மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நட்சத்திர வீரர் பவுல் போக்பா போல் ஒரு சில வீரர்களே கால்பந்து உலகில் விவாதத்திற்கு உள்ளாகி இருப்பார்கள். ஜூவெண்டஸ் அணியிலிருந்து 2016-ம் ஆண்டு மான்செஸ்டர் அணியில் சேர்ந்ததிலிருந்து, இவர் மான்செஸ்டர் அணிக்கு சரியான நபர் தானா, ஓல்ட் ட்ராஃபோர்டில் விளையாடுவதற்கான சரியான அணுகுமுறை இவரிடம் இருக்கிறதா, அணியில் இவரது நிலை என்ன? என்பது போன்ற பல விஷயங்கள் இவரைப் பற்றி விவாதிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் மான்செஸ்டர் அணியிலிருந்து வெளியேறவுள்ளார் போக்பா. இதுகுறித்து போக்பா கூறுகையில், “மூன்று வருடங்கள் அணியில் இருந்து சிறப்பாக விளையாடியுள்ளேன். எல்லாரையும் போல எனக்கும் நல்ல சம்பவங்களும் மோசமான தருணங்களும் ஏற்பட்டுள்ளன. அணியிலிருந்து வெளியேற இதுவே சரியான நேரம் என நினைக்கிறேன்” என்கிறார். இவரை ஒப்பந்தம் செய்ய ரியல் மாட்ரிட் மற்றும் ஜுவெண்டஸ் அணிகள் காத்துக் கொண்டிருக்கின்றன.
கடந்த சீசன் போக்பாவிற்கு சிறப்பானதாகவே இருந்தது. ப்ரீமியர் லீக்கில் 13 கோல்களை அடித்ததோடு ஒன்பது முறை சக வீரர்கள் கோல் அடிக்கவும் உதவி புரிந்துள்ளார். ஆனால் மான்செஸ்டர் அணியை பொறுத்தவரை இது மோசமான சீசனாக அமைந்துள்ளது. ப்ரீமியர் லீக்கில் ஆறாம் இடம் பிடித்ததோடு சாம்பியன்ஸ் லீக் மற்றும் FA கோப்பையில் தோல்வியடைந்தது.
மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து போக்பா வெளியேறும் பட்சத்தில் அவரது இடத்தை நிரப்பக் கூடிய வீரரை ஒப்பந்தம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது மான்செஸ்டர். போக்பாவின் இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள ஐந்து வீரர்களைப் பற்றிய கட்டுரையே இது.
1. யூரி டைல்மேன்ஸ்
வரவுள்ள சீசனில் இளம் வீரர்கள் மற்றும் திறமை வாய்ந்த வீரர்களை ஒப்பந்தம் செய்ய மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே ஸ்வான்சா சிட்டியின் டேனியல் ஜேம்ஸ் மற்றும் கிரிஸ்டல் பேலஸின் ஆரோன் வான் பிஸாகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். கடந்த சீசனில் லீசெஸ்டர் சிட்டிக்காக சிறப்பாக விளையாடிய யூரி டைல்மேன்ஸை ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது மான்செஸ்டர்.
மான்செஸ்டர் யுனைடெட் அணியின் பயிற்சியாளராக ஆனதிலிருந்து பந்தை கச்சிதமாக கடத்தும் பாணியை பின்பற்றி வருகிறார் ஒலே கன்னர் சோல்ஸ்க்ஜேர். இந்த விதமான ஆட்டத்திற்கு சரியாக பொருந்துபவர் டைல்மேன்ஸ். 22 வயதாகும் டைல்மேன்ஸ் லீசெஸ்டர் சிட்டியில் விளையாடிய சில போட்டிகளிலேயே தனது முழு திறமையை வெளிப்படுத்தியுள்ளார்,. நிச்சியம் இவர் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு கூடுதல் பலம் சேர்ப்பார்.
2. டேங்கய் டோம்ப்ளி
இவரை அணியில் ஒப்பந்தம் செய்ய பல அணிகளும் போட்டி போடுகின்றன. மிட்ஃபீல்டரான டோம்ப்ளியை எடுக்க டோட்டஹம் ஹாட்ஸ்பர் மற்றும் ஜூவென்டஸ் அணிகள் மும்முரம் காட்டுகின்றன. மிட் ஃபீல்டில் இருந்து போட்டியின் போக்கை கச்சிதமாக கணிக்கும் திறமை பெற்ற டோம்ப்ளி, அனைத்து பகுதிகளிலும் திறமையாக விளையாடுபவர்.
