ஆப்ரிக்க கப் ஆஃப் நேஷன்ஸ் (AFCON) தொடர் இன்று எகிப்து நாட்டில் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் தொடரை நடத்தும் எகிப்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாடுகின்றன. வழக்கமாக கால்பந்து ரசிகர்கள் இந்த கோப்பையை கண்டுகொள்ள மாட்டார்கள். ஏனென்றால் முன்பு ஆப்ரிக்க கண்டத்தைச் சேர்ந்த ஒரு சில வீரர்களே ஐரோப்பிய கிளப்புகளில் விளையாடுவார்கள்.
ஆனால் இன்று நிலைமை மாறியுள்ளது. லிவர்பூல் இணையர்கள் சாலா மற்றும் சடியோ மனே, மான்செஸ்டர் சிட்டியின் ரியாத் மஹ்ரெஸ், நபோலி அணியின் கலிடோ கவுலிபாலி, கிரிஸ்டல் பேலசின் வில்ஃப்ரட் ஜாகா, அஜக்ஸ் அணியின் ஹகிம் சிரெச் என ஆப்ரிக்காவைச் சேர்ந்த பல நட்சத்திர வீரர்கள் இன்று பிரபலமன ஐரோப்பிய அணிகளில் விளையாடி வருகின்றனர். இதனால் கால்பந்து ரசிகர்களுக்கு அடுத்த ஒரு மாதத்திற்கு நல்ல விருந்து காத்திருக்கிறது.
இந்த முறை 24 அணிகள் பங்கு கொள்வதால் தங்க காலனி விருதிற்கு கடும் போட்டி நிலவும். இந்த விருதை வெல்ல அதிக வாய்ப்புள்ள 5 வீரர்களைப் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.
5. செட்ரிக் பகாம்பு – டிஆர் காங்கோ
பேரை கேட்டதும் உங்களுக்கு நியாபகம் வருகிறதா? ஆம், தனது தடுப்பாட்டத்தால் லா லீகா தொடரையே கலக்கியவர். ரியல் மாட்ரிட், பார்சிலோனா மற்றும் செல்விலா போன்ற பலம் வய்ந்த அணிகளுக்கு எதிராக தனது தடுப்பாட்டத்தின் வல்லமையை நிரூபித்தவர். கடந்த வருடம் சினோபா குயன் என்ற சீன அணிக்காக 45 யூரோ மிலியன் தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஆப்ரிக்க கப் ஆஃப் நேஷன்ஸ் தொடருக்கான தகுதிச் சுற்று போட்டியில் துனிசியா, லிபியா அணிகளுக்கு எதிராக செட்ரிக் கோல் அடித்திருந்தாலும், மற்ற போட்டிகளில் அணியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால் இந்த வருடம் சீன லீக்குகளில் இவரது சிறப்பான ஆட்டத்தை பார்த்து மறுபடியும் அணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளார். இந்த வருட சீசனில் 13 போட்டிகளில் விளையாடி ஒன்பது கோல்களையும் மூன்று முறை சக வீரர்கள் கோல் அடிக்கவும் உதவி புரிந்துள்ளார்.
4. ஒடியோன் இகாலோ – நைஜீரியா
ஒரு காலத்தில் ப்ரீமியர் லீக்கில் தொடர்ச்சியாக கோல் அடித்துக் கொண்டிருந்த ஒடியோன் இகாலோ, 2016-ம் ஆண்டு சீன சூப்பர் லீக்கிற்கு விளையாடச் சென்றதிலிருந்து அவரது இறங்குமுகம் ஆரம்பித்துவிட்டது. கடந்த இரண்டு வருடங்களில் வெறும் எட்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஒடியோன், அதில் இரண்டு கோல்களை மட்டுமே அடித்துள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற உலக கோப்பையில் தனது மோசமான ஆட்டத்தால் ரசிகர்களின் கடும் விமர்சனத்திற்கு ஆளானார். ஆனால் இதற்கெல்லாம் ஒடியோன் மனம் தளரவில்லை.
