வெளிநாடுகளில் நடத்தப்படும் டி20 தொடர்களில் பங்கேற்பதற்கு அனுமதி அளிக்குமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சங்கத்திடம் விண்ணப்பித்துள்ளார், யுவராஜ் சிங். 2019 ஐபிஎல் சீசன் திருப்திகரமாக அமையாவிட்டாலும் தொடர்ந்து இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த யுவராஜ் சிங், கடந்த 10ஆம் தேதி பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் தனது ஓய்வினை அறிவித்து ஆச்சரியம் அளித்தார். இவர் தனது ஓய்வினை அறிவிக்கும் போது இந்தியாவில் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் அல்லது எவ்வகை டி20 தொடர்களிலும் தான் பங்கு பெற மாட்டேன் என சூசகமாக கூறினார்.
பத்திரிகையாளர்களுக்கு முன் இவர் அளித்த பேட்டியில்,
"நான் தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். இவ்வேளையில் சில வேடிக்கைகளையும் கிரிக்கெட்டில் அளிக்க உள்ளேன். நான் எனது வாழ்வை தொடர்ந்து அனுபவிக்க விரும்புகிறேன். சர்வதேச போட்டிகளில் விளையாடாமல், ஐபிஎல் போன்ற மிகப்பெரிய தொடர்களின் விளையாடுவது சற்று எனக்கு கவலையளிக்க கூடிய வகையில் அமைகிறது"
என்றார்.
இதற்கு முன்னர் இந்திய அணியின் ஜாம்பவான்களான சேவாக், ஜாகீர் கான் மற்றும் சச்சின் டெண்டுல்கர் போன்றோர் வெளிநாடுகளில் நடத்தப்படும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்துள்ளனர். இதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சங்கம் எவ்வித தடையும் அவர்களுக்கு விதித்ததில்லை. சமீபத்தில் உள்ளூர் கிரிக்கெட்டில் தனது ஓய்வை அறிவித்த இர்பான் பதான் கூட கரீபியன் பிரீமியர் லீக்கில் பங்கு பெறுவதற்காக தனது பெயரை பதிவு செய்துள்ளார். மேலும், கரீபியன் பிரீமியர் லீக்கில் தனது பெயரினை பதிவு செய்த முதலாவது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார், இர்பான் பதான்.
எனவே, இது போலவே யுவராஜ் சிங்கும் இதுபோன்ற வெளிநாடு டி20 தொடர்களில் பங்கு பெறுவதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சங்கத்திடம் அனுமதி கோரியுள்ளார். 2011 உலக கோப்பை தொடரின் வெற்றிக்கு காரணமாய் அமைந்த "தொடர் நாயகன்" யுவராஜ் சிங் என்றும் ரசிகர்கள் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பெற்றுள்ளார். எனவே, பிசிசிஐ போதிய அனுமதிகளை வழங்கிவிட்டால் வெளிநாடுகளில் நடத்தப்படும் டி20 தொடர்களில் நிச்சயம் பங்கு பெறுவார், ஜாம்பவான் யுவராஜ் சிங்.