நம் மனதிற்கு பிடித்த, நாம் ரசிக்கும் வீரர்களின் புள்ளி விபரங்களையும் அவர்களின் ஆட்ட நுணுக்கங்களையும் நம் விரல் நுனியில் எப்போதும் வைத்திருப்போம். சில சமயங்களில் அந்த வீரர்களின் தனிப்பட்ட ரகசிய விஷயங்களை கூட ஒன்று விடாமல் தெரிந்து வைத்திருப்போம். ஆனாலும் சில ரகசியங்களை நம்மால் ஒரு போதும் தெரிந்துகொள்ள முடியாது. அப்படியான ஒரு பிரபல வீரரின் ரகசியத்தை தான் நாம் இப்போது தெரிந்துகொள்ளப் போகிறோம்.
மெஸ்ஸியின் சாதனையும் திறமையும் உலகமே அறியும். ஆனால் அவரது தனிப்பட்ட விஷயங்கள் குறித்து சமூக ஊடகத்திலோ, பத்திரிக்கையாளர்களிடமோ அவர் பகிர்ந்து கொண்டதே இல்லை.
இப்படி யாருக்குமே தெரியாத மெஸ்ஸி பற்றிய 5 விஷயங்கள் இதோ...
5. பார்சிலோனா அணியுடனான தனது முதல் ஒப்பந்தத்தை கை துடைக்கும் (நேப்கின்) தாளில் கையெழுத்திட்டார்:
இன்று நூற்றுக்கணக்கான பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் பல கோடிகளுக்கு மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய பல அணி காத்து கொண்டிருக்கிறது. ஆனால் அவர் தனது முதல் ஒப்பந்தத்தின் போது எதில் கையெழுத்திட்டார் தெரியுமா? நாம் கை துடைக்கும் (நேப்கின்) சாதாரன தாளில் தான் பார்சிலோனா அணிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் மெஸ்ஸி. என்ன, கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறதா?
இளம் வயதிலேயே மெஸ்ஸியின் திறமையை கவனித்த பார்சிலோனா அணியின் அப்போதைய தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கார்லஸ் ரிசாச், 13 வயது சிறுவனுக்குள் இவ்வுளவு திறமையா என ஆச்சர்யப்பட்டு உடனடியாக அவரை ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்தார். அந்த சமயத்தில் எழுதுவதற்கு தாள் எதுவும் கிடைக்காததால் தன்னிடமிருந்த கை துடைக்கும் தாளில் பார்சிலோனா அணிக்கான ஒப்பந்தத்தை எழுதி மெஸ்ஸியிடம் கையெழுத்து வாங்கினார். இன்றும் கையெழுத்திட்ட நேப்கின் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
4. முதல் போட்டியிலேயே ரெட் கார்ட் வாங்கியவர்:
மெஸ்ஸி ஒரு போதும் ஒழுக்கக்கேடான விஷயத்தில் என்றும் சிக்கியதில்லை. ஆனால், அர்ஜெண்டினா அணிக்காக அவர் விளையாடிய முதல் போட்டியிலேயே சிகப்பு அட்டை (ரெட் கார்ட்) பெற்றார். 2005-ம் ஆண்டு அர்ஜெண்டினாவிற்கும் ஹங்கேரிக்கும் இடையே நடைபெற்ற போட்டியின் 63-வது நிமிடத்தில் களம் இறங்கினார் மெஸ்ஸி. ஆனால் தான் இறங்கிய 43 நொடிக்குள்ளேயே, ஹங்கேரி விரர் வில்மோஸை முழங்கையால் இடித்ததாக கூறி நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
பந்தை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த மெஸ்ஸியின் ஜெர்சியை பிடித்து வேகமாக இழுப்பார் வில்மோஸ். அதிலிருந்து விடுவிக்க முயற்சி செய்யும்போது தற்செயலாக மெஸ்ஸியின் முழங்கை வில்மோஸின் முகத்தில் பட்டுவிடும். ஆனால் இதனை மெஸ்ஸி வேண்டுமென்றே செய்தார் என்று நடுவரால் வெளியேற்றப்படுவார். பல கற்பனைகளோடு தனது முதல் போட்டியில் இறங்கிய மெஸ்ஸிக்கு அன்று கொடுங்கனவாகிப் போனது. ஆனால் அதன்பிறகு மெஸ்ஸி விளையாடிய ஒரு போட்டியில் கூட சிவப்பு அட்டை பெற்றதில்லை.
