ஐரோப்பிய கண்டத்தில் பல கோப்பைகளை பெற்று எதிரணிகளுக்கு சிம்ம சொப்பணமாக திகழ்ந்த ரியல் மாட்ரிட் அணிக்கு கடந்த சில மாதங்களாக சோதனைக் காலமாக உள்ளது. சென்ற ஜூன் மாதம் 13-வது முறையாக சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றதிலிருந்து இந்த ஸ்பெயின் கிளப் ஜாம்பவானிற்கு இறங்குமுகமாகவே உள்ளது. முக்கியமாக அணியின் தூணாக திகழ்ந்த நட்சத்திர வீரர் ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியிலிருந்து விலகி இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஜூவெண்டஸ் கிளப்பிற்கு விளையாடச் சென்றார். இது அணிக்கு பெருத்த அடியாக அமைந்தது.
அடுத்ததாக, அணியின் பயிற்சியாளர் ஜிடேன் தனது பதவியை விட்டு விலகினார். இவர் பயிற்சியாளராக இருந்த இரண்டரை வருடங்களில் 3 சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றுள்ளது ரியல் மாட்ரிட். இவரது சாதனையை முறியடிக்க எப்படியும் இன்னும் நீண்ட காலம் ஆகும். ஜிடேனுக்கு மாற்றாக அவரைப் போல் புகழ்பெற்ற பயிற்சியாளரை தேடிக் கொண்டிருக்கிறது ரியல் மாட்ரிட். ஆனால் அவர்கள் விருப்பத்திற்கேற்ப இன்னும் எந்த பயிற்சியாளரும் கிடைக்கவில்லை. இறுதியில் ஜூலென் லோப்டெகு என்பவரை பயிற்சியாளராக நியமித்தனர். பார்சிலோனா அணியுடம் நடந்த போட்டியில் 5-1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் தோல்வியடைந்ததை அடுத்து உடனடியாக பயிற்சியாளர் பதவியிலிருந்து ஜுலென் நீக்கப்பட்டார்.
அதன்பிறகு பயிற்சியாளர் பதவிக்காக ஆறு பிரபலமான பயிற்சியாளர்களை அணுகியுள்ளது ரியல் மாட்ரிட் அணி நிர்வாகம். ஆனால், 6 பேருமே தங்களால் முடியாது என புறகணித்து விட்டனர்.
ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் ஆகும் கனவு வாய்ப்பை புறக்கணித்த அந்த 6 பேர் யார் தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்.
6. ஜூலியன் நாக்லெஸ்மன்
ஐரோப்பிய லீக்குகளில் இளம் பயிற்சியாளர்களில் ஒருவராக இருக்கும் ஜூலியன் நாக்லெஸ்மன், ஜெர்மனைச் சேர்ந்த ஹோஃபன்கீம் அணியின் பயிற்சியாளராக இருந்து வருகிறார். 2011/12-ம் ஆண்டிலிருந்தே இந்த கிளப்பின் பயிற்சி குழுவில் பணியாற்றி வந்த ஜூலியன், 2016-ம் ஆண்டு தனது 28-வது வயதில் முழு நேர பயிற்சியாளராக ஆனார். அதுவரை ஆறு பயிற்சியாளர்களிடம் துணை பயிற்சியாளராக இருந்துள்ளார் ஜூலியன். இந்த சீஸன் இறுதியில் ஹோஃபன்கீம் அணியிலிருந்து விலக முடிவு செய்துள்ள ஜூலியன், மற்றொரு ஜெர்மன் அணியான RB லெப்சிக்கின் பயிற்சியாளராக செல்ல உள்ளார். இவர் ஜெர்மனியை விட்டு செல்வதாக தெரியவில்லை. ஒருவேளை அடுத்ததாக பேயர்ன் முனிச் அணிக்கு கூட பயிற்சியாளராக ஆகும் வாய்ப்பு உள்ளது.
5. அண்டோனியோ கோண்ட்டி
இவராக இருக்குமோ? இல்லை இல்லை, இவர் இல்லை. இப்படி அண்டோனியோ பயிற்சியாளராக நியமிப்பது குறித்து ரசிகர்களிடம் பல எதிர்பார்ப்புகள் நிலவி வந்தன. ஆனால் 2018-ம் ஆண்டே தனக்கு வந்த பயிற்சியாளர் வாய்ப்பை புறக்கணித்தார் அண்டோனியோ. செல்சியா அணியிலிருந்து சமீபத்தில் தான் இவர் நீக்கப்பட்டிருந்தாலும், ப்ரீமியர் லீக்கோடு சட்டப் பிரச்சனையில் சிக்கியுள்ளார். இவரால் தியாகோ கோஸ்டாவின் மாறுதலுக்கு நிறைய செலவாகிவிட்டதாகவும் இதனால் இவரின் சம்பளத்தில் அதை பிடித்துக் கொள்கிறோம் எனவும் செல்சியா கூறியிருந்தது. எல் கிளாசிக்கோ தோல்விக்குப் பிறகு ரியல் மாட்ரிட் அணியில் அண்டோனியோ சேர்வதாக இருந்தார். ஆனால் செர்ஜியோ ரமோஸின் கருத்தை அடுத்து தனது முடிவை மாற்றிக் கொண்டார். ரியல் மாட்ரிட் அணியின் அடுத்த பயிற்சியாளர் இவர் தானா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
4. ஜர்கன் க்ளாப்
ரியல் மாட்ரிட் அணி குறி வைத்திருந்த மற்றொரு முக்கியமான பயிற்சியாளர் இவர் தான். லிவர்பூல் அணியை யாரும் வெல்ல முடியாத அணியாக மாற்றியதோடு, பல கோப்பைகளை வென்ற பிறகு தான் அணியை விட்டுச் செல்ல வேண்டும் என முடிவு செய்துள்ளார் க்ளாப். கடந்த சீஸன் தொடங்கும் சமயத்தில் பயிற்சியாளர் பதவிக்காக இவரை அணுகியபோது உடனடியாக அதை மறுத்து விட்டார். சாம்பியன்ஸ் லீக் கோப்பையில் இறுதி போட்டி வரை லிவர்பூல் அணியை கொண்டுச் சென்ற க்ளாப், ப்ரீமியர் கோப்பையை வாங்க வேண்டும் என்ற லட்சியத்தில் உள்ளார். கடந்த மூன்று சீஸன்களாக லிவர்பூல் அணியின் பயிற்சியாளராக இருந்து வரும் க்ளாப்பிற்கு இப்போது தான் அவர் விரும்பிய அணி கிடைத்துள்ளது. க்ளாப்பை மாட்ரிட் நிர்வாகம் அணுகியது லிவர்பூல் நிர்வாகத்தை சங்கடப்படுத்தியுள்ளது.
