ஒரு வழியாக கத்தார் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்று கோப்பா அமெரிக்காவின் அடுத்து சுற்றுக்கு சென்றுள்ளது அர்ஜெண்டினா அணி. இதை ஒரு முழுமையான வெற்றி என கூற முடியாது. ஏனென்றால், தடுப்பாட்டத்தில் இன்னும் மோசமாகவே செயல்படுகிறது அர்ஜெண்டினா. மெஸ்ஸி, ஆகுவேரா மற்றும் மார்டினெஸ் இணைந்து இந்தப் போட்டியில் தாக்குதல் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டனர்.
போட்டி தொடங்கிய முதல் ஐந்து நிமிடத்திலேயே அர்ஜெண்டினாவிற்கான முதல் கோலை அடித்தார் மர்டினெஸ். போட்டியின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஆதிக்கம் செலுத்திய அர்ஜெண்டினா அணிக்கு ஒரு சில சமயங்களில் மட்டுமே நெருக்கடி கொடுத்தனர் கத்தார் அணி வீரர்கள். 82-வது நிமிடத்தில் அணிக்கான இரண்டாவது கோலை அடித்து அர்ஜெண்டினாவை இரண்டாம் சுற்றுக்கு செல்லும் வாய்பை உறுதிப்படுத்தினார் ஆகுவேரா.
வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள அடுத்த சுற்றுப் போட்டியில் வெனிசுலா அணியை எதிர்கொள்ள உள்ளது அர்ஜெண்டினா.
அர்ஜெண்டினா வெற்றி பெற்றதற்கான 3 காரணங்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
3. ஆரம்ப கோல் வெற்றிக்கு அடித்தளமிட்டது
கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் களம் இறங்கிய அர்ஜெண்டினா, பதற்றத்தை குறைக்க வேண்டுமானால் போட்டியின் ஆரம்பத்திலேயே கோல் அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விளையாடியது. கடந்த இரண்டு போட்டிகளில் கோல் எதுவும் அடிக்காத அர்ஜெண்டினா அணியின் நம்பிக்கை நட்சத்திரம் மர்டினெஸ், முதல் ஐந்து நிமிடத்திலேயே கோல் அடித்து அசத்தினார்.
கத்தார் அணியின் பஸம் அல் ரவி செய்த தவறான பாஸை, கச்சிதமாக பெற்றுக் கொண்ட மார்டினெஸ் எந்த தவறும் இழைக்காமல் அதை கோலாக்கினார். போட்டியின் ஆரம்பத்திலேயே கோல் அடித்த காரணத்தினால் எந்த பதற்றமும் இன்றி விளையாடியது அர்ஜெண்டினா.
2. போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்திய அர்ஜெண்டினா
இந்த தொடரில் முதல் முறையாக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது அர்ஜெண்டினா. ஆரம்பத்திலேயே கோல் அடித்த காரணத்தினால் பந்தை தங்கள் கட்டுப்பாட்டிலேயே அதிக நேரம் வைத்திருந்தது அர்ஜெண்டினா. முதல் ஐந்து நிமிடங்களுக்குள்ளேயே கோலை நோக்கி மூன்று ஷாட்களை அடித்தது அர்ஜெண்டினா.
அணுபவமற்ற கத்தார் அணியால் அர்ஜெண்டினா தாக்குதல் ஆட்டத்தை சமாளிக்க முடியவில்லை. பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரவே கத்தார் வீரர்கள் கடுமையாக போராடினர். இரண்டாம் பாதியிலும் கோல் அடிக்க அர்ஜெண்டினாவிற்கு சில வாய்புகள் கிடைத்தன. ஆனால் அதையெல்லாம் வீணாக்கியது அர்ஜெண்டினா. கடைசியில் 82-வது நிமிடத்தில் ஆகுவேரா கோல் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். ஒட்டுமொத்தமாக இந்தப் போட்டியில் கோலை நோக்கி 19 ஷாட்களை அடித்துள்ளது அர்ஜெண்டினா.
1. ஆடும் வடிவத்தை மாற்றி, மூன்று முன்கள வீரர்களை களம் இறக்கியது
கோப்பா அமெரிக்கா தொடங்குவதற்கு முன்னர், பவுரோ இகார்டிக்குப் பதிலாக 21 வயதான லவுடரோ மார்டினெஸ் அர்ஜெண்டினா அணியில் சேர்த்தது பெரும் விவாதத்திற்கு உள்ளானது. கடந்த வருடம் நடைபெற்ற உலக கோப்பையில் அர்ஜெண்டினாவின் முன்கள வீரர்களின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது. இதை களையும் பொருட்டு, இந்தப் போட்டியில் எந்த அணிக்கும் பயத்தை உண்டாக்கும் செர்ஜியோ ஆகுவேரா, மெஸ்ஸி, பவுலோ டைபாலா மற்றும் மார்டினெஸை களம் இறக்கியது அர்ஜெண்டினா.
ஆனாலும் இவர்களால் கடந்த இரண்டு போட்டிகளில் அர்ஜெண்டினா அணியை வெற்றி பெறச் செய்ய முடியவில்லை. இதுவரை 4-4-2 வடிவத்தில் விளையாடிய அர்ஜெண்டினா, இந்தப் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற சூழலில் மூன்று முன்கள வீரர்களை களம் இறகினார் பயிற்சியாளர் ஸ்கலோனி. இந்த மாற்றம் அணிக்கு நல்ல பலனை கொடுத்தது.