செல்சீ அணிக்கு வெற்றிகரமான பயிற்சியாளராக இருந்தாலும் அந்த அணியின் உரிமையாளருக்கும் மவுரிசியோ சாரிக்கும் நீண்ட நாட்களாக சரியான புரிதல் இல்லை. அதுமட்டுமல்லாமல் செல்சீ அணி பல வெற்றிகளை பெற்றாலும், சாரிக்கு ஆதரவளிக்க தயங்குகிறார்கள் செல்சீ ரசிகர்கள். செல்சீ அணியின் பயிற்சியாளராக தனது முதல் சீசனை வெற்றிகரமாக முடித்துள்ளார் மவுரிசியோ சாரி. ப்ரீமியர் லீக்கில் மூன்றாவது இடம் பிடித்ததோடு சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கும் செல்சீ அணியை தகுதி பெற வைத்துள்ளார். மேலும், சமீபத்தில் நடைபெற்ற ஐரோப்பா லீக் இறுதிப் போட்டியில் ஆர்செனல் அணியை தோற்கடித்து செல்சீ அணி கோப்பையை கைப்பற்றியது. பயிற்சியாளர் சாரியின் கேரியரில் பெற்ற முதல் கோப்பை இதுவே.
செல்சீ அணியுடனான சாரியின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. விரைவில் அவர் ஜூவெண்டஸ் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என தெரிகிறது. இந்நிலையில் செல்சீ அணியின் அடுத்த பயிற்சியாளராக வர வாய்ப்புள்ள மூன்று நபர்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
3. மேக்ஸ் அலிக்ரி
ஐந்து வருடமாக ஜூவெண்டஸ் அணிக்கு பயிற்சியாளராக இருந்த அலிக்ரி, தற்போது அந்த அணியை விட்டு விலகியுள்ளார். ஐரோப்பிய தொடர்களில் ஜொலிக்காமல் இருந்த ஜூவெண்டஸ் அணியை பலமிக்கதாக மாற்றி இரு முறை சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார் அலிக்ரி. பல செயல்திட்டம் கொண்ட புத்திசாலி பயிற்சியாளரான அலிக்ரி, கடினமான சூழ்நிலைகளை சாதகமாக மாற்றக் கூடியவர்.
லிவ்ரபூல் மற்றும் மான்செஸ்டர் சிட்டியின் ஆதிக்கத்தை முடிவுகட்டும் முயற்சியில் உல்ள செல்சீ அணிக்கு இவர் பொறுத்தமாக இருப்பார். மேலும் இவரது பயிற்சியின் கீழ் தொடர்ந்து ஐந்து முறை சீரி ஏ கோப்பையை வென்றுள்ளது ஜுவெண்டஸ் அணி. ஆகவே செல்சீ அணியை ப்ரிமியர் லீக் கோப்பை வெல்ல வைப்பதற்கு இவர் சரியான நபராக இருப்பார்.
2. லாரண்ட் பிளான்க்
ஜோஸ் மவுரினோ அல்லது அலிக்ரி போல் பிரபலமானவர் அல்ல லாரண்ட் பிளான்க். ஆனால் இவர் ஒரு வெற்றிகரமான பயிற்சியாளர். பிரான்ஸைச் சேர்ந்த போர்டியாஸ் மற்றும் பிஎஸ்ஜி அணிக்காக பல உள்நாட்டு கோப்பைகளை வென்று கொடுத்துள்ள பிளான்க், பிஎஸ்ஜி அணிக்காக தொடர்ந்து மூன்று முறை லீகு ஒன் கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் வீரரான இவர், தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்துபவர். அதனால் தான், இவர் பயிற்சியாளராக இருந்த சமயத்தில் பிஎஸ்ஜி மற்றும் போர்டியாஸ் அணிகள் பந்தை அதிக நேரம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. இது செல்சீ அணிக்கு ஏற்ற ஒன்று. ஏனென்றால் இதையே தான் சாரியும் பின்பற்றுவார். மேலும், குறைந்த பட்ஜெட்டில் கூட அணியை சிறப்பாக வழிநடத்த முடியும் என போர்டியாஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த போது நிரூபித்துள்ளார் பிளான்க்.
1. பிராங்க் லாம்பார்ட்
இங்கிலாந்து தேசிய அணியின் முன்னாள் கேப்டன் பிரங்க் லாம்பார்ட் செல்சீ அணிக்கு பயிற்சியாளராக வரப் போகிறார் என நீண்ட நாட்களாக பேச்சு அடிபடுகிறது. செல்சீ அணிக்கு லாம்பார்ட் ஒன்றும் புதியவர் அல்ல. செல்சீ அணியின் லெஜண்டாகவே கருதப்படுகிறார் லம்பார்ட்.
இவர் செல்சீ அணிக்காக 429 போட்டிகளில் விளையாடி நூறுக்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ளார். பயிற்சியாளருக்குரிய முன் அணுபவம் இல்லையென்றாலும், எதிர்காலத்தில் பயிற்சியாளர் ஆகக்கூடிய அத்தனை திறனும் இவரிடம் உள்ளது. பயிற்சியாளர் என்று வந்தால், மவுரினோ மற்றும் அலிக்ரி போன்றவர்களுக்கு நிகராக இவர் இல்லை என்பது புரிந்துக் கொள்ளகூடியதே. எனினும் ரசிகர்கள் மற்றும் செல்சீ நிர்வாகத்திடம் இவருக்கு நல்ல ஆதரவு இருப்பதால், செல்சீ அணியின் அடுத்த பயிற்சியாளர் ஆகும் வாய்ப்பு இவருக்கே அதிகமுள்ளது.