இந்த வருட சீசனில் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற உறுதியில் அணியை மாற்றி அமைக்கும் கட்டமைப்பில் அதிரடியாக களம் இறங்கியுள்ளது மான்செஸ்டர் யுனைடெட். இதற்காக பல வீரர்களை ஒப்பந்தம் செய்து வருகிறது. சமீபத்தில் கூட டேனியல் ஜேம்ஸ் மற்றும் ஆரோன் வான் பிஸாகா-வை தங்கள் அணிக்காக ஒப்பந்தம் செய்துள்ளது.
இவர்கள் தவிர மேலும் சில வீரர்களை தங்கள் அணிக்குள் இழுக்க குறி வைத்துள்ளது யுனைடெட். குறிப்பாக, அர்ஜெண்டினா வீரர் ஒருவர் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணையலாம் என செய்தி பரவியுள்ளது. ஆம், “அடுத்த மெஸ்ஸி” என வர்ணிக்கப்படும் பவுலோ டைபாலா தான் அந்த வீர்ர். இவரது வருகை மான்செஸ்டர் யுனைடெட் அணியில் மாற்றத்தை உண்டாக்குமா? நிச்சியம் இல்லை.
மன்செஸ்டர் யுனைடெட் அணிக்கு இவரை ஒப்பந்தம் செய்வது சரியான முடிவாக இருக்காது என்பதற்கான மூன்று காரணங்களை இந்த கட்டுரையில் பார்ப்போம்.
1.எதிர்பார்ப்பிற்கு மாறாக இருக்கிறது இவரது ஆட்டம்:
முதன் முதலில் பவுலோ டைபாலா பெயரை கேள்விப்பட்ட போது, அர்ஜெண்டினா அணியின் அடுத்த மெஸ்ஸி இவர் தான் என கூறப்பட்டது. அர்ஜெண்டினா மற்றும் சீரி ஏ லீக் ரசிகர்களும் இவரை வானளவிற்கு புகழ்ந்து தள்ளினர். ஒரு சிலர் இவரை மரோடோனாவுடன் ஒப்பிட்டனர். ஆனால் இதுவரை சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த சாதனையையும் அவர் படைக்கவில்லை.
பலோன் டி ஆர் ரேங்கிங்கில் 2017-ம் ஆண்டு 15-வது இடம் பிடித்ததே இவரது சிறந்த ரேங்கிங் ஆகும். இது பிரான்ஸின் அண்டோனியோ க்ரீஸ்மேன் ரேங்கை விட குறைவானது. அதோடு அர்ஜெண்டினா அணியில் இடம் பிடிப்பதற்கே பெரிதும் போராடி வருகிறார் டைபாலா. இவரைப் பற்றி கூறப்படும் பிம்பம், அவரது ஃபார்மில் வெளிப்படவில்லை என்பது தான் இங்கு முக்கியம்.
2. நெய்மருக்கு நிகரான தொகை:
கடந்த சில ஆண்டுகளாக, கால்பந்தில் ஈடுபடுத்தபடும் பணம் கணிசமாக அதிகரித்துள்ளது. 30 யூரோ மில்லியன் என்பது இன்றைய காலகட்டத்தில் 5 யூரோ மில்லியனுக்கு நிகரானது. வீரர்களுக்காக அணிகள் அதிக தொகையை செலவழிக்கின்றன. இப்போதெல்லாம் கிளப்களிடம் அதிகமான பணம் இருக்கிறது. இதனால் அவர்கள் தேவையில்லாமல் எந்த வீரரையும் விற்க விரும்புவதில்லை.
இதில் பவுலோ டைபாலாவும் விதிவிலக்கல்ல. இவர் முன்னனி வீரர் இல்லை என்றாலும், இன்றும் ஜூவெண்டஸ் அணியின் மதிக்கபடும் வீரராகவே உள்ளார். டைபாலாவின் வயது மற்றும் உலகளாவிய புகழை வைத்து பார்க்கும் போது, இவரது டிரான்ஸ்ஃபர் தொகை 200 யூரோ மில்லியனுக்கு மேல் இருக்கும். இப்படிபட்ட நிலையில் ப்ரீமியர் லீக்கில் விளையாடிய அணுபவம் இல்லாதவரை இவ்வுளவு தொகை கொடுத்து மான்செஸ்டர் யுனைடெட் வாங்குமா என்ன?
3. ப்ரீமியர் லீக்கிற்கு பொருத்தம் இல்லாதவர்:
பல முன்னனி வீரர்கள் ப்ரீமியர் லீக்கில் விளையாட வந்து தோல்வி அடைந்துள்ளதை பலமுறை பார்த்துள்ளோம். அதற்காக அவர்களிடம் திறமை இல்லை என்று கூற வரவில்லை. வெளிப்படையாக சொன்னால், ப்ரீமியர் லீக்கின் விளையாடும் பாணியை தழுவிக் கொள்வது மிகவும் கடினம்.
ப்ரீமியர் லீக் உடலளவில் வலிமையையும் வேகத்தையும் கோருவது. நீங்கள் வலிமையாகவோ அல்லது வேகமாக ஓடும் வீரராகவோ இல்லையென்றால், நீங்கள் நிச்சியம் சிரமப்படுவீர்கள். டேவிட் சில்வா, ஜுயான் மாடா போன்றவர்கள் இதில் விதிவிலக்கு. இவர்கள் தங்கள் உடலமைப்பையும் மீறி இங்கிலாந்தில் சிறப்பாக விளையாடியுள்ளார்கள். இவர்களிடம் இருக்கும் வேகம் டைபாலாவிடம் இருக்கிறதா? சந்தேகமே.
உதாரணத்திற்கு அர்ஜெண்டினா அணியின் ஏஞ்சல் டீ மரியாவை எடுத்துக் கொள்வோம். இவரது திறமை குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால் இங்கிலாந்தில் அவரால் சோபிக்க முடியவில்லை. ப்ரீமியர் லீக் அனைவருக்கும் ஏற்றதல்ல. டைபாலா மெதுவாக விளையாடும் பாணியை கொண்டவர் என்பதால், ப்ரீமியர் லீக் அவருக்கு ஏற்ற இடமல்ல. ஆகையால் இப்படியொரு வீரருக்கு மான்செஸ்டர் யுனைடெட் பணத்தை செலவழிப்பது வீணானது.