ஜெர்மனி உள்நாட்டு கால்பந்து லீக்கான பண்டிஸ் லீகாவின் 56-வது சீசன் தற்போது முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. வழக்கம் போல் பேயர்ன் முனிச் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இது அந்த அணிக்கு 28-வது பண்டிஸ் லீகா கோப்பையாகும். இந்த சீசனில் கோப்பையை கைப்பற்றுவதற்கு பேயர்ன் முனிச் மற்றும் போரிஸா டோர்ட்மண்ட் அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது.
போட்டியின் கடைசி வாரம் வரை புள்ளிப்பட்டியலில் போரிஸா டார்ட்மண்ட் அணியின் கையே ஓங்கியிருந்தது. ஆனால் கடைசியில் 5-0 என்ற கோல் கணக்கில் போரிஸா டோர்ட்மண்ட் அணியை தோற்கடித்து புள்ளிப்படியலில் முதல் இடத்திற்கு வந்தது பேயர்ன் முனிச்.
தற்போது நாம் பண்டிஸ் லீகாவில் சிறப்பாக செயல்பட்ட ஐந்து கோல்கீப்பர்களை பார்க்க உள்ளோம்….
5. லூகாஸ் ஹரடெக்கி – பேயர் லெவர்குசென் அணி
இந்த சீசனில் பேயர் லெவர்குசென் அணி புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் வந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தவர் லூகாஸ் ஹரடெக்கி. பின்லாந்து நாட்டைச் சேர்ந்த இவரது அருமையான கோல் கீப்பிங் திறமையால் கடைசி ஆறு போட்டிகளில் லெவர்குசென் அணி வெறும் 4 கோல்களை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளது. 29 வயதான இவர், இந்த சீசனில் லெவர்குசென் அணிக்காக 32 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அதிக கோல்களை தடுத்த கோல்கீப்பர்களின் பட்டியலில் 14-வது இடத்தில் உள்ளார் லூகாஸ் ஹரடெக்கி.
4. ஜிரி பவ்லெங்கா – வெர்டர் ப்ரீமென் அணி
செக் நாட்டைச் சேர்ந்த பவ்லெங்காவிற்கு இந்த வருடமும் சிறப்பான சீசனாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டு வெர்டர் ப்ரீமென் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட இவர், இந்த ஒரு வருட காலத்திற்குள் பண்டிஸ் லீகாவின் சிறந்த கோல்கீப்பர்களில் ஒருவர் என்ற பெயரைப் பெற்றுள்ளார்.
வெர்டர் ப்ரீமென் அணி விளையாடிய 34 போட்டிகளிலும் பங்கேற்ற பவ்லெங்கா, கோலை நோக்கி வந்த 109 ஷாட்களை தடுத்து அதிக கோல்களை தடுத்த பட்டியலில் எட்டாவது இடம் பிடித்துள்ளார். இது தவிர 49 கோல்களை விட்டுக் கொடுத்துள்ளார்.
3. கெவின் ட்ராப் – எய்ன்ட்ராச்ட் ஃப்ராங்க்பர்ட் அணி
பிஎஸ்ஜி அணியில் இருந்து லோன் மூலம் ஃப்ராங்க்பர்ட் அணிக்கு வந்த கெவின் ட்ராப், இந்த சீசனில் மறுமலர்ச்சி அடைந்துள்ளார். அல்போன்சா அரேலோ மற்றும் இத்தாலியன் லெஜண்ட் பஃபூன் வருகையால், பிஎஸ்ஜி அணியில் கோல்கீப்பர் பதவிக்கு இரண்டாவது தேர்வாகவே இவர் பார்க்கப்பட்டார். இதன் காரணமாக அந்த அணியிலிருந்து விலகி ஃப்ரங்க்பர்ட் அணியில் சேர்ந்தது முதல் தனது திறனை முழுவதுமாக வெளிப்படுத்தி வருகிறார். இந்த சீசனில் 33 போட்டிகளில் கலந்து கொண்டு அதிக கோல்களை தடுத்தோர் (120 ஷாட்கள்) பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
2. யான் சோமர் – போரிசியா மோன்சென்கிளாட்பச் அணி
பண்டிஸ் லீகாவில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கோல்கீப்பர்களில் ஒருவராக திகழும் யான் சோமர், தான் ஏன் சிறந்த கோல் கீப்பராக கருதப்படுகிறேன் என்பதை மறுபடியும் இந்த சீசனில் நிரூபித்துள்ளார். இந்த சீசனில் அனைத்து போட்டிகளிலும் விளையாடிய சோமர், 115 ஷாட்களை தடுத்து அதிக கோல்களை தடுத்த கோல்கீப்பர் பட்டியலில் ஐந்தாவது இடம் பிடித்துள்ளார்.
1. பீட்டர் குலாஸ்கி – ஆர்பி லெய்ப்ஸிக் அணி
யார் குறைவான கோல்களை விட்டுக் கொடுத்துள்ளார்களோ அவர்களே இந்த சீசனின் சிறந்த கோல்கீப்பராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த சீசன் முழுவதும் அற்புதமான ஃபார்மில் இருந்த பீட்டர் குலாஸ்கி, வெறும் 27 கோல்களை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார். ஹங்கேரிய நாட்டைச் சேர்ந்த இவர், இந்த சீசனில் கோலை நோக்கி வந்த 93 ஷாட்களை தடுத்துள்ளார்.