1. கொலம்பியா பயிற்சியாளர் கார்லோஸ் குய்ரோஸின் திட்டமிடல்
கால்பந்து உலகில் மிகவும் அணுபவம் வாய்ந்த பயிற்சியாளராக கருதப்படும் கார்லோஸ் குய்ரோஸ், தனது சிறப்பான திட்டமிடலால் கொலம்பிய அணியை வெற்றி பெற வைத்துள்ளார். 1991-ம் ஆண்டு பயிற்சியாளராக ஆனபோது, தற்போதைய அர்ஜெண்டினா பயிற்சியாளர் ஸ்கலோனி தனது விளையாட்டு கேரியரை கூட தொடங்கவில்லை என்பது கவனிக்கதக்கது.
அர்ஜெண்டினாவிற்கு எதிரான ஆட்டத்தில் தனது முழு அணுபவத்தையும் பயன்படுத்தினார் கார்லோஸ். கொலம்பிய அணியின் முக்கிய வீரரான துவான் ஜபாடா, இந்த சீசனில் அட்லாண்டா அணிக்காக விளையாடி 28 கோல்களை அடித்து சிறந்த ஃபார்மில் உள்ளார். இருந்த போதும் இவரை முதலில் களம் இறக்காமல், ஆட்டத்தின் 81-வது நிமிடத்தில் மாற்று வீரராகவே களம் இறக்கினார். இது கொலம்பியா அணிக்கு நல்ல பலனை கொடுத்தது. தான் இறங்கிய நான்காவது நிமிடத்திலேயே கோல் அடித்து அசத்தினார் ஜபாடா.
ஆனால் அர்ஜெண்டினா பயிற்சியாளர் ஸ்கலோனி, ஒழுங்காக விளையாடாத செர்ஜியோ ஆகுவேராவை தொடர்ந்து விளையாட வைத்தார். மேலும், அவர் களம் இறக்கிய மாற்று வீரர்களான ரோட்ரிகோ டீ பால் மற்றும் பிசாரியோ போன்ற வீரர்களும் ஒழுங்காக சோபிக்கவில்லை. இதுவும் அர்ஜெண்டினா தோல்விக்கு முக்கிய காரணம். இந்த தடவையாவது அர்ஜெண்டினா அணியை மெஸ்ஸி கோப்பை வெல்ல வைப்பார் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கையில் தனது முதல் போட்டியிலேயே தோல்வி அடைந்துள்ளது. சர்வதேச தொடரில் மெஸ்ஸியின் சோகம் இன்னும் தொடர்கதையாகி வருகிறது. மெஸ்ஸியை அளவுக்கு மீறி அர்ஜெண்டினா அணி நம்புவதாலும் இந்த தோல்வி ஏற்பட்டுள்ளதாக சிலர் கூறுகின்றனர்.