பல போட்டிகளில் கேப்டனாக இருந்து பல சாதனைகளை படைத்துள்ளார். அந்த சாதனைகளில் மிக முக்கியமான சாதனை என்னவென்றால், இரண்டு முறை உலக கோப்பையை வென்று தந்த கேப்டன் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரு அணிக்கு அதிக முறை கேப்டனாக இருந்தவர்களின் பட்டியலில் தோனி முதல் இடத்தில் இருக்கிறார். ஆனால் தோனி கடந்த 2018 ஆம் வருடத்தில் சிறப்பாக செயல்படவில்லை. அனைத்து போட்டிகளிலுமே சொதப்பி, பலரது விமர்சனங்களுக்கு ஆளானர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த 2018 ஆம் வருடத்தில் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.
இவர் இவ்வாறு விளையாண்டால், உலக கோப்பை தொடரில் எப்படி இவரால் சிறப்பாக செயல்பட முடியும் என்று பலரும் இவரை விமர்சித்து வந்தனர். அதுமட்டுமின்றி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பல ஜாம்பவான்கள் தோனிக்கு அறிவுரை கூறி வந்தனர். முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் கூறி வந்தனர்.
இவ்வாறு பல விமர்சனங்களையும் தாண்டி இந்த 2019 ஆம் வருடத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரில், ஒருநாள் போட்டியில் தொடர்ந்து மூன்று அரை சதங்களை விளாசினார். தன்னை விமர்சித்த அனைவருக்கும் தனது பேட்டிங்கின் மூலம் பதிலடி கொடுத்தார். இருந்தாலும் தோனி உலக கோப்பை தொடரில் விளையாட வேண்டுமா?? என்று பலரது கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக தோனியை குறித்து யுவராஜ் சிங் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியது என்னவென்றால், "தோனியிடம் சிறந்த கிரிக்கெட் அறிவு உள்ளது. அது மட்டுமின்றி விக்கெட் கீப்பராக போட்டியை கண்காணிக்க அதுதான் சிறந்த இடம். அந்த பணியை பல வருடங்களாக அவர் சிறப்பாக செய்து வருகிறார். அது மட்டுமின்றி சிறந்த கேப்டனாகவும் இருந்தவர். விராட் கோலிக்கும் மற்றும் இளம் வீரர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாக இருந்து வருகிறார். அணி இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் பொழுது சிறப்பான முடிவுகளை எடுக்கும் திறமை இவரிடம் அதிகம் உள்ளது. அதற்காகவே இவர் உலக கோப்பை தொடரில் கட்டாயம் விளையாட வேண்டும்" என்று தோனியை குறித்து யுவராஜ் சிங் கூறியுள்ளார்.