வீரர்களுக்கு இடையே கச்சிதமாக பந்தை கடத்துவதோடு எதிரணி வீரர்களிடம் இருந்து பந்தை பறிப்பதிலும் வல்லவர். கரிம் பென்சிமா, மிராலெம் ஜானிக், சாமுவேல் உமிட்டி போன்ற வீரர்களை போல் இவரும் பிரெஞ்ச் அகாடமியில் பயிற்சி பெற்றவரே. சோல்ஸ்க்ஜேர் கட்டமைக்க விரும்பும் அணிக்கு இவர் பொறுத்தமான தேர்வாக இருப்பார்.
3. அட்ரென் ரேபியாட்
அடுத்த சீசனுக்குள் அணியை முழுமையாக மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது மான்செஸ்டர் யுனைடெட். இதனால் சில வீரர்களை இலவசமாக ற்ற அணியிலிருந்து டிரான்ஸ்ஃபர் செய்யும் வாய்ப்பை எதிர்பார்க்கிறது மான்செஸ்டர். அட்ரென் ரேபியோட் இலவச டிரான்ஸ்ஃபராக கிடைத்தால் அது மான்செஸ்டர் அணிக்கு ஜாக்பாட் அடித்தது போல் ஆகிவிடும். கடந்த சீசனின் இறுதியில் பிஎஸ்ஜி அணியிலிருந்து விலகிய ரேபியாட், தற்போது எந்த அணியிலும் இல்லாமல் உள்ளார். இவரை ஒப்பந்தம் செய்ய இதுவே சரியான நேரம்.
ஸ்பெயின், இத்தாலி மற்றும் இங்கிலாந்து அணிகள் இவரை ஒப்பந்தம் செய்ய விரும்புகின்றன. 24 வயதான இவர், போக்பாவாவை விட சற்று வித்தியாசமான ஆட்டத்திறன் கொண்டவர். ஆனால் மிட் ஃபீல்டில் பெரிதும் தாக்கம் செலுத்தும் இவர், தன்னைச் சுற்றியுள்ள வீரர்களிடமிருந்து சிறந்ததை வெளிக் கொண்டு வருவார்.
4. இவான் ரகிடிக்
இந்தப் பட்டியலில் பலரும் இளம் வீரர்களாகவும் தங்கள் கேரியரில் இனிமேல் தான் உச்சத்தை தொடவும் உள்ளனர். ஆனால் ரகிடிக் அப்படியல்ல. அவர் தனது உச்சத்தை ஏற்கனவே அடைந்துவிட்டார். பல காலமாக ஒரு அணுபவ வீரரை தேடிக் கொண்டிருந்த மான்செஸ்டர் அணிக்கு இவரது அணுபவம் நிச்சியம் கை கொடுக்கும்.
31 வயதாகும் ரகிடிக் ஐரோப்பிய கால்பந்தில் அனைத்து கோப்பைகளையும் வென்றுள்ளார். பார்சிலோனா அணி டீ ஜாங்கை பெரிய தொகைக்கு ஒபந்தம் செய்துள்ள நிலையில், புதிய சவாலை எதிர்கொள்ள ரகிடிக்கிற்கு இதுவே சரியான தருணம்.
5. ப்ரூனோ ஃபெர்னாண்டஸ்
மிட் ஃபீல்ட் பகுதியில் இருந்து நிறைய கோல்களை அடிக்கும் வீரர்களையே போக்பாவிற்கான மாற்று வீரராக எதிர்பார்க்கிறார் பயிற்சியாளர் ஒலே சோல்ஸ்க்ஜேர். அப்படியென்றால் இதற்கு சரியான் நபர் ஸ்போர்டிங் லிஸ்பன் அணியின் ப்ரூனோ ஃபெர்னாண்டஸ். கடந்த சீசனில் 50 போட்டிகளில் விளையாடி 31 கோல்களை அடித்துள்ளார் ப்ரூனோ.
கடந்த சீசனில் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் ஃபார்வேடில் விளையாடிய மூன்று வீரர்களும் சீரான ஃபார்மில் இல்லை. இதனால் பல போட்டிகளில் தோல்வியை சந்தித்தது மான்செஸ்டர். இந்த பிரச்சனையை தீர்க்க சரியான நபராக இருப்பார் ப்ரூனோ. தன் காலில் பந்து கிடைக்கும் போது அதை கோல் ஆக்குவதில் வல்லவரான ப்ரூனோ, நிச்சியம் மான்செஸ்டர் யுனைடெட் அணியை மேம்படுத்துவார்.