ஆப்ரிக்க கப் ஆஃப் நேஷன்ஸ் தொடருக்கான தகுதிச் சுற்று போட்டியில் அதிக கோல் அடித்ததோடு நைஜீரியா அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். இவரது மறுமலர்ச்சி ரசிகர்களையும் அணி நிர்வாகத்தையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இந்த தொடரில் இவர் பெரும் பங்களிப்பு அளிப்பார் என எதிர்பார்க்கலாம்.
3. சடியோ மனே – செனகல்
சடியோ மனேவின் சிறப்பான ஆட்டத்தை நாம் கடந்த சீசனில் கண்டு களித்தோம். லிவர்பூல் அணிக்காக பல கோல்களை அடித்துள்ளதோடு பலமுறை சாலாவை விட தானே லிவர்பூல் அணியின் முக்கியமான வீரர் என்பதை வெளிப்படுத்தினார். சாலாவோடு சேர்ந்து தங்க காலனி விருதை வென்றதோடு மான்செஸ்டர் யுனைடெட், ஆர்செனல், செல்சீ, பேயர்ன் முனிச் போன்ற பலமிக்க அணிகளுக்கு எதிராக கோல் அடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார்.
மேலும், இவரது ஆட்டத்திறனும் வேகமும் எதிரணியின் தடுப்பு அரணுக்கு மிகவும் ஆபத்தானது. செனகல் எளிதான க்ரூபில் இடம் பெற்றுள்ளதால் அரையிறுதில் எகிப்து அணியை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது.
2. ஹகிம் சியெச் – மொரோக்கோ
கடந்த சீசனில் டச்சு அணியாஅன் அஜக்ஸ் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி வரை வந்து அனவைரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த அணியில் பல இளம் வீரர்கள் தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்கினார்கள்,. அவர்களில் ஒருவர் தான் ஹகிம் சியெச். கடந்த சீசனில் 21 கோல்களை அடித்துள்ளதோடு 24 முறை சக வீரர்கள் கோல் அடிக்கவும் உதவி புரிந்துள்ளார்.
ஆனால் இத்தகைய சிறப்பான ஆட்டத்தை தனது தேசிய அணியான மொரொக்கோவில் இன்னும் ஹகிம் வெளிப்படுத்தவில்லை. கடந்த உலக கோப்பையில் ஒரு கோலும் அடிக்காததோடு இந்த முறை தகுதி சுற்று போட்டியிலும் மூன்று கோல் மட்டுமே அடிதுள்ளார். ஆனால் இதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு மொரோக்கோ அணிக்கு கோப்பை வென்று தருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
1. முஹமது சாலா – எகிப்து
2017 சீசனில் பட்டையை கிளப்பிய முஹமது சாலா, கடந்த சீசனில் கொஞ்சம் அடக்கியே வாசித்தார். ஆனாலும் ப்ரீமியர் லீக்கில் லிவர்பூல் அணியை இரண்டாம் இடம் பிடிக்க உதவியதோடு கவுரமிக்க சம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்லவும் உதவி புரிந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சக வீரர் சடியோ மனேவோடு தங்க காலனி விருதை பகிர்ந்து கொண்டார்.
கடந்த சீசனில் ஒட்டுமொத்தமாக 27 கோல்களை அடித்துள்ள சாலா, 13 முரை சக வீரர்கள் கோல் அடிக்க உதவி செய்துள்ளார். முன்பிருந்த சிறப்பான ஆட்டம் தற்போது சாலாவிடம் இல்லை என பலர் கூறினாலும், எகிப்து அணியை கோப்பை வெல்ல வைக்க வேண்டும் என்ற மிகப்பெரிய பொறுப்பு சாலாவின் தோள் மீது உள்ளது. தனது சிறப்பான ஆட்டத்தை சாலா இங்கும் வெளிப்படுத்தினால், எகிப்து கோப்பை வெல்வதை யாராலும் தடுக்க முடியாது.