முஹமது ரஃபியின் கடைசி நிமிட கோலால், நேற்று நடைபெற்ற AFC கோப்பை போட்டியில் மினர்வா பஞ்சாப் அணியை 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது சென்னையின் FC. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் நாக் அவுட் சுற்றுக்கு செல்லலாம் என்ற நம்பிக்கையில் இருந்த சென்னையின் FC, தற்போது டிரா ஆனதால் பெருத்த ஏமாற்றத்தில் உள்ளது.
கவுகாத்தியில் உள்ள இந்திரா காந்தி தடகள மைதானத்தில் சென்னையின் FC மற்றும் மினர்வா பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. போட்டியின் 62-வது நிமிடத்தில் கோல் அடித்து மினர்வா பஞ்சாப் அணியை முன்னிலை பெற வைத்தார் சாமுவேல் லால்முயான்பியா. இதனால் முதல் முறையாக AFC கோப்பையின் நாக் அவுட் சுற்றுக்கு சென்று விடலாம் என்ற ஆசையில் இருந்தது இந்தியன் லீக்கின் முன்னாள் சாம்பியனான மினர்வா பஞ்சாப். இந்த ஆசையில் மண்ணை அள்ளி போட்டார் சென்னையின் FC அணியின் முஹமது ரஃபி. போட்டி நிறைவடையும் கடைசி நிமிடத்தில் இவர் அடித்த கோலால் போட்டி டிரா ஆனது.
வங்கதேச தலைநகரில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் அபானி தாக்கா அணி நேபாளைச் சேர்ந்த மனாங் மார்ஷ்யங்கடி அணியை 5-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. வெற்றி பெற்ற அபானி அணி 10 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பிடித்தது. இதனால் புள்ளிப்பட்டியலில் எட்டு புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்ட்து சென்னையின் FC. விளையாண்ட அனைத்து போட்டிகளையும் டிரா செய்த மினர்வா பஞ்சாப் தொடரை விட்டு வெளியேறியது. இதற்கிடையில் இண்டர் ஜோன் பிளே ஆஃப் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டுமென்றால், ஜூன் 26-ம் தேதி காத்மண்டுவில் நடைபெறவுள்ள கடைசி சுற்றுப் போட்டியில் மனாங் மார்ஷ்யங்கடி அணியை சென்னையின் FC வென்றாக வேண்டும்.
போட்டி ஆரம்பமானதிலிருந்து முதல் பாதி வரை சென்னையின் கட்டுப்பாடில் தான் பந்து அதிகமாக இருந்தது. பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததோடு ஐசக் வன்மல்ஸ்வாமா மற்றும் அனிருத் தாபா ஆகியோர் சென்னையின் FC அணிக்கு பல கோல் வாய்புகளை ஏற்படுத்தி தந்தனர். இந்திய அணியின் மிட் ஃபீல்டரான தாபாவிற்கு முதல் பாதியில் கோல் அடிக்கும் அருமையான வாய்ப்பு கிடைத்தது. எதிரணியின் இரண்டு வீரர்களை ஏமாற்றி பந்தை கடத்திச் சென்று கோல் அடிக்க முற்படுகையில் மினர்வா பஞ்சாப்பின் ராபர்ட் பிர்முஸ் அதை தடுத்தார்.
அதன் பிறகு போட்டியில் மினர்வா பஞ்சாபின் கை ஓங்கியது. 40-வது நிமிடத்தில் மொய்நுதின் கான் கோலை நோக்கி அடித்த பந்தை சென்னையின் FC கோல்கீப்பார் கரஞ்சித் சிங் லாவகமாக தடுத்தார். அடுத்த இரண்டு நிமிடத்தில் நீண்ட தூரத்திலிருந்து லால்முயன்பியா அடித்த ஷாட்டை மறுபடியும் தடுத்தார் கரஞ்சித் சிங். இரண்டாம் பாதியிலும் தொடர்ந்து மினர்வா பஞ்சாப் வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. ஆட்டத்தின் 62-வது நிமிடத்தில் லால்முயன்பியா கோல் அடித்து மினர்வா பஞ்சாப் அணியை முன்னிலை பெற வைத்தார்.
கடைசி 10 நிமிடத்தில் சென்னையின் FC வீரர்கள் கொடுத்த நெருக்கடியில் மினர்வா பஞ்சாப் வீரர்கள் திணறினர். அடுத்தடுத்து கோலை நோக்கி ஷாட்களை அடித்துக் கொண்டிருந்தனர் சென்னையின் FC. எதிரணியின் தடுப்புகளை மீற நீண்ட தூர ஷாட்களை அடித்தனர் சென்னையின் FC. இதற்கு கை மேல் பலன் கிடைத்தது. போட்டியின் 90-வது நிமிடத்தில் முஹமது ரஃபி அடித்த கோலால் சென்னையின் FC நிம்மதி பெருமூச்சு விட்டது. இந்த கோலால் எந்த அணிக்கும் வெற்றி தோல்வியின்றி போட்டி டிராவில் முடிந்தது.
போட்டியின் நடுவில் சென்னையின் FC வீரர் வினீத்தும் மினர்வா பஞ்சாப் கோல் கீப்பர் அர்ஷதீப் சிங்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். இதில் மூக்கில் பலத்த காயமடைந்த அர்ஷதீப் சிங் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.