2011 உலக கோப்பையில் யுவராஜ் சிங் தொடர் நாயகனான வரலாறு

யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்

2011 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா கோப்பையை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது யுவராஜ் சிங்கின் ஆல் ரவுண்ட் ர்பாஃர்மன்ஸ் தான். புற்றுநோய் பாதித்த நிலையிலும் நாட்டுக்காகவும் தான் நேசித்த விளையாட்டுக்காகவும் வலியை பொறுத்துக்கொண்டு திறமையை வெளிப்படுத்தியவர் யுவராஜ் சிங். யுவராஜ் சிங்கின் பங்களிப்பு 2011 உலகக் கோப்பையில் எவ்வளவு முக்கியமாக இருந்தது என்பது குறித்த விரிவான தொகுப்பை காணலாம்.

2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு தோனியின் கேப்டன்சிப்பிற்க்கு அடுத்து மிக முக்கியமான காரணமாக அமைந்த ஒன்று யுவராஜ் சிங்கின் ஆல் ரவுண்ட் ஆட்டம் தான். அந்த தொடரில் தான் ஒரு அசைக்க முடியாத மேட்ச் வின்னர் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருந்தார் யுவுராஜ் சிங். பேட்டிங்கில் மட்டுமின்றி தனது சுழல் பந்து வீச்சிலும் முத்திரை பதித்த யுவராஜ் சிங் தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றி அசத்தினார்.

லீக் சுற்றில் யுவராஜ் சிங்

தொடரின் லீக் சுற்றில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடிய யுவராஜ் சிங் அரை சதம் அடித்து இந்தியா வலுவான ஸ்கோரை எட்ட காரணமாக அமைந்தார். இருப்பினும் இந்த போட்டி யாரும் எதிர்பாராத வகையில் டையில் முடிந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் யுவராஜ் அடித்த சதம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகச்சிறந்த ஆட்டங்களில் ஒன்று. துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்த சமயத்தில் களமிறங்கிய யுவராஜ் அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தது மட்டுமில்லாமல் சதம் அடித்தும் அசத்தினார். அதே போட்டியில் இரண்டு விக்கெட் விழ்த்தி ஆட்ட நாயகன் விருதையும் தட்டி சென்றார்.

காலிறுதியில் யுவராஜ் சிங்

2011 உலகக் கோப்பை தொடரில் இந்திய ரசிகர்களின் மனம் கவர்ந்த போட்டிகளில் ஒன்று ஆஸ்திரேலியாவிற்கு எதிரான காலிறுதி ஆட்டம். 260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இளம் வீரர் ரெய்னாவுடன் கைகொடுத்த யுவராஜ் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

அரையிறுதியில் யுவராஜ்

பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் முதல் பந்தில் டக் அவுட் ஆகி ஏமாற்றினாலும் பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரர்களான யூனிஸ் கான் மற்றும் ஆசாத் ஷபிக் போன்ற முக்கிய வீரர்களின் விக்கெட்டை கைப்பற்றி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இறுதி போட்டியில் யுவராஜ்

இறுதி போட்டியில் இந்தியாவிற்காக ஐந்தாம் நிலை வீரராக யுவராஜ் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோனி களமிறங்கி ஆட்டத்தை முடித்தும் விட்டார். இருப்பினும் பந்து வீச்சில் சங்கக்காரா மற்றும் சமர்வீரா போன்ற முக்கிய வீரர்களை வீழ்த்தினார்.

2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் யுவராஜ் சிங் 362 ரன்கள் மற்றும் 15 விக்கெட்கள் வீழ்த்தி தொடர் நாயகன் விருதை பெற்றார். இந்த தொடர் முழுக்க யுவராஜ் சிங் கேன்சர் பாதிப்புடன் விளையாடி இருக்கிறார் என்பது அந்த தொடர் முடிந்த பின்னர்தான் தெரிய வந்தது. தான் விரும்பும் விளையாட்டின் மீது ஒருவருக்கு எந்த அளவுக்கு காதல் இருந்திருந்தால் உடல் வலிகளை பொறுத்துக் கொண்டு கிரிக்கெட் பாடியிருப்பார் என்று உலகுக்கே உணர்த்தியுள்ளார் யுவராஜ்.

Quick Links