உலகின் சிறந்த கால்பந்து வீரராக கருதப்படும் ஈடன் ஹசார்ட் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது சிறப்பான ஆட்டத்தால் செல்சீ அணியை வெற்றி பெற வைத்தார். அந்தப் போட்டியில் இரண்டு கோல்களை அடித்த ஹசார்ட், செல்சீ அணிக்கு ஐரோப்பா லீக் கோப்பையை பெற்று தந்தார். ஆனால் அது தான் செல்சீ அணிக்காக ஹசார்ட் விளையாடும் கடைசி போட்டியாகும். அடுத்த சீசனில் ரியல் மாட்ரிட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட உள்ளார்.
ஈடன் ஹசார்ட் ஏன் ரியல் மாட்ரிட் அணிக்குச் செல்ல வேண்டும் என்பதற்கான மூன்று காரணங்களை இந்த கட்டுரையில் பார்ப்போம்
1. அணி மாறுவதற்கு இதுவே சரியான நேரம்
கடந்த ஏழு வருடமாக செல்சீ அணியின் நம்பிக்கைகுரிய வீரராகவும் ரசிகர்களுக்கு நீண்ட காலமாக பிடித்தமான வீரராகவும் ஹசார்ட் இருந்தது உண்மை தான். இவர் விளையாடிய காலத்தில் செல்சீ அணி பல வெற்றிகளை குவித்துள்ளது என்பதையும் யாரும் மறுக்கமாட்டார்கள். ஆனால், இவ்வுளவு திறமை வாய்ந்த வீரரை தங்கள் அணியில் வைத்திருந்தும் செல்சி அணியால் மதிப்புமிக்க சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்ல முடியவில்லை.
இதற்கு நேர்மாறாக, இந்த காலகட்டத்தில் பல முறை சாம்பியன்ஸ் கோப்பையை வென்றுள்ளது ரியல் மாட்ரிட் அணி. மேலும், கடந்த இரண்டு வருடங்களாக நல்ல ஃபார்மில் விளையாடி வந்தாலும், ரசிகர்கள் இவரிடம் அதிகளவு எதிர்பார்க்கிறார்கள். இவரால் பல சமயங்களில் அதை பூர்த்தி செய்ய முடியவில்லை. ஆகையால், வேறு அணிக்கு மாறும் போது தனது சீரான ஆட்டத்தை தொடரலாம் என நினைகிறார் ஹசார்ட். அதற்கு ரியல் மாட்ரிட் அணியே சிறந்தது எனவும் அவர் கருதுகிறார்.
2. ரியல் மாட்ரிட் விருப்பம்
பல சமயங்களில் கால்பந்து வீரர்கள் தான் இந்த அணிக்காக விளையாட வேண்டும் என ஆசையோடு இருப்பார்கள். ஆனால் ஹசார்ட் விஷயத்தில், அப்படியே எதிராக உள்ளது. கடந்த மூன்று அல்லது நான்கு வருடங்களாக ஹசார்டை தங்கள் அணிக்கு ஒப்பந்தம் செய்ய காத்துக் கொண்டிருக்கிறது ரியல் மாட்ரிட். ஏனென்றால், ரொனால்டோ வெளியேறிய பிறகு ரியல் மாட்ரிட் வெற்றி பெற முடியாமல் தத்தளித்து வருகிறது.
ரொனால்டோ அணியை விட்டுச் சென்ற பிறகு குறிபிடத்தகுந்த வெற்றி எதையும் ரியல் மாட்ரிட் பெறவில்லை. அவரது இடத்தை ஹசார்ட் பூர்த்தி செய்வார் என ரியல் மாட்ரிட் நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
3. பணம் மற்றும் மரியாதை
கால்பந்து விளையாட்டின் மீது கொண்ட மரியாதை மற்றும் பேரார்வத்தினால் தான் பல வீரர்கள் இன்றும் இந்த விளையாட்டை ஆடி வருகிறார்கள். ஆனால் விளையாண்டால் மட்டும் போதுமா? பணமும் வேண்டும் அல்லவா? தங்களுக்கு பிடித்தமான விளையாட்டு என்றாலும் யாரும் சும்மா விளையாடுவதில்லை. ஈடன் ஹசார்டிற்காக மிகப்பெரிய தொகையை கொடுக்க தயாராக உள்ளது ரியல் மாட்ரிட்.
மேலும், ரியல் மாட்ரிட் போன்ற மிகப்பெரிய அணிகளில் ஒரு வீரராக விளையாடுவது கௌரவமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கிளப் அளவிலும் ஐரோப்பா அளவிலும் ரியல் மாட்ரிட் அணிக்கு பெருமை வாய்ந்த வரலாறு உள்ளது. பணமும் மரியாதையும் ஒரு சேர கிடைக்கும் என்பதால் தான் ஹசார்ட் ரியல் மாட்ரிட் அணிக்கு செல்ல ஒத்துக் கொண்டார்.