கோப்பா அமெரிக்கா தொடரில் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்படும் பிரேசில் அணி தனது முதல் போட்டியில் பொலிவியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வென்று அசத்தியது. இதனால் கோப்பை வெல்ல வாய்ப்புள்ள மற்றொரு அணியான அர்ஜெண்டினாவும் இதேப் போல் கெத்து காட்டும் என நினைத்துக் கொண்டிருக்கையில், கொலம்பியா அணியிடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோற்றுள்ளது மெஸ்ஸி படை.
சரி, முதல் போட்டியே பலமிக்க கொலம்பியாவிடம் மோதுவதால், குறைந்தப்ட்சம் டிரா செய்து ஒரு புள்ளியாவது பெறும் என ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால் அதில் மண்ணை அள்ளி போட்டுள்ளது அர்ஜெண்டினா. கோப்பா அமெரிக்கா தொடர் தொடங்கியதிலிருந்தே, இந்த முறை அர்ஜெண்டினா கோப்பை வெல்ல குறைவான வாய்ப்பே உள்ளதாக பலரும் கணித்திருந்தனர். ஆனால் இந்தளவிற்கு மோசமாக தொடரை தொடங்கும் என நாம் எதிர்பார்க்கவில்லை.
இந்தக் கட்டுரையில் அர்ஜென்டினா அணி ஏன் தோற்றது என்பதற்கான மூன்று காரணங்களை பார்ப்போம்.
3. தெளிவான கேம் பிளான் இல்லாதது
முக்கியமாக அர்ஜெண்டினாவை விட கொலம்பிய அணி குழுவாக விளையாடியது. 2018 உலக கோப்பையில் மோசமான செயல்பாடுகளுக்குப் பிறகு, அர்ஜெண்டினா அணியில் பல அதிரடி மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார்ப் போல் பயிற்சியாளர் ஜோர்ஜ் சம்போலி நீக்கப்பட்டு பல வீரர்கள் வெளியேற்றப்பட்டனர். புதிய பயிற்சியாளராக 41 வயதான லியோனல் ஸ்கலோனி நியமிக்கப்பட்டார்.
கோப்பா அமெரிக்காவிற்கு முன்னதாக நடைபெற்ற மூன்று நட்புறவு போட்டிகளிலும் பல வீரர்களைப் பயன்படுத்தி சோதித்துப் பார்த்தார் ஸ்கலோனி. கோப்பா அமெரிக்கா தொடருக்காக இவர் அறிவித்த 23 பேர் கொண்ட அணியில் பலரும் போதிய அணுபவம் இல்லாதவர்கள். அணியில் பலரும் இப்போது தான் தங்களது முதல் சர்வதேச போட்டியை விளையாடவுள்ளார்கள்.
கொலம்பியாவிற்கு எதிரான போட்டி தொடங்கியதிலிருந்தே அர்ஜெண்டினா வீரர்களுக்கு இடையே போதிய பிணைப்பு இல்லாதது அழகாக வெளிப்பட்டது. இதனால் எந்த நோக்கமும் இன்றி தன்போக்கில் விளையாடினர். இவர்களிடம் ஒரே ஒரு திட்டமே இருந்தது. அதாவது பந்தை கடத்தி மெஸ்ஸியிடம் கொடுப்பது. இதை சரியாக புரிந்து கொண்ட கொலம்பிய வீரர்கள் மெஸ்ஸியை சுற்றி வளைத்து அவரிடம் பந்து கிடைக்காதவாறு பார்த்துக் கொண்டனர்.
ஆனால் மறுபுறமோ, குழுவாக இணைந்து எப்படி விளையாடுவது என்பதை சொல்லிக் கொடுத்தது கொலம்பியா. தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தியதோடு சரியான ஒத்துழைப்பில் தாக்குதல் ஆட்டத்தையும் தொடர்ந்தனர். இதற்கு கை மேல் பலன் கிடைத்தது. 1979-க்குப் பிறகு இப்போது தான் முதல் முறையாக கோப்பா அமெரிக்கா தொடரின் முதல் போட்டியில் அர்ஜெண்டினா அணி தோல்வியடைந்துள்ளது.
2. வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட கொலம்பியா
போட்டி முழுவதும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபடாததால் அர்ஜெண்டினா அணி தோல்வி அடைந்ததில் அந்த ஆச்சர்யமும் இல்லை. ஆனால் ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் ஒரு பதினைந்து நிமிடம் கொலம்பியாவை விட சற்று மேலோங்கி இருந்தது அர்ஜ்ர்ண்டினாவின் கை. ஒரு சில கோல் அடிக்கும் வாய்ப்பை நிகோலஸ் ஓட்மெண்டி மற்றும் லியான்றோ பரடேஸ் போன்ற வீரர்கள் அர்ஜெண்டினாவிற்கு ஏற்படுத்தி கொடுத்தனர்.
இந்த பதினைந்து நிமிடத்தில் மட்டும் ஐந்து முறை கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டது அர்ஜெண்டினா. ஒட்டுமொத்தமாக பார்க்கையில், போட்டியில் 13 முறை கோலை நோக்கி அர்ஜெண்டினா வீரர்கள் அடித்தாலும் ஒரு கோல் கூட செல்லவில்லை. ஆனால் இதற்கு நேர்மாறாக, கொலம்பியா அணி ஆட்டத்தின் 70 நிமிடம் வரை கோலை நோக்கி ஒரு பந்தை கூட அடிக்கவில்லை.
அதன் பிறகே 71-வது நிமிடத்தில் அற்புதமான கோலை அடித்தார் ரோஜர் மார்டினஸ். 15 நிமிடங்கள் கழித்து கொலம்பியா அணியின் மற்றொரு வீரர் துவான் ஜபாடா இரண்டாவது கோலை அடித்தார். இதனால் 2-0 என்று முன்னிலை பெற்றது கொலம்பியா. மொத்தமே எட்டு முறை மட்டுமே கோலை நோக்கி அடித்தாலும் அதில் இரண்டை கோலாக்கியது கொலம்பியா.
1. கொலம்பியா பயிற்சியாளர் கார்லோஸ் குய்ரோஸின் திட்டமிடல்
கால்பந்து உலகில் மிகவும் அணுபவம் வாய்ந்த பயிற்சியாளராக கருதப்படும் கார்லோஸ் குய்ரோஸ், தனது சிறப்பான திட்டமிடலால் கொலம்பிய அணியை வெற்றி பெற வைத்துள்ளார். 1991-ம் ஆண்டு பயிற்சியாளராக ஆனபோது, தற்போதைய அர்ஜெண்டினா பயிற்சியாளர் ஸ்கலோனி தனது விளையாட்டு கேரியரை கூட தொடங்கவில்லை என்பது கவனிக்கதக்கது.
அர்ஜெண்டினாவிற்கு எதிரான ஆட்டத்தில் தனது முழு அணுபவத்தையும் பயன்படுத்தினார் கார்லோஸ். கொலம்பிய அணியின் முக்கிய வீரரான துவான் ஜபாடா, இந்த சீசனில் அட்லாண்டா அணிக்காக விளையாடி 28 கோல்களை அடித்து சிறந்த ஃபார்மில் உள்ளார். இருந்த போதும் இவரை முதலில் களம் இறக்காமல், ஆட்டத்தின் 81-வது நிமிடத்தில் மாற்று வீரராகவே களம் இறக்கினார். இது கொலம்பியா அணிக்கு நல்ல பலனை கொடுத்தது. தான் இறங்கிய நான்காவது நிமிடத்திலேயே கோல் அடித்து அசத்தினார் ஜபாடா.
ஆனால் அர்ஜெண்டினா பயிற்சியாளர் ஸ்கலோனி, ஒழுங்காக விளையாடாத செர்ஜியோ ஆகுவேராவை தொடர்ந்து விளையாட வைத்தார். மேலும், அவர் களம் இறக்கிய மாற்று வீரர்களான ரோட்ரிகோ டீ பால் மற்றும் பிசாரியோ போன்ற வீரர்களும் ஒழுங்காக சோபிக்கவில்லை. இதுவும் அர்ஜெண்டினா தோல்விக்கு முக்கிய காரணம். இந்த தடவையாவது அர்ஜெண்டினா அணியை மெஸ்ஸி கோப்பை வெல்ல வைப்பார் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கையில் தனது முதல் போட்டியிலேயே தோல்வி அடைந்துள்ளது. சர்வதேச தொடரில் மெஸ்ஸியின் சோகம் இன்னும் தொடர்கதையாகி வருகிறது. மெஸ்ஸியை அளவுக்கு மீறி அர்ஜெண்டினா அணி நம்புவதாலும் இந்த தோல்வி ஏற்பட்டுள்ளதாக சிலர் கூறுகின்றனர்.