2000-ஆம் ஆண்டு நடந்த ரியல் மாட்ரிட் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக பெரஸ் வெற்றிப் பெற்றார். அதன் பிறகு அவரது ப்ரத்யேக கொள்கை உலகின் சிறந்த வீரர்களை மாட்ரிடிற்கு கொண்டு வருவது தான். அதற்காக அவர் பணத்தை வாரி வழங்குவதை ஒரு பழக்கமாகவே மாற்றிவிட்டார். அவ்வாறு அவர் வாங்கிய வீரர்களளில் நிறையப் பேர் மாட்ரிட் டீமில் வெகு காலமாக முக்கிய பங்காற்றிவிட்டு ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தனர். ஆனால், இக்கொள்கையில் உள்ள ஒரு கோளாறு அந்நிய வீரர்கள் சிலர் டீமில் செட் ஆகாமல் தவித்து தங்கள் திறமையை நிரூபிக்க தவறினர். அவ்வாறு அதிக பணம் கொடுத்து வாங்கி மாட்ரிடில் சாதிக்க தவறிய 5 வீரர்கள் இதோ,
#5 ஜானதன் வுட்கேட் ( Jonathan Woodgate )
சென்டர் பேக் ஆக தன் கரியரை லீட்ஸ் யுனைடடில் தொடங்கிய வுட்கேட் , 2003-ஆம் ஆண்டு நியூகேசில் யுனைடடிற்கு மாறினார். அந்த சீசனில் அசத்தலாக ஆடியதால் ரியல் மாட்ரிடின் பார்வை அவர் மீது விழுந்தது. ஆகஸ்ட் 2004-இல் 13.4 மில்லியன் பவுண்ட்ஸ் கொடுத்து அவரை வாங்கியது ரியல் மாட்ரிட் . ஆனால் காயம் காரணமாக அந்த சீசன் முழுதும் ஒரு போட்டியில் கூட அவர் பங்கேற்கவில்லை. பின் 22 செப்டம்பர் 2005-இல் முதல் போட்டியில் ஆடிய அவர் ஓன் கோல் அடித்து பின் ரெட் கார்ட் வாங்கி ரசிகர்களின் கோவத்திற்கு ஆளாகினார். அதற்கு பின் தொடர் காயங்களின் காரணமாக அவரால் நிறைய போட்டிகளில் பங்கேற்க இயலவில்லை.
#4 நூரீ சஹின் (Nuri Sahin)
வெறும் 16 வயதில் தன் ஃபுட்பால் கரியரைத் தொடங்கிய சஹின் , க்ளாப்பின் பொரூசியா டார்ட்மண்ட் அணியின் மிட்ஃபீல்டில் முக்கிய பங்காற்றினார். 2010-11 ஆம் சீசனின் சிறந்த புன்தஸ்லீகா வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஆதலால், அவரை ரியல் மாட்ரிட் வாங்கிய பொழுது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், அலொன்சோ மற்றும் கெடிராவிற்கு மொரின்ஹோ தொடர்ந்து வாய்ப்பளித்தால் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சப்ஸ்டிட்யூட் ஆக களமிறங்கிய போட்டிகளிலும் அவர் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. அடுத்த சீசனே லோனில் லிவர்பூல் அணிக்காக ஆட சம்மதித்தார்.
#3 நிகோலஸ் அனெல்கா (Nicolas Anelka)
17 வயதில் அர்சனல் அணிக்காக ஆடிய அனெல்கா, மொத்தம் 90 போட்டிகளில் 28 கோல்கள் குவித்தார். 1999 சம்மரில் ரியல் மாட்ரிட் 22.3 மில்லியன் பவுண்ட்ஸ் கொடுத்து அவரை வாங்கியது. ஆனால், அவர் தன் முதல் கோலை 5 மாதங்களுக்கு பிறகே அடித்தார். அதற்கு பின் தொடர்ந்து நன்றாக ஆடி அனைவரின் நம்பிக்கையையும் பெற்றார். ஆனால், ரியல் மாட்ரிட் ஹெட் கோச்சுடன் ஏற்பட்ட வார்த்தை தகராறால் கிளப் அவரை சஸ்பென்ட் செய்தது. அதற்கு பின் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்காததால் மாட்ரிட் அவரை பி.எஸ்.ஜீக்கு வாங்கிய பணத்திற்கே விற்றது.
#2 மைக்கல் ஓவன் ( Michael Owen )
லிவர்பூல் அணியில் 8 ஆண்டுகளாக (1998-2004) முக்கிய பங்கு வகித்து 118 கோல்கள் அடித்தவர் ஓவன். 2004-இல் மாட்ரிட் அவரை வெறும் 8 மில்லியனுக்கு வாங்கிய பொழுது ரசிகர்கள் அவரின் ஆட்டத்தை பார்க்க ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், அவர் மாட்ரிடின் ப்ளேயிங் ஸ்டைலுக்கு மாற பெரும் அவதிப்பட்டார். கோல் அடிக்க திணறியதால் ரசிகர்களிடம் அதிக எதிர்ப்பு எழுந்தது. மொத்தம் 45 போட்டிகளில் 16 கோல்கள் அடித்தார். பின், 16.8 மில்லியன் பவுண்ட்சிற்கு நியூகேசில் யுனைடட் அவரை சைன் செய்தது.
#1 காகா ( Kaka)
பிரேசில் வரலாற்றின் தலைச்சிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படும் காகா, ஏ.சி மிலன் அணிக்காக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 2007 ஆம் ஆண்டு "பலன் டி ஆர்" விருது வாங்கினார். 2009 சம்மரில் உலகின் டாப் 2 வீரர்களான காகா மற்றும் ரொனல்டோவை ரியல் மாட்ரிட் சைன் செய்தது. தன் முதல் சீசனில் வெறும் 8 கோல்கள் மட்டுமே அடித்த காகா பின்வரும் நாட்களில் இன்னும் அபாரமாக ஆடுவார் என்று எண்ணிய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ரொனல்டோ ஒருபுறம் மின்னல் வேகத்தில் வளர்ந்து கொண்டிருந்தது காகா மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், 120 போட்டிகளில் வெறும் 29 கோல்கள் மட்டுமே அடித்தார். பின், மீண்டும் ஏ.சி மிலனிற்கே சென்றார்.