2018-19 ஆம் ஆண்டுக்கான பிரீமியர் லீக் சீசனில் லிவர்பூல் அணி ஏறக்குறைய கோப்பையை வெல்லும் தருவாயில் வந்து 1 புள்ளி வித்தியாசத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியிடம் தவறவிட்டது. இருப்பினும் ஐரோப்பிய நாடுகளின் முன்னணி கிளப் அணிகளுக்கு இடையே நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை லிவர்பூல் அணி கைப்பற்றி அசத்தியது.
லிவர்பூல் அணியின் இத்தகைய வெற்றிக்கு தடுப்பாட்ட வீரர் விர்ஜில் வான் டேக் மற்றும் கோல் கீப்பர் அலிசன் பெக்கர் இருவரும் பெரும்பங்கு வகித்தனர்.
அதேபோல் கடந்த பிரீமியர் லீக் (2018-19) சீசனில் 22 முறை கிளீன் சீட் பெற்று கோல்டன் க்ளோவ் விருதையும் அலிசன் பெக்கர் பெற்றார்.
பிரீமியர் லீக் சீசன் துவங்குவதற்கு முன்பாக துரதிஷ்டவசமாக பெனால்டி கோல்கள் அடிப்படையில் மான்செஸ்டர் சிட்டி அணியிடம் கம்யூனிட்டி ஷீல்டு கோப்பையை வெல்லும் வாய்ப்பை லிவர்பூல் அணி தவறவிட்டது.
2019-20 ஆம் ஆண்டுக்கான சீசன் சில தினங்களுக்கு முன்பு துவங்கியது. இம்முறை நிச்சயம் லிவர்பூல் அணி பிரீமியர் லீக் கோப்பையை வெல்லும் என அணியின் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். அதற்கு ஏற்றார்போல் நார்விச் சிட்டி அணிக்கு எதிராக முதல் போட்டியை 4-1 என லிவர்பூல் அணி அபாரமாக வெற்றி பெற்றது.
நார்விச் சிட்டி அணிக்கு எதிரான முதல் பிரீமியர் லீக் போட்டியில் லிவர்பூல் அணியின் நட்சத்திர கோல் கீப்பர் அலிசன் பெக்கர் கணுக்காலில் திடீரென தசைப்பிடிப்பு ஏற்பட்டு போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வரும் அலிசன் திடீரென இப்படி காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறியதும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நேரடியாக மருத்துவ பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அலிசன் பெக்கர் சோதனை முடிவில் கணுக்காலில் உள்ள தசை பிடிப்பு மற்றும் நரம்புகள் தீவிரமான அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டதன் காரணமாக, அவருக்கு சில வாரங்கள் தொடர் மருத்துவ பரிசோதனை தேவை என தெரிவிக்கப்பட்டது.
இதனால் அடுத்து இரண்டு மூன்று வாரங்களுக்கு அலிசன் அணியில் இடம்பெற மாட்டார் என லிவர்பூல் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் வருகின்ற 15 ஆம் தேதி நடைபெறும் UEFA சூப்பர் கோப்பை இறுதிப்போட்டியில் லிவர்பூல் அணி செல்சீ அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியிலும் அலிசன் கலந்துகொள்ள மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலிசனுக்கு பதிலாக இந்த ஆண்டு புதிதாக அணியில் இடம்பெற்றுள்ள அட்ரியன் கலந்து கொள்வார். அலிசன் வரும்வரை பிரீமியர் லீக் போட்டியிலும் இவரே முதன்மை கோல் கீப்பராக இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அணியின் பயிற்சியாளர் ஜூயேன் க்ளோப் கூறுகையில், "இது அணிக்கு நிச்சயம் பெருத்த பின்னடைவாக அமையும். இந்த தசை பிடிப்பு காரணமாக ஓரிரு வாரங்களுக்கு அலிசனால் ஆட முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது" என்றார்.
"அவர் குணமடைய நிச்சயம் ஓரிரு வாரங்கள் எடுக்கும். ஆனால் முழுமையாக குணமடைய 6 வாரங்கள் கூட ஆகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். நான் ஓரிரு வாரங்கள் மட்டுமே ஆகும் என எதிர்பார்க்கிறேன். மனதளவில் மிகவும் திடமான அலிசன் விரைவில் குணமடைவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" என்றார்.