லயோன் அணியை பதம் பார்த்த பார்சிலோனா, மெஸ்ஸியின் அதிரடியால் காலிறுதிக்குள் நுழைந்தது.

பார்சிலோனா மற்றும் லயோனைஸ் அணிக்கு இடையேயான போட்டியின் ஒரு காட்சி
பார்சிலோனா மற்றும் லயோனைஸ் அணிக்கு இடையேயான போட்டியின் ஒரு காட்சி

ஐரோப்பாவில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் தொடரின் ரவுண்டு 16 போட்டியில் பார்சிலோனா அணியும் ஒலிம்பிக் லயோனைஸ் அணியும் மோதின. இந்த போட்டியானது பார்சிலோனாவின் சொந்த மைதானத்தில் நடந்தது. இதற்க்கு முன் நடந்த முதல் லெக் போட்டி யாருக்கும் வெற்றி தோல்வியின்றி ட்ராவில் முடிந்தது.

முதல் லெக் போட்டி ஒரு பார்வை:

முதல் லெக் போட்டியானது பிரான்ஸைச் சேர்ந்த லயோன் அணிக்குச் சொந்தமான ஆடுகளத்தில் நடந்தது. இந்த போட்டியில் லயோன் அணியின் தடுப்பாட்டம் மெஸ்ஸி படையினரை கோல் போட விடாமல் தொல்லை தந்தது. அவர்களது மதில்சுவரை பார்சிலோனா அணியால் கடைசி வரை உடைக்க முடியவில்லை. இதனால் ஆட்டம் யாருக்கும் கோல் இன்றி சமனில் முடிந்தது. இந்த போட்டியால் பார்சிலோனா அணி மிகவும் விமர்சனத்திற்குள்ளானது. இதை களைய, சிறந்த பயிற்சி மற்றும் உத்வேகத்துடன் தனது சொந்த மைதானத்தில் களம்கண்டது பார்சிலோனா. மறுபுறம் லயோன் அணியோ இந்தமுறையும் ட்ரா செய்தாலே போதும் பெனால்டி மூலம் வெற்றியை நிர்ணயித்து கொள்ளலாம் என களம்கண்டது.

பார்சிலோனா அணியின் வியூகம்: 4-3-3

ஒலிம்பிக் லயோனைஸ் அணியின் வியூகம்: 3-4-1-2

இரண்டாவது லெக் போட்டி:

ஆட்டம் தொடங்கிய முதலே பார்சிலோனாவின் அதிரடி ஆட்டத்தை கண்டு அலறியது லயோன் அணி. அந்த அணி பந்தை தொடுவதே பெரிய பாடாய் இருந்தது. ஆட்டத்தின் 17' வது நிமிடத்தில், பார்சிலோனா அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிட்டியது இதனை பயன்படுத்தி மெஸ்ஸி அபாரமாக ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் பார்சிலோனா அணி முன்னிலை வகித்தது. பிறகு 38;வது நிமிடத்தில் லயோன் அணியின் கோல் கீப்பரை சுற்றி வளைத்தனர் பார்சிலோனா அணியினர். கோடின்ஹோ பந்தை லாவகமாக தட்டிவிட அதை அசத்தலாக கோலாக மாற்றினார் அந்தோணி சவ்ரெஸ்.

முதல் பாதிவரை பார்சிலோனா அணியின் ஆதிக்கம் தான் நிலைத்திருந்தது. இதனால் ஸ்கோர் 2-0 என பிரதிபலித்தது.

இரண்டாவது பாதியில் பார்சிலோனா அணி தனது வழக்கமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. இதனை பயன்படுத்தி கொண்ட லயோன் அணி 58'வது நிமிடத்தில் டௌசர்ட் தந்து அணிக்கான கோலை அடித்தார். 2-1 ஒன்று என்ற நிலையில் ஆட்டம் கடைசி நிமிடங்களை நோக்கிச் சென்றது.

78'வது நிமிடத்தில் மெஸ்ஸி மீண்டும் தொல்லை தர ஆரமித்தார். இவர் லயோன் அணியின் தடுப்பு வீரர்களை தாண்டி அசால்ட்டாக கோல் அடித்தார். பிறகு வரிசையாக பார்சிலோனா வீரர்கள் பிகு மற்றும் டெம்பெலே முறையே 81' மற்றும் 86'வது நிமிடங்களில் கோல் போட்டு லயோன் அணியை வீட்டுக்கு அனுப்பினர்.

கோல் போட்ட பூரிப்பில் மெஸ்ஸி
கோல் போட்ட பூரிப்பில் மெஸ்ஸி

இறுதியில் மொத்தமாக 5-1 என்ற கோல் கணக்கில் லயோன் அணியை தோற்கடித்து பார்சிலோனா அணி காலிறுதிக்குள் நுழைந்தது. இதன்மூலம் சாம்பியன்ஸ் லீக் தொடரில் தனது ஆதிக்கத்தை தொடர்கிறது. இந்த முறை பரம எதிரியான ரியல் மாட்ரிட் வெளியேறியதால், தற்போதைய ரொனால்டோ அணியான ஜுவென்டஸ் அணி மட்டுமே பார்சிலோனாவிற்கு சிறிது தொல்லை தரலாம். பொறுத்திருந்து பார்ப்போம் காலிறுதியில் என்ன நடக்கப்போகிறதென்று.

சில துளிகள்:

பந்தை கையாண்ட விபரம்: பார்சிலோனா- 55%, லயோன்- 45%.

கோல் போட முயற்சித்தது: பார்சிலோனா 19 ஷாட்கள், லயோன் 11 ஷாட்கள்.

மஞ்சள் அட்டை வாங்கியது: பார்சிலோனா 1, லயோன் 2.