பராகுவே அணிக்கு எதிரான போட்டியில் டிரா செய்ததன் மூலம் கோப்பா அமெரிக்கா தொடரின் நாக் அவுட் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்து கொண்டுள்ளது அர்ஜெண்டினா. தோல்வியின் விளிம்பில் இருந்த அர்ஜெண்டினா மெஸ்ஸியின் கோலால் 1-1 என டிரா செய்தது. முதல் போட்டியில் ஏற்கனவே கொலம்பியா அணியிடம் தோல்வியடைந்திருந்ததால் இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால் தொடரை விட்டு வெளியேறும் நிலை இருந்தது.
இந்தப் போட்டியில் நான்கு மாற்றங்களோடு களம் இறங்கியது அர்ஜெண்டினா. செர்ஜியோ ஆகுவேரா மற்றும் டீ மரியாவிற்குப் பதிலாக மார்டினெஸ் மற்றும் ரோட்ரிகோ டீ பவுல் களம் இறங்கினர். மேலும் ராபர்டோ பெரேய்ரா மற்றும் மில்டன் காஸ்கோவும் களம் கண்டனர். இந்த மாற்றங்கள் அர்ஜெண்டினாவிற்கு நல்ல பலனை கொடுக்கும் என பயிற்சியாளர் ஸ்கலோனி நினைத்த வேளையில், ஒரு கோல் அடிக்க கூட மிகவும் திணறினர் அர்ஜெண்டினா வீரர்கள்.
வலதுபுற பிளாக்கில் விளையாடிய மெஸ்ஸிக்கு, லோ செல்சோ, லியான்றோ பர்டேஸ் மிட் ஃபீல்டில் உதவி புரிந்தனர். பராகுவே அணியில் 25 வயதான மிகெல் அல்மிரன் போட்டி முழுவதும் மிக அற்புதமாக விளையாடினார். இடதுபுற பிளாங்கில் இருந்து பல வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்ததோடு, இரண்டாம் பாதியில் மெஸ்ஸியிடமிருந்து லாவகமாக பந்தை கைப்பற்றி தன் அணியினருக்கு இவர் பாஸ் செய்தது அருமையாக இருந்தது.
போட்டியின் தொடக்கத்திலிருந்தே வெற்றியை மனதில் வைத்தே விளையாடியது அர்ஜெண்டினா. ஆனால் பரகுவே அணியின் ஒருமித்த தடுப்பாட்டத்தால் கோல் அடிக்க தினறியது. கோலை எதிர்பார்த்து அர்ஜெண்டினா வீரர்கள் விளையாடி கொண்டிருக்கையில், யாரும் எதிர்பாராவிதமாக 37-வது நிமிடத்தில் கோல் அடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது பராகுவே. மிகெல் அல்மிரான் க்ராஸ் செய்த பந்தை அற்புதமாக கோலாகினார் ரிச்சர்ட் சான்செஸ்.
களத்தில் சிறப்பாக விளையாடிய போதும் மெஸ்ஸி கோல் அடிக்கும் வரை தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் தோல்வி அடையும் நிலையில் தான் இருந்தது அர்ஜெண்டினா. 57-வது நிமிடத்தில் கோல் அடித்து போட்டியை சமநிலை படுத்தினார் மெஸ்ஸி. அடுத்த சில நிமிடங்களிலேயே மற்றொரு கோல் அடிக்கும் பொன்னான வாய்ப்பை தவறவிட்டது பராகுவே. ஆம், கிடைத்த பெனால்டியை தவறவிட்டார் பராகுவே வீரர் டெர்லிஸ் கொன்சாலெஸ்.
முதல் பாதியில் எந்த கோலும் அடிக்காததால் இரண்டாம் பாதியில் செர்ஜியோ ஆகுவேராவை களம் இறக்கினார் பயிற்சியாளர் ஸ்கலோனி. கொலம்பியாவிற்கு எதிராக தடுமாறிய ஆகுவேரா, நேற்றைய போட்டியில் தனது பங்களிப்பை சிறப்பாக வழங்கினார். இவரால் தான் அர்ஜெண்டினாவிற்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை கோலாக மாற்றினார் மெஸ்ஸி. அர்ஜெண்டினா டிரா ஆனதற்கு அந்த அணியின் கோல்கீப்பர் அர்மானி பெரிதும் உதவியாக இருந்தார். பெனால்டி பகுதியை தாண்டிச் சென்று டெர்லிஸ் கொன்சாலஸை ஃபவுல் செய்த காரணத்தால் இவருக்கு நடுவர் சிவப்பு அட்டை வழங்குவார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் நடுவர் எச்சரிக்கை மட்டும் விடுத்து அவரை தொடர்ந்து விளையாட அனுமதித்தார். அதன்பிறகு உத்வேகம் அடைந்த அர்மானி, அற்புதமான ஒரு பெனால்டி கோலை தடுத்து அர்ஜெண்டினா அணியை காப்பாற்றியுள்ளார். அதிர்ஷ்ட காத்து நேற்று அர்மானியின் பக்கம் வீசியதால் மயிரிழையில் தோல்வியிலிருந்து தப்பியது அர்ஜெண்டினா.
இரண்டு போட்டிகளில் விளையாடி வெறும் ஒரு புள்ளி மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது அர்ஜெண்டினா, அடுத்த போட்டியில் ஆசிய சாம்பியனான கத்தார் அணியை சந்திக்க உள்ளது. கடைசிப் போட்டியான இதில் அர்ஜெண்டினா வெற்றி பெற்றால் நாக் அவுட் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு பிராகாசமாகும்.