நடந்து முடிந்த சீசன் ஆர்செனல் அணிக்கும் அதன் ரசிகர்களுக்கும் நம்பிக்கை அளிப்பதாக இல்லை. ப்ரீமியர் லீக்கில் ஐந்தாம் இடம் பிடித்ததோடு ஐரோப்பா லீக் இறுதிப் போட்டியில் செல்சீ அணியிடம் தோல்வியடைந்ததால், தொடர்ந்து மூன்றாவது வருடமாக சம்பியன்ஸ் லீக் வாய்ப்பை தவறவிட்டுள்ளது ஆர்செனல்.
இந்த சீசனின் முடிவு அணி நிர்வாகத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. சில வீரர்கள் ஓய்வு பெறும் நிலைமையில் உள்ளதோடு பலர் எமிரியின் விளையாடும் முறைக்கு கச்சிதமாக பொருந்தாமல் உள்ளனர். அணியின் பல இடங்களை பலப்படுத்த வேண்டியுள்ளது. ஆனால் போதிய நிதி இல்லாத காரணத்தினால், திண்டாடி வருகிறது ஆர்செனல் நிர்வாகம்.
இப்படிபட்ட நிலையில், அணியை மறுபடியும் கட்டமைக்க ஆர்செனலுக்கு இளம் ரத்தம் தேவைப்படுகிறது. அடுத்த சீசனில் தாக்கம் செலுத்த வாய்புள்ள அப்படியான மூன்று வீரர்கள் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.
1. ஜோ வில்லாக்
ஐரோப்பா லீக் இறுதிப் போட்டியில் ஒரு சில நேர்மறையான விஷயங்கள் ஆர்செனல் அணிக்கு நடந்தன. அப்படி மறக்க முடியாத ஒன்றுதான் இளம் வீரர் ஜோ வில்லாக்கின் சிறப்பான ஆட்டம். அந்தப் போட்டியில் மெசுட் ஒசில், ப்யேரே அவுபாமயெங் போன்ற பிரபல வீரர்கள் இல்லாத நிலையில், தனது திறமையால் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார் வில்லாக். 15 நிமிடங்களே விளையாடிய போதும், அவரது வேகமும், பந்தை காலுக்கடியில் நகர்த்தும் விதமும் அவரது திறமையை பறைசாற்றுகிறது.
ஒசிலுக்கு வயதாகி விட்டதாலும், ஆரோன் ரம்சே ஜூவெண்டஸ் அணிக்கு சென்றதாலும் மிட்ஃபீல்டில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. எமிரியின் 3-5-2 வடிவத்திற்கு இந்த இடம் முக்கியமானதாகும். இந்த இடத்தை வில்லாக் நிரப்புவார் என எதிர்பார்க்கலாம்.
2. எடி கெட்டியா
ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில், அதுவும் தனது சொந்த மைதானத்தில், தன் அணிக்கான வெற்றி கோலை அடிக்கும் பாக்கியம் பல வீரர்களுக்கு கிடைக்காது. ஆனால் எடி கெட்டியாவிற்கு அது கிடைத்துள்ளது. கரபோ கோப்பைக்கான இறுதிப் போட்டியில் நார்விச் சிட்டி அணிக்கு எதிராக 85-வது நிமிடத்தில் கோல் அடித்து அணிக்கு வெற்றி தேடி தந்தார் கெட்டியா. இதன் காரணமாக ஆர்செனல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.
ஆர்செனல் அணிக்காக ஒரு சில போட்டிகளே விளையாடியிருந்தாலும், U-23 அணிக்காக இவர் விளையாடியது அனைவரையும் ஈர்த்துள்ளது. லகாஜெட்டி மற்றும் ப்யேரே அவுபாமெயங் நல்ல ஃபார்மில் இருக்கும் போது கெட்டியாவிற்கு வாய்ப்பு கிடைப்பது கடினமே. இல்லையென்றால், டேனி வெல்பெக் ஆர்செனல் அணியிலிருந்து வெளியேறி இருப்பதால், இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்படும் என தெரிகிறது.
3. ரெய்ஸ் நெல்சன்
அலெக்ஸ் சான்செஸ் அணியிலிருந்து வெளியேறிய பிறகு, விங்கர் பகுதி ஆர்செனல் அணிக்கு கவலைக்குரியதாகவே இருக்கிறது. ஹென்ரிக் மெகட்ரியான் மற்றும் அலெஸ் இவோபி போன்ற வீரர்கள் இந்த இடத்தை நிரப்புவர்கள் என்று எதிர்பார்த்த நிலையில், அவர்கள் ஏமாற்றமே அளிக்கிறார்கள்.
அதனால் தான் வில்ஃபிரட் ஜகா அல்லது நிகோலஸ் பெபெ போன்ற வீரர்களை ஒப்பந்தம் செய்யலாம் என நினைக்கிறது ஆர்செனல் நிர்வாகம். ஆனால் அந்தளவிற்கு செலவிட அணியின் பட்ஜெட் இல்லை. வேறுவழியில்லை என்றால், குறைந்த செலவில் இளம் வீரரான ரெய்ஸ் நெல்சனை ஒப்பந்தம் செய்யலாம்.
19 வய்தான நெல்சன், பண்டிஸ் லீகாவின் TSG Hoffenheim அணிக்காக விங்கர் பொசிஷனில் விளையாடி வருகிறார். இந்த சீசனில் ஏழு கோல்கள் அடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார். ஆர்செனல் அணியை மறுகட்டுமானம் செய்யும் பணியில் இருப்பதால், நெல்சன் போன்ற திறமை வாய்ந்த வீரரை அணியில் சேர்ப்பதற்கு இதுவே சரியான நேரம்.