பரபரப்பான பிரீமியர் லீக் போட்டிகளின் சிறப்பம்சமே "பிக் சிக்ஸ்" அணிகள் மோதும் போட்டிகள் தான். முதல் நான்கு இடங்களுக்கான போட்டிகளில் முதலிடம் பிடிக்கவும், தனது சொந்த மைதானத்தில் வெற்றி பெற்று ரசிகர்களிடையே கவுரவத்தை மீட்டெடுக்கவும் தங்களால் முடிந்த முயற்சிகளையும் யுக்திகளையும் ஒவ்வொரு அணியும் கையாளும்.2018/19 ஆம் ஆண்டுக்கான சீசனில், செல்சீ மற்றும் மான்செஸ்டர் சிட்டி அணிகளுக்கிடையேயான போட்டிகளுக்கு முன்பு வரை லிவர்பூல் அணி முதலிடத்திலும் இரண்டாவது இடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியும் இருந்துவந்தன. இந்த போட்டியில் வெற்றிபெற்றால் புள்ளிபட்டியலில் கோல்கள் அடிப்படையில் முதலிடம் பெறலாம் என களமிறங்கி, 6-0 என்ற கணக்கில் செல்சீ அணியை வதம் செய்து, லிவர்பூல் அணியை பின்னுக்கு தள்ளி புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம் பெற்று அசத்தியது மான்செஸ்டர் சிட்டி. இந்த அபாரமான ஆட்டத்திற்க்கான முக்கியமான மூன்று காரணத்தை தான் நாம் இந்த கட்டுரையில் காண இருக்கிறோம்.
1. சிட்டி அணியின் ஆட்ட யுக்தி
போட்டி துவங்கும் முன்னதாக செல்சீ அணியின் கோச் சர்ரி கூறுகையில், சிட்டி அணி பலம்வாய்ந்த அணி என குறிப்பிட்டார். அதேப்போலவே தனது திறமையான யுக்தியால் செல்சீ அணியை ஒரு கோல் கூட அடிக்க விடாமல் 6 கோல்கள் அடித்து வதம் செய்தது. மான்செஸ்டர் சிட்டி அணியை திறமை வாய்ந்த அணியாக மாற்றியமைத்து உச்சகட்டத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார் கார்டியாலா. இவரது இந்த நேர்த்தியான அணுகுமுறை பார்சிலோனாவில் இவருக்கு கீழிருந்த அணி எப்படி இருந்தது என்பதை தற்போது நினைவூட்டுகிறது. இவரின் இந்த வெற்றிக்கு காரணம் நடுகள வீரர்களை நேர்த்தியாக அவர் பயன்படுத்துவது தான். முக்கியமாக ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பந்தை லாவகமாக கடத்திச் சென்று கோல் அடிக்க இவர் கையாளும் யுக்திகள் கார்டியாலாவை சிறந்த அணி மேனேஜராக இன்றுவரை கொண்டுசெல்கிறது. நேரத்திற்கு ஏற்றவாறு வீரர்களை கையாள்வதிலும் இவர் கைதேர்ந்தவர்.
2. செல்சீ அணியின் குறைவான மனவலிமை
ந்த சீசனில் ஒவ்வொரு போட்டியின் தோல்விக்குப் பின்னரும் செல்சீ அணியின் மேனேஜர் சர்ரி கூறிவந்தது ஒன்றே ஒன்றுதான். அது செல்சீ அணி வீரர்களின் மனவலிமை மிகவும் குறைவாக இருப்பதே தோல்விக்குக் காரணம் என்பதுதான். வெற்றி தோல்வி சகஜம் தான், ஆனால் எதிரணி ஒன்று இரண்டு கோல்கள் அடித்து கொண்டிருக்கும்பொழுது வீரர்கள் மனதளவில் சோர்வடைந்துவிடுகிறார்கள். உதாரணமாக மான்செஸ்டர் அணிக்கு எதிரான போட்டியில் அகுரோ தனது இரண்டாவது கோல் அடிக்கும் பொழுது செல்சீ வீரர்கள் சுதாரித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதை செய்யத்தவறி மன வலிமையை இழந்து விட்டார்கள். போட்டியின் முதல்பாதியே முடிவடையாத நிலையில் இவ்வாறு வீரர்கள் செய்த இந்த போக்குதான் இப்பேர்ப்பட்ட மோசமான தோல்விக்கு காரணமாக இருக்க முடியும்.
3. மாற்று வழி இல்லாமல் களமிறங்கியது
செல்சீ அணியின் மேனேஜர் செய்த மற்றொரு தவறு என்னவென்றால், கார்ட்டியாலா போன்ற மேனேஜர்கள் வழிநடத்தும் அணியை எதிர் கொள்ளும் பொழுது ஒருவிதமான யுத்தி தோல்வியடைந்தால் கட்டாயம் மற்றுமொரு யுக்தியை தன் வசம் வைத்து இருந்து, அதை குறித்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும். ஆனால் அப்படி ஒரு மாற்று வழியே இல்லாமல் களமிறங்கியது செல்சீ அணியின் மேனேஜர் சர்ரி செய்த மிகப்பெரிய தவறு. இது அணியை வரலாறு காணாத தோல்விக்கே இட்டுச் சென்றுள்ளது.