3. கோக் மெஷினை நீக்கிய பார்சிலோனா:
இன்று பல சாதனைகளை புரிந்து கால்பந்து உலகின் தன்னிகரற்ற வீரராக ஜொலிக்கிறார் மெஸ்ஸி. தங்கள் அணியில் சேர்ந்து விளையாடமாட்டாரா என பல அணிகள் மெஸ்ஸிக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தளவிற்கு திறமையான வீரராக வளர்ந்துள்ள மெஸ்ஸி, தன்னுடைய இளம் பருவத்தில் டயட்டிற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காமல் அதிகளவில் கோக் பானத்தை அருந்தி வருவார். இதனால் அவரது உடற்தகுதி மற்ற வீரர்களை காட்டிலும் மோசமாக இருந்தது. இதை அறிந்த பார்சிலோனா அணியின் இளைஞர் பயிற்சியாளர் கோக் மெஷினை உடனடியாக பயிற்சி முகாமிலிருந்து நீக்கினார்.
2. மெஸ்ஸிக்கு இருந்த வளர்ச்சி குறைபாட்டால் அவரின் கால்பந்து வாழ்க்கையே முடிவுக்கு வந்திருக்கும், ஆனால்....
குழந்தைப் பருவத்திலிருந்தே மெஸ்ஸிக்கு வளர்ச்சி குறைபாடு இருந்ததை அவரது பெரும்பாலான ரசிகர்கள் அறிவார்கள். ஆனால் பலருக்கு தெரியாத விஷயம், இந்த குறைபாட்டால் அவரது கால்பந்து வாழ்க்கையே முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டது. வளர்ச்சி குறைபாட்டின் காரணமாக அவருக்கு பல உடல்நலக்குறைவுகள் ஏற்பட்டன. கால்பந்து தொடர்ந்து விளையாட வேண்டுமென்றால் தினமும் இரவில் ஹார்மோன் வளர்ச்சிக்கான ஊசியை காலில் போட வேண்டும்.
ஆனால் இது செலவு மிகுந்த சிகிச்சை. மெஸ்ஸியின் குடும்பத்தாலும், அவர் அப்போது விளையாடிக் கொண்டிருந்த நெவல்ஸ் ஓல்ட் கிளப்பாலும் இவ்வுளவு தொகையை செலவழிக்க முடியவில்லை. இந்த சமயத்தில் தான் சிகிச்சைக்கான முழு தொகையும் ஏற்றது பார்சிலோனா அணி. இந்த ஒரு காரணத்திற்கக தான் தனது நாட்டை விட்டு பார்சிலோனாவிற்கு சென்றார் மெஸ்ஸி.
1. ஒரு வேளை உலக கோப்பையை வாங்கியிருக்க கூடும்...
தனது இத்தனை ஆண்டு விளையாட்டு அணுபவத்தில் மெஸ்ஸி கைப்பற்றாத ஒரே கோப்பை என்றால் அது உலக கோப்பை ஆக தான் இருக்க முடியும். இந்த ஒரு கோப்பைக்காக தனது எல்லா சாதனைகளையும் விட்டுத் தர தயார் என பல முறை மெஸ்ஸி கூறியுள்ளார். 2014-ம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றும் பொன்னான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இறுதி போட்டியில் ஜெர்மனி அணியிடம் தோல்வியுற்றது அர்ஜெண்டினா. ஆனால் அவர் இளைஞராக இருந்த சமயத்தில் எடுத்த ஒரு முடிவை மாற்றி எடுத்திருந்தால் இன்று அவர் உலக கோப்பையை உச்சி முகர்ந்து தூக்கியிருக்கலாம். என்ன முடிவு அது?
13 வயதாக இருக்கும் போது பார்சிலோனா அணிக்காக விளையாட ஸ்பெயின் நாட்டிற்கு குடிபெயர்ந்தார் மெஸ்ஸி. அனைவரும் பார்சிலோனாவின் சொந்த மகனாகவே மெஸ்ஸியை பார்த்தனர். ஸ்பெயின் தேசிய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கூட மெஸ்ஸிக்கு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பை மறுத்து, தான் எப்போதும் தனது நாடான அர்ஜெண்டினாவிற்கே விளையாடுவேன் என்றார். 2010-ம் ஆண்டு ஸ்பெயின் உலக கோப்பையை வென்றது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் மெஸ்ஸியால் இன்று வரை ஒரு சர்வதேச கோப்பையை கூட வாங்க முடியவில்லை.