3. மவுரிசியோ பொசேட்டினோ
இவரையே அணியின் பயிற்சியாளராக்க வேண்டும் என அதிக விருப்பம் கொண்டிரருந்தது ரியல் மாட்ரிட் நிர்வாகம். இதுவரை எந்த கோப்பையை வெல்லாவிட்டாலும் டொட்டென்ஹாம் அணியின் அற்புதமான பயிற்சியாளராக இருந்து வருகிறார் மவுரிசியோ. நீண்ட காலமாக மாட்ரிட் அணிக்கான பயிற்சியாளர் பதவிக்கு இவர் பெயர் அடிபட்டு வருகிறது. இந்நிலையில், இவரை பயிற்சியாளர் ஆக்க மான்செஸ்டர் யூனைட்டட் அணியும் முயற்சித்து வருகிறது. இங்கிலாந்து கேப்டன் ஹேரி கேன் மற்றும் மவுரிசியோவை அணியில் சேர்க்க மறுபடியும் ரியல் மாட்ரிட் இருவரையும் அணுகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இவர் இதுவரை எந்த வாய்ப்பையும் ஏற்கவில்லை.
2. மாஸிமிலியானோ அலிக்ரி
"எனக்கு வந்த ரியல் மாட்ரிட் பயிற்சியாளர் வாய்ப்பை நான் மறுத்துவிட்டேன். இதை நேரடியாகவே ரியல் மாட்ரிட் அணியின் தலைவர் பெரேஸிடம் தொலைபேசியில் தெரிவித்து விட்டேன். இந்த வாய்ப்பை வழங்கியத்ற்காக அவருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். ஜூவெண்டஸ் அணி மீது நான் கொண்ட மரியாதையால் ரியல் மாட்ரிட் வாய்ப்பை ஏற்க முடியவில்லை" என பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார் அலிக்ரி. இந்த முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையை ஜூவெண்டஸ் அணி வெல்லாவிட்டால் இவரது பயிற்சியாளர் பதவி பறிபோகும் நிலை உள்ளது. இதற்கிடையில், இவரை தங்கள் பயிற்சியாளராக ஆக்க வேண்டும் என யுத்தத்தில் இறங்க தயாராக உள்ளது மான்செஸ்டர் யூனைடைட் அணியும் ரியல் மாட்ரிட் அணியும்.
1. ஆர்சென் வெங்கர்
ஆர்சென் வெங்கரை தங்கள் அணிக்குள் இழுக்க நீண்ட நாளாக முயற்சித்து வருகிறது ரியல் மாட்ரிட். இதை வெங்கர் ஒப்புக் கொண்டுள்ளார். இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் வெங்கர் கூறுகையில்,
"எங்களுக்கென்று தனியாக நாங்கள் மைதானத்தை கட்டியபோது, கட்டாயம் ஐந்து வருடங்கள் அணியில் இருக்க வேண்டும் என்று வங்கி கூறியிருந்தது. அப்போது தான் முதல் முறையாக ரியல் மாட்ரிட் என்னை அணுகியது. எனது அணியின் நம்பிக்கையை கெடுத்தது போல் ஆகிவிடும் என்று கூறி அதை மறுத்து விட்டேன். அதன் பிறகும் என்னை மூன்று, நான்கு முறை அணுகினர். நான் சிறு வயதிலிருந்து ரியல் மாட்ரிட் அணியை விரும்பி வருகிறேன். அவர்கள் அழைத்த சமயம் ஆர்செனல் அணிக்கு மிகவும் முக்கியமான காலகட்டம். முடிவில் நான் எங்கு நன்றாக இருப்பேனோ அங்கு இருப்பதில் மகிழ்ச்சியே" என்றார்.
தற்போது வெங்கரும் எந்த அணியிலும் இல்லை. ரியல் மாட்ரிட் அணிக்கும் பயிற்சியாளர் இல்லை. இவர்கள் இருவரும் இணைய இது தான் சரியான நேரமா?