இப்போது கால்பந்து உலகில் விளையாடி வரும் வீரர்களில் சிறந்த பத்து வீரர்களின் பட்டியலை தயாரித்தால், அதில் நிச்சியம் பெல்ஜியம் அணியின் கேப்டன் ஈடன் ஹசார்ட் பெயர் இருக்கும். பந்தை எதிரணியிடமிருந்து லாவகமாக முன்னகர்த்தி செல்வதில் ஹசார்டை யாராலும் மிஞ்ச முடியாது. இதற்கு அவரின் புள்ளிவிபரங்களே சான்று. தனது சிறப்பான ஆட்டத்தால் இந்தாண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் பெல்ஜியம் அணியை அரையிறுதி வரை அழைத்துச் சென்றதோடு, வெள்ளிப் பந்து விருதையும் பெற்றார்.
நாம் சிறந்த வீரராக இருக்கும் போது நம்மை தேடி பல அணிகள் வரும். அதுதான் ஹசார்டிற்கும் நடந்தது. உலக கோப்பைக்குப் பிறகு ஹசார்டை ஒப்பந்தம் செய்ய பார்சிலோனோ மற்றும் ரியல் மாட்ரிட் அணிகள் போட்டி போட்டன. தங்கள் அணியிலிருந்து ரொனால்டோ விலகிய பிறகு, எப்படியாவது ஹசார்டை ஒப்பந்தம் செய்து விட வேண்டும் என மும்முரமாக இருந்தது ரியல் மாட்ரிட். இப்போதைக்கு செல்சீ அணிக்காக விளையாடி வந்தாலும், ரியல் மாட்ரிட் அணிக்கு ஹசார்ட் செல்வாரா என்பது போக போகத் தான் தெரியும்.
கால்பந்தை தவிர்த்து தனது குடும்பத்தோடு அமைதியாக வாழ்பவர் ஹசார்ட். எவ்வுளவு பிரபலம் வாய்ந்த வீரர்கள் என்றாலும் அவர்களைப் பற்றிய சில விஷயங்கள் நமக்கு தெரியாமல் இருக்கும். அப்படி ஈடன் ஹசார்ட் பற்றி நாம் அறிந்துகொள்ளாத 4 விஷயங்களை இங்கு பார்ப்போம்.
1. கால்பந்து குடும்பம்
ஹசார்டின் இரு சகோதரர்களான கைலியான் ஹசார்ட் மற்றும் தோர்கன் ஹசார்ட் ஆகியோரும் தொழில்முறை கால்பந்து வீரர்களே. போர்சியா மோன்செங்கிளாபச் அணிக்காக விளையாடியுள்ள தோர்கன், உலக கோப்பை போட்டிகளிலும் விளையாடியுள்ளார். மற்றொருவரான கைலியான், செல்சீ அணிக்காக விளையாடி வருகிறார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ஈடன் ஹசார்டின் பெற்றோர்களும் கால்பந்துவீரர்களே. இவரது தாயார் பெல்ஜியம் பெண்கள் லீக்கில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2. ஜிடேனின் பாராட்டு
ஜிடேனை ஹசார்ட் எந்தளவிற்கு விரும்புகிறார் என்பது கால்பந்து ரசிகர்கள் அனைவரும் தெரிந்த விஷயம். இந்த ஒரு காரணத்தினால் தான் ரியல் மாட்ரிட் அணிக்கு விளையாட விரும்புகிறார் ஹசார்ட். ஹசார்டின் ஆட்டத்திற்கு ஜிடேனும் மிகப்பெரிய ரசிகர். “எதிர்காலத்தில் சிறந்த கால்பந்து நட்சத்திரமாக ஹசார்ட் உயர்வார். அப்போது கண்ணை மூடிக் கொண்டு அவரை ரியல் மாட்ரிட் அணிக்கு அழைத்துச் செல்வேன்” என 2010-ம் ஆண்டு ஜிடேன் பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.
3. பேஸ்கட்பால் (கூடைப்பந்து) ரசிகர்
கூடைப்பந்து விளையாட்டிற்கு ஹசார்ட் மிகப்பெரும் ரசிகர். செல்சீ மற்றும் பெல்ஜியம் அணி வீரர்களோடு பயிற்சியில் ஈடுபடும் சமயத்தில் அவர்களோடு ஹசார்ட் பேஸ்கட்பால் விளையாடியதை நாம் புகைப்படத்தில் பார்த்துள்ளோம். தனது ஓய்வு நேரங்களிலும் விடுமுறை காலங்களிலும் NBA போட்டிகளை அமெரிக்காவிற்குச் சென்று நேரடியாக பார்க்கக்கூடியவர். கூடைப்பந்தில் இவருக்கு மிகவும் பிடித்த அணி நியூயார்க் நிக்ஸ்.
4. 17 வயதிலேயே சர்வதேச போட்டியில் அறிமுகமானவர்
சிறந்த வீரர்கள் எப்போதும் சீக்கிரமாகவே முதல் தர அணியில் இடம்பெற்று விடுவார்கள். இதற்கு சிறந்த உதாரணம் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ. இருவருமே தங்கள் தேசிய மற்றும் கிளப் அணிகளுக்காக விளையாட இளம் வயதிலேயே தேர்வாகினர். இது தான் ஹசார்டுக்கும் நடந்தது. லில்லீ கிளப் அணிக்காக 14 வயதில் விளையாடத் தொடங்கிய ஹசார்ட், அங்கு விளையாடிக் கொண்டிருக்கும் போதே பல விருதுகளை பெற்றுள்ளார். அதுமட்டுமில்லாமல், பெல்ஜியம் தேசிய அணிக்காக 17 வயதில் அறிமுகமானார் ஹசார்ட்.