ப்ரீமியர் லீக்கில் மிகவும் வெற்றிகரமான அணியாக கருதப்படும் மான்செஸ்டர் யுனைடெட், இந்த வருட சீசனில் மிகவும் மோசமாகவே விளையாடியுள்ளது. சாம்பியன்ஸ் லீக் கோபைக்கான இடத்தையும் பறி கொடுத்ததோடு முக்கியமான எந்த வெற்றியும் பெறாததால் ரசிகர்கள் மான்செஸ்டர் அணியின் மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர்.
இந்நிலையில், அடுத்த சீசனில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக தங்கள் அற்புத திறனை வெளிப்படுத்த காத்திருக்கும் 3 இளம் வீரர்களை குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம்.
1. அசெல் டுயன்செபி
காங்கோ நாட்டைச் சேர்ந்த அசெல் டுயன்செபி, தனது எட்டாவது வயதில் மான்செஸ்டர் யுனைடெட் அகாடமியில் சேர்ந்தார். அப்போதிலிருந்து இதுவரை பல விருதுகளை பெற்றுள்ளார். ஜோஸ் மவுரினோ பயிற்சியாளராக இருந்த போது, 2017-ம் ஆண்டு FA கோப்பையின் நான்காவது சுற்றில் விகான் அணிக்கு எதிராக மாற்று வீரராக முதல் முறையாக மான்செஸ்டர் யுனைடெட் சீனியர் அணியில் இறங்கினார் அசெல் டுயன்செபி.
பல திறமைகள் கொண்ட இவர், தடுப்பாட்டத்தில் செண்டர்-பேக் மற்றும் வலதுபுற பேக்-காகவும் செயல்படக் கூடியவர். கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட காயத்தால் மூன்று மாதங்கள் ஓய்வில் இருந்தாலும், அணியில் தான் இழந்த இடத்தை தற்போது பிடித்துக் கொண்டார். ஆகஸ்ட் 2018-ம் ஆண்டு லோன் மூலமாக இரண்டாம் முறையாக ஆஸ்டன் வில்லா அணிக்குச் சென்றுள்ள அசெல், அந்த அணியின் பல வெற்றிகளுக்கு முக்கியமான பங்களிப்பை அளித்து வருகிறார். இந்த சீசனில் தடுப்பாட்டத்தில் பல தவறுகளை மான்செஸ்டர் அணி செய்துள்ளதால், அசெல் டுயன்செபியின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்து வருகிறார் பயிற்சியாளர் ஓலே கன்னர் சோல்ஸ்ஜெர்.
2. மசோன் க்ரீன்வுட்
வெறும் 17 வயதே ஆகியுள்ள மசோன் க்ரீன்வுட், மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக UCL போட்டிகளில் விளையாடிய இளம் வீரர் ஆவார். கடந்த பத்தாண்டுகளில் மான்செஸ்டர் யுனைடெட் அகாடமியில் இருந்து வந்த திறமையான வீரராக கருதப்படுகிறார் க்ரீன்வுட். நிச்சியம் இவர் மான்செஸ்டர் அணியில் மிகப்பெரும் வீரராக உருவெடுக்க வாய்ப்புள்ளது.
இந்த சீசனில் இளையோர்களுக்காக நடைபெற்ற போட்டிகளில் 30 கோல்களை அடித்துள்ளார் க்ரீன்வுட். மிக முக்கியமாக FA யூத் கோப்பையில் செல்சீ அணிக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்து மான்செஸ்டர் யுனைடெட் அணியை வெற்றி பெற வைத்தார். அடுத்த சீசனில் அலெக்ஸ் சான்செஸ் அணியில் இடம் பெறுவாரா என்பது தெரியாத நிலையில், மார்கஸ் ராஷ்ஃபோர்டிற்கு இவர் பக்கபலமாக இருப்பார் என பயிற்சியாளர் கருதுகிறார்.
3. தஹித் சோங்
2016-ம் ஆண்டு மன்செஸ்டர் யுனைடெட் அணியில் சேர்ந்தார் தஹித் சோங். டச்சு நாட்டைச் சேர்ந்த இவர், இயல்பாகவே வலது புற விங்கராக செயல்படக் கூடியவர். மான்செஸ்டர் அணியில் சேர்ந்ததும் 18 வயதிற்குட்பட்டோருக்கான அணியில் விளையாடிய தஹித், 2016-17 FA கோப்பையில் சிறப்பான பங்களிப்பை அளித்தார். அந்த கோப்பையில் மான்செஸ்டர் அணி விரைவிலேயே வெளியேறினாலும், தஹித்தின் ஆட்டம் கவனத்துக்குரியதாக இருந்தது.
காயத்தில் இருந்து மீண்டு பத்து மாதங்கள் கழித்து அணிக்கு திரும்பிய தஹித், கடந்த சீசனில் இளையோர்கள் அணியில் மூன்று கோல்களையும் எட்டு முறை கோல் அடிக்க உதவியும் புரிந்துள்ளார். முதல் முறையாக மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு FA கோப்பையில் ரீடிங் அணிக்கு எதிராக மாற்று வீரராக களமிறங்கினார். இவரது வேகத்தை எந்த எதிரணி வீரர்களலும் ஈடு கொடுக்க முடியாது. அடுத்த சீசனில் இவர் நிச்சியம் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் கலக்குவார் என எதிர்பார்க்கலாம்.