ஒரு வழியாக சாம்பியன்ஸ் லீக் கோப்பை நிறைவு பெற்றுவிட்டது. ஒரு புள்ளியில் ப்ரீமியர் லீக் கோப்பையை தவறவிட்ட ஆத்திரத்தில் இருந்த லிவர்பூல், 2-0 என்ற கோல் கணக்கில் டோட்டஹம் ஹாட்ஸ்பர் அணியை வென்று பழி தீர்த்து கொண்டது. இந்த வெற்றியின் மூலம் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை ஆறாவது முறையாக வென்றது லிவர்பூல்.
பலோன் டி ஆர் விருதை யார் பெறுவார்கள் என்பது பொதுவாக சாம்பியன்ஸ் லீக் முடிவை வைத்தே கணிக்கப்படும். ஏனென்றால், கடைசி ஆறு வருடங்களாக இந்த விருதை பெற்ற வீரரின் அணியே அந்த சீசனில் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றுள்ளது.
இதை மனதில் வைத்து, இந்த ஆண்டு பலோன் டி ஆர் விருதை வெல்ல வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் பர்றி இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
3. சடியோ மனே
கடந்த சீசன் முழுவதும் முஹமது சாலாவின் சிறப்பான ஆட்டத்தால், சடியோ மனேவிற்கு கிடைக்க வேண்டிய பாராட்டுகள் ஒழுங்காக கிடைக்கவில்லை. ஆனால், இந்த சீசனில் சாலாவின் ஆட்டம் சீரற்று உள்ள நிலையில், அதை தனக்கான வாய்ப்பாக அழகாக பயன்படுத்திக் கொண்டார் மனே.
இந்த சீசனில் 22 கோல்களை அடித்துள்ள மனே, சிறந்த வீரருக்கான தங்க காலனி விருதை முஹமது சாலா மற்றும் ப்யேரே எமரிக் அவுபாமியாங்கோடு பகிர்ந்து கொண்டார். மேலும் சாம்பியன்ஸ் லீக் கோப்பையிலும் சிறப்பாக செயல்பட்டு நான்கு கோல்கள் அடித்து அணிக்கு வெற்றி தேடி தந்துள்ளார்.
ஆஃப்ரிக்காவைச் சேர்ந்த வீரர் ஒருவர் பலோன் டி ஆர் விருதை பெறுவது இதுவரை ஒரு முறை தான் நடந்துள்ளது. 1995-ம் ஆண்டு இந்த விருதை ஜார்ஜ் வியா என்ற வீரர் பெற்றார். அதன் பிறகு இந்த விருதை வெல்லப் போகும் ஆஃப்ரிக்க வீரர் என்ற பெருமையை சடியோ மனே பெறுவாரா?
2. லியோனல் மெஸ்ஸி
இதுவரை ஐந்து முறை பலோன் டி ஆர் விருதை வென்றுள்ள மெஸ்ஸி, இந்தப் பட்டியலில் இல்லை என்றால் தான் ஆச்சர்யப்பட வேண்டும். இந்த வருடமும் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் பார்சிலோனா அணி லா லீகா கோப்பையை வெல்ல உதவியுள்ளார். இந்த சீசனில் 36 கோல்களை அடித்து தொடர்ந்து மூன்றாவது முறையாக ஐரோப்பியன் தங்க காலனி விருதை வென்றுள்ளார். மேலும், லீக்கில் அதிகபட்சமாக 13 முறை சக வீரர் கோல் அடிக்க உதவியுள்ளார்.
சாம்பியன்ஸ் லீக் கோப்பையில் அரையிறுதியில் லிவர்பூல் அணியிடம் பார்சிலோனா தோல்வியுற்றாலும், இந்த தொடரில் 10 போட்டிகளில் 12 கோல்கள் அடித்து முன்னிலையில் இருக்கிறார் மெஸ்ஸி. ஆகவே ஆறாவது முறையாக மெஸ்ஸி பலோன் டி ஆர் விருது வெல்ல அதிக வாய்ப்புள்ளது.
1. விர்ஜில் வான் டிஜிக்
2018-ம் ஆண்டு சவுதாம்டன் அணியிலிருந்து லிவர்பூல் வந்த பிறகு விர்ஜில் வான் டிஜிக்கின் ஆட்டம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த வருட ப்ரீமியர் லீக்கில் லிவர்பூல் அணிக்காக அனைத்து போட்டிகளிலும் விளையாடிய டிஜிக், மோசமான தடுப்பாட்டம் கொண்ட அணியாக இருந்த லிவர்பூலை ஐரோப்பாவின் சிறந்த அணியாக தனியொருவராக உருமாற்றியுள்ளார்.
ஒவ்வொரு போட்டிக்கும் சராசரியாக 1 டேக்கிள், 5.2 கிளீயரன்ஸ் என சிறப்பாக விளையாடி இந்த சீசனுக்கான PFA விருதை வென்றுள்ளார். மேலும் லிவர்பூல் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றதற்கு விர்ஜில் டிஜிக்கின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. எனவே, மற்ற இருவர்களை விட இவருக்கே பலோன் டி ஆர் விருது வெல்ல அதிக வாய்ப்புள்